புதன், 20 நவம்பர், 2013

சேரனும்..டூரிங் டாக்கீஸூம்!!

 னந்தவிகடனில் தொடராய் வெளிவந்து பெரும் வரவேற்பு பெற்ற இயக்குனர் சேரனின் 'டூரிங் டாக்கீஸ்' புத்தகத்தை சமீபத்தில் வாசிக்க கிடைத்தது.மிகப்பெரிய இலக்கியமோ,அல்லது இப்போது சிலர் வலுகட்டாயமாக தங்கள் எழுத்துகளில் திணிக்கும் பின்நவீனத்துவம்,முன்நவீனத்துவம்(!) போன்ற எந்த குறியீடுகளும் இல்லாமல்,தான் எப்படி எளிய மனிதனாய் இருக்கிறாரோ..அதே போலானதொரு எளிய மொழியில் தான் கடந்து வந்த பாதையை பற்றி பேசுகிறார்.அந்த எளிமையால் தானோ என்னவோ,பக்கத்துக்கு பக்கம் உணர்ச்சிக்குவியல்களாய் நிறைந்து கிடக்கிறது புத்தகம் முழுதும்!


மதுரைக்கு பக்கத்தில் பனையூர்பட்டி என்ற குக்கிராமத்தில் தொடங்கிய சினிமா மீதான கனவு..எப்படி தலைநகர் வரை சிறகுவிரித்து பறந்தது என்பதை சுவாரஸ்யமாய் சொல்லி செல்கிறார்.ஒரு இலக்கை அடைந்ததும்,அந்த வெற்றி மட்டுமே எல்லோராலும் பெரிதாய் கவனிக்கப்படும்.ஆனால் அந்த வெற்றிக்கு பின்னாலிருக்கும் முகத்தில்அறையும்நிஜமும்,அதுதரும் வலியும் யாரும் அறியாதவை!அந்த வலிகளை எல்லாம் உரமாக்கி,வெட்டவெட்ட மீண்டும் வீரியமாய் முளைத்தெழுபவர்களாலயே சாதிக்க முடிகிறது.அப்படியானதொரு வெற்றியும்..அதற்கு பின்னாலிருக்கும் வலிகளையும் பற்றியுமே அதிகம் பேசுகிறது இந்த புத்தகம்.

பனையூர்பட்டி கிராமத்தில் சிறுவனாய் சுற்றி திரிந்த பால்யமாகட்டும்..படிக்கிற வயதில் கண்கள்முழுக்க சினிமா ஆசைகளோடு,புத்தகமூட்டைக்கு பதிலாய் கனவு மூட்டையை சுமந்து திரிந்ததாகட்டும் ஒவ்வொன்றும் அப்படியே காட்சியாய் கண்முன்னே நிழலாடுகிறது.சேரனின் படங்களில் வரும் கதை மாந்தர்களாய் நாம் பார்த்த  பலரும்..அவரின் வாழ்க்கையில் உண்மையில் வாழ்ந்த நபர்களாகவே இருக்கிறார்கள்.

சேரனை பற்றி இந்தபுத்தகத்தின் மூலம் தெரிந்து கொண்டதை விட அவரின் குடும்பமான அம்மா கமலா டீச்சர்,எம்.ஜி.யார் ரசிகரும் தியேட்டர் ஆப்பரேட்டருமான அப்பா பாண்டியன்..உழைப்பையும் வைராக்கியத்தையும் தவற வேறேதும்தெரியாத அவரின் பாட்டி தெய்வானை ஆகியோரை பற்றி தெரிந்து கொண்டது அதிகம்.யோசித்துபார்த்தால்,இதுபோன்ற உறவுகள் தந்த பலத்தால்தான்..எத்தனைமுறை விழுந்தாலும் அத்தனைமுறையும்,முன்பைவிட அதிகவீரியத்தோடு எழுகின்ற சக்தி அவருக்கு கிடைத்திருக்கவேண்டும்.அதேபோல் நல்லவாழ்க்கை கிடைத்ததும்..அம்மா அப்பாவை தாஜ்மகாலுக்கு அழைத்துபோய் சந்தோசப்படுத்தியாதாகட்டும்..ஆட்டோகிராப் படத்திற்கான தேசிய விருதை,அப்துல் கலாம் அவர்கள் கையால் தன் தந்தையை பெறவைத்து,அவரை திக்குமுக்காட வைத்ததாகட்டும்...சேரன் உண்மையிலேயே பிரமிப்பு தான்!!

வாழ்க்கையை பற்றிய நிஜங்களுக்கும் பஞ்சமில்லை இதில்..ஒரு இடத்தில் சொல்கிறார்,"எந்த மனிதர்கள் நாம் கஷ்டப்படும்போது,ச்சே பாவம்யா ரொம்ப சிரமப்படுறான்..நல்லா வந்துரனும் என சொல்கிறார்களோ..அவர்களே நாம் கொஞ்சம் ஜெயிச்சதும்,பார்றா இவனுக்கு வந்த யோகத்தை என்பார்கள்" இதுதான் உலகம் என்கிறார்.எத்தனை நிதர்சனம்!!அனுபவத்தை தவிர வேறு யாரால் வாழ்கையை இப்படி அணுஅணுவாய் கற்றுதந்துவிட முடியும்?!

சினிமா எனும் கனவுதேசத்தில் தங்கள் கனவும் நினைவாகிவிடாதா? என ஏங்கிதிரியும் லட்சகணக்கான மனிதர்களுக்கு இந்த புத்தகம் ஒரு தன்னம்பிக்கை டானிக்!வெற்றி பெறுவது மட்டும் போராட்டமல்ல,அதை தக்கவைத்து கொள்வதும்,அந்த வெற்றியை தலைக்கு ஏற்றிவிடாது வாழ பழகுவதும் ஒரு போராட்டமே என்பதுதான் டூரிங் டாக்கீஸின் மொத்த அனுபவமும்!!இயக்குனராய் பாதித்ததைவிட,எழுத்தாளராய் சேரன் நிரம்பவே பாதித்துவிட்டார்.
இந்த புத்தகம் வாசிக்க கிடைத்தால் கண்டிப்பாக மிஸ் செய்து விடாதீர்கள்!

வியாழன், 14 நவம்பர், 2013

தேங்க்யூ சச்சின்!!

 எல்லாவற்றிற்கும் நன்றி சச்சின்!இந்தபதிவை இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டும்...அல்லது இப்படித்தான் ஆரம்பிக்க முடியும்!ஏனெனில் எனக்கு சச்சின் என்ற மனிதனை பற்றி தெரிய ஆரம்பித்த பின்னர்தான் கிரிக்கெட் என்ற விளையாட்டே தெரிய ஆரம்பித்தது!அந்த சாதனையாளனை பற்றி எல்லோரும் எல்லாமும் சொல்லியாகிவிட்டது..ஆனாலும்பதினாறு வருடங்களுக்கும் மேலாக தனது மட்டையால் எத்தனை நெஞ்சு படபடக்கும் தருணங்கள்,எத்தனை சோகம்,எத்தனை சந்தோசம்,எவ்வளவு பெருமிதம்..இத்தனையும் எனக்கு தந்த அந்த மனிதனுக்கு,இந்த எழுத்துகளை தவிர,வேறெதை பரிசாக தந்துவிட முடியும்?!


இந்த பதிவை எழுத எத்தனிக்கையில் சச்சின் தனது 200வது போட்டிக்காக களம் இறங்கிகொண்டிருக்கிறார்..அரங்கமேஅதிர்கிறது கரகோஷத்தால்!கிரிகெட்டை பற்றி அறியாத ஊரிலிருந்து யாரேனும் இதை பார்த்தால் ஒரு தனிமனிதனுக்கு எதற்கு இத்தனை பாராட்டுகள்,அவர் ஒய்வுக்கு ஏன் இத்தனை ரசிகர்கள் கண் கலங்குகின்றனர் என தோன்றக்கூடும்..இவை எல்லாவற்றிற்குமான விடை இன்றைய போட்டியிலேயே இருந்தது. எத்தனை கரகோஷம் ஒலித்தாலும்,இது அவருக்கு 200வது டெஸ்ட் மேட்ச் என்றாலும் முதல் போட்டிக்கு களமிறங்கிய போதிருந்த அதே ஆர்வத்துடனும்,ஈடுபாட்டுடனும் களமிறங்குகிறார்..அதுதான் சச்சின்..அதற்காக தான் இத்தனை கோடி ரசிகர்களும் அவரை கொண்டாடுகின்றனர்!



இங்கு சச்சினின் சாதனைகளையோ,அல்லது அதன் புள்ளி விவரங்களையோ பற்றியோ பேசப்போவதில்லை.ஒருவேளை அதைபற்றி பேச ஆரம்பித்தால் அதற்கு இந்த ஒரு பதிவல்ல இன்னும் எத்தனை பதிவுகள் எழுதினாலும் போதாதுஎன்பதுதான் உண்மை.! 90களின் மத்தியில் வளர்ந்த குழந்தைகளுக்கு சச்சின்ஒரு ஆதர்ச நாயகன்.அவரைப்போல நாமும் வரவேண்டும் என்று எண்ணாத சிறுவர்களே இருக்கமுடியாது..அந்த அளவுக்கு சச்சின் குழந்தைகளின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தார்.

இப்போது இந்திய அணியின் பேட்டிங் வரிசை தவான்,ரோஹித் சர்மா,வீராட்,தோனி என மிக வலுவானது.ஆனால் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் சச்சின் களத்தில் நிற்கும் வரையே இந்தியாவின் பேட்டிங் பலம் நிலைத்திருக்கும்.அவர் அவுட்டானதும் 'இன்னைக்கு மேட்ச் அவ்ளோதாம்பா' என டிவியை அணைத்துவிடுவது வழக்கம்.! 28ஆண்டுகால தவத்திற்கு பின் இந்தியா இரடண்டாவது முறையாய் உலககோப்பையை வென்றபின்,வெற்றி கொண்டாட்டத்தின் போது,இளம் வீரர்கள் சச்சினை தோலில் ஏற்றி மைதானத்தை வலம்வந்தனர்.அப்போது அவர்கள் சொல்லியது இதைத்தான்,'இத்தனை ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டை சச்சின் தனியாளாக தோலில் சுமந்தார்..இன்று நாங்கள் அவரை சுமக்கிறோம்' என்றனர்!சத்திய வார்த்தைகள்..


இனி சச்சினை மைதனாத்தில் மட்டையோடு,கிரிக்கெட் உடை சகிதம் பார்க்க முடியாது.தனித்தன்மையான அவரின் "ஷாட்'டுகளும் இனி காணக்கிடைக்காது.சகித்துக்கொள்ள முடியாத உண்மை தான்!ஆனாலும்,உன்னை நினைத்து பெருமைகொள்வதற்கு ஆயிரமாயிரம் தருணங்கள் இருக்கிறது எங்களிடம்.தன்னம்பிக்கை என்றால் என்ன? எழுவது வெற்றியல்ல..விழுந்தபின் முன்னைவிட அதிக உத்வேகத்துடனும்,உறுதியுடனும் எழுவதே வெற்றி என்று அடுத்த தலைமுறைக்கு வாழ்ந்து காண்பித்துவிட்டு செல்கிறாய்! சக தோழனை வழியனுப்புவது போலொரு தருணம்..கலங்கிய கண்களோடு வழியனுப்புகிறோம்..சென்றுவா சச்சின்...
தேங்க் யூ சச்சின் ஃபார் ஆல்!!!

செவ்வாய், 12 நவம்பர், 2013

இன்னும் ஓர் இரவு..!

 உங்களிடம் ஒரு முக்கியமான விசயத்தை பற்றிப்பேசவேண்டும்!அதைப்பற்றிபேச இதுதான் சரியான தருணம்.
ஏனென்றால்,நாளை...எனக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்!ஆனால்..இதையெல்லாம் ஏன் உங்களிடம் சொல்லவேண்டும் என்றுதான் புரியவில்லை.
இதை உங்களிடம் சொல்வதால் என்ன ஆகிவிடப்போகிறது என்றும் தெரியவில்லை.ஆனால் யாரிடமாவது சொன்னால் தான் மனதிற்கு கொஞ்சமேனும் நிம்மதி கிடைக்கும் என்பதுபோல் தோன்றுகிறது.
அதனால் கொஞ்சம் நேரம் ஒதுக்கி,என் பிரச்சனையை கேளுங்களேன்..அடிக்கடி எனக்கு ஒரு கனவு வருகிறது.
“ப்ச்..மனிதனுக்கு தூக்கம் வருவது இயல்பு..தூக்கம் வந்தால் கூடவே கனவு வருவதும் இயல்புதான்..இதில் என்ன பெரிதாய் சொல்வதற்கும்,கேட்பதற்கும் இருக்கிறது?” என சலித்து கொள்கிறீர்களா?!நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையாய் கேளுங்கள்.
கனவுதான்..ஆனால் இதுவேறு மாதிரி!!கிட்டத்தட்ட பனிரெண்டு வருடங்களாய் அந்தக்கனவு வந்து கொண்டிருக்கிறது..நேற்று இரவு வரையிலும்..!
எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது..முதல்முறை அந்தகனவு வந்தது,நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது..பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிந்து விடுமுறை நாட்கள் அவை.
ராமருக்கு பதினான்கு வருடங்கள் வனவாசம் என்றால் அந்த பதினான்கு வருட வனவாசத்தையும் ஒரே வருடத்தில் அனுபவிப்பதுதான் இந்த பனிரெண்டாம் வகுப்பு.நோ டி.வி,நோ கிரிக்கெட், நோ ஃப்ரெண்ட்ஸ்..இப்படி எக்கசக்க ‘நோ நோ’க்கள்..!
ஒருவழியாய் பொதுத்தேர்வுகள் எழுதி முடித்தபின்தான் கொஞ்சம் நிம்மதியாய் சுவாசிக்கவே முடிந்தது!காலையில் பொறுமையாய் எழுவது..கொஞ்சநேரம் டி.வி,அப்புறம் நண்பர்களுடன் அரட்டை..மதியம் சாப்பாடு,அதன்பின் கிரிக்கெட் ஆட கிரவுண்டுக்கு சென்றால்,சூரியன் டுயுட்டி முடித்து மறையும் வரை விளையாட்டுதான்.!
அந்த நாற்பது நாட்களும் சொர்க்கமாய் கழிந்தன.ஆனால் நமக்குதான் நல்ல விசயங்கள் எதுவும் நீண்டநாள் நிலைக்காதே!
நாளிதழ்களில் இன்னும் இரண்டுநாட்களில் தேர்வுமுடிவுகள் வரப்போவதாய் செய்திவந்தது.அதைப்பார்த்த நொடியிலிருந்து தொண்டைக்கும் வயிற்றிற்கும் இடையே உருண்டை உருள தொடங்கியிருந்தது.!

இந்த தேர்வுகளை பொறுத்தவரை,நன்றாக படிப்பவர்களுக்கு எந்த கவலையும் இல்லை.அவர்களுக்கு தெரியும்..நிச்சயம் மாவட்டத்திலோ,பள்ளியிலோ குறைந்தப்பட்சம் வகுப்பிலேயோ முதல் சில இடங்களை பிடித்து விடுவார்கள் என!
அதேபோல் இந்த, ‘எதற்கும் டோன்ட் கேர்’ மாணவர்களுக்கும் தங்களது தேர்வுமுடிவு எப்படி இருக்குமென்பது முன்கூட்டியே தெரியும்.
அவர்களது கவலையெல்லாம் தேர்வுமுடிவுக்கு பின் எந்த டுடோரியலில் சேரவேண்டும்,அல்லது எங்கு சேர்ந்தால் கட்டணம் குறைவாய் இருக்கும்?என்பதைப்பற்றியதாய் தான் இருக்கும்.இதில் பிரச்சனையெல்லாம் சுமாராய் படிக்கும் என்னைபோன்றவர்களுக்குத்தான்..நிச்சயம் ஃபெயில் ஆகமாட்டோம் என்பது தெரியும் என்றாலும் எவ்வளவு மார்க் வரும்?என்பது கேள்விக்குறிக்கெல்லாம் பெரிய கேள்விக்குறி.

இதில் அப்பா வேறு அடிக்கடி,”ஆயிரத்துக்கு மேல மார்க் வாங்கிடுவில்ல?..உன்னைய நம்பி,நான்வேற எல்லார்க்கிட்டயும்..பையன் ஆயிரத்துக்கு மேல வாங்கிடுவான்.எந்த எஞ்சினியரிங் காலேஜ்ல சேக்காலாம்னு பெருமையா கேட்டுகிட்ருக்கேன்.மானத்தை வாங்கிடாதே!”என்கிறார்.
அவர் கவலை அவருக்கு..எனக்கோ, முதலில் நாம் ஆயிரம்மார்க்குக்கு எழுதியிருக்கிறோமா?அப்படியே எழுதியிருந்தாலும் திருத்துபவர் சரியாய் திருத்துவாரா? அல்லது அவர்வீட்டில் போட்ட சண்டைகளின் எதிர்வினையை என் பேப்பரில் காட்டிவிடுவார?என்றெல்லாம் கவலை.
இப்படியாக ஏதேதோ யோசித்தவாறே அந்த இரண்டுநாட்களும் கழிந்தது.காலை விடிந்ததும் ரிசல்ட் பதட்டம் தொற்றிக்கொள்ளும்..இப்போது தூக்கம் வரவில்லை..ஆனால் தூங்காமலிருப்பதால் மார்க் ஏதும் கூடுவதற்கு வாய்ப்பில்லை என்று உள்மனம் பகடி செய்யவே,தூங்கலாம் என முடிவுசெய்து படுத்துவிட்டேன்.

அன்றுதான் முதன்முதலில் 'அந்த கனவு' வந்தது.
யாரோ என் அறையின் கதவை தட்டுகிறார்கள்..கொஞ்சநேரம் அமைதி..
மீண்டும் அதே ‘தட்,தட்’ என கதவு தட்டப்படும் சத்தம்.
பின் கதவை திறந்த்துக்கொண்டு ஏதோ ஒரு உருவம் உள்ளே நுழைந்தது..முகம் தெளிவாய் தெரியவில்லை..ஆனால் அது ஒரு பெண் உருவம்..என்னருகே வந்து,பேச ஆரம்பித்தது.
“என்ன?,நாளைக்கு ரிசல்ட்டை நினைச்சு பயந்துகிட்ருக்கியா?!”என்றது.
“ஆ..மாம்..அதிருக்கட்டும்..முதல்ல நீ யார்னு சொல்லு..என் ரூமுக்குள்ள என்ன பண்ணிகிட்ருக்க?” என்றேன்.
“நானா?நான்…உன்னோட நலம்விரும்பி,உனக்கு நல்லதுசெய்ய வந்துருக்கேன்..இந்த கதைகளிலெல்லாம்
வருமே..என்னதது?? ம்ம்!தேவதைகள்..அதுமாதிரி நான் ஒரு தேவதைன்னு நினைச்சிக்கோ!”
நான்,"அதெல்லாம் சரி..இப்போ எதுக்கு வந்திருக்கே?"
“அதான் சொன்னனே,உனக்கு ஒரு நல்லசெய்தி சொல்லன்னு.!நாளைக்கு வரப்போற ரிசல்ட்டுல நீ ஆயிரம் மார்க் எடுக்கமாட்டே!!"
“அய்யயோ!இதுதான் நல்லசெய்தியா?”என்றேன்,கொஞ்சம் பதட்டமும்,கோபமுமாய்.
"பயப்படாதே..ஆயிரத்துக்கு கொஞ்சம் கம்மியா தொள்ளாயிரத்து என்பது மார்க் எடுப்பே..உங்க அப்பா ஆசைப்பட்ட மாதிரியே எஞ்சினியரிங் காலேஜ்ல சீட் கிடைச்சிரும்"என்றது.
“நெசமாத்தான் சொல்றியா?”என கேட்க எத்தனிப்பதற்குள்ளாக அலாரம் அடிக்க.தூக்கம் களைந்தவனாய் வாரி சுருட்டி எழுந்துவிட்டேன்.

கனவில் நடந்ததையெல்லாம் நினைத்து பார்க்க..பார்க்க ஒரே குழப்பம்.பொழுதும் விடிந்துவிட்டது. சிலபல மணிநேர காத்திருப்புகளுக்குப்பின் ரிசல்ட்டை பார்த்த எனக்கு அதிர்ச்சியும்,ஆச்சர்யமும் சேர்ந்தே கிடைத்தது.
கனவில் அந்த பெண்(?!) சொன்னதுபோலவே தொள்ளாயிரத்து என்பது மதிப்பெண்கள் எடுத்திருந்தேன்.மார்க் குறைந்தது கொஞ்சம் வருத்தமாய் இருந்தாலும்,இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதால் என்னைநானே தேற்றிக்கொண்டேன்.நல்லவேளை அப்பாவும் அதிகம் திட்டவில்லை..பின் ஒரு நல்ல எஞ்சினியரிங் காலேஜில் இடமும் கிடைத்தது.
அதன்பின் அந்த கனவைப்பற்றி மறந்தே போயிருந்தேன்..அதைப்பற்றி யாரிடமும் சொல்லிக்கொள்ளவும் இல்லை.ஏனெனில் என்னாலேயே அதை முழுமையாய் நம்பமுடியவில்லை.

ஆனால் அதெல்லாம் அந்த சம்பவம் நடக்கும்வரை தான்..
கல்லூரியில் சேர்ந்தஉடனேயே என்வகுப்பில் படிக்கும் ரம்யா என்ற பெண்ணை காதலிக்க ஆரம்பித்திருந்தேன்.!ரம்யா எந்தவித அலட்டலுமில்லாத அழகுப்பெண்.அதென்னவோ தெரியவில்லை..நாம் பார்க்கும் பெண்களைத்தான் மற்றவர்களும் பார்ப்பார்கள்.அதே நிலைதான் ரம்யா விசயத்திலும்..எனக்கு தெரிந்தே ரம்யாவை நான்கு பேர் காதலித்தனர்.என் சீனியர்கள் உட்பட..!ஆனால் ரம்யாவின் கடைக்கண் பார்வைப்படும் பாக்கியம் யாருக்கும் கிடைத்தபாடில்லை.
என் காதலை சொன்னால் ஏற்றுகொள்வாளா..மாட்டாளா? எனக்குழம்பி தவித்த நாட்கள் அவை.

அப்போதுதான்,ஒரு இரவில் மீண்டும் அதே கனவு வந்தது.அதே கதவைதட்டும் சத்தம்..அதே பெண்முகம்.சென்றமுறைப் போலவே இப்போதும், அவளே பேசினாள்.
"நாளை காலை ரம்யாவிடம் உன் காதலைச்சொல்.அவள் ஏற்றுக்கொள்வாள்" என சொல்ல..கனவுக்கலைந்து விழித்துக்கொண்டேன்.
ரம்யாவிடம் இதைப்பற்றி பேசுவதற்கு தயக்கமாய் இருந்தாலும்,அந்த கனவை பரிசோதித்து பார்த்து விடவேண்டும் என்ற ஆவல் மேலோங்கவே,ரம்யாவிடம் மறுநாள் கொஞ்சம் பயத்தோடு என் காதலை சொன்னேன்.எந்த அதிசயத்தையும் எளிதில் நம்பமுடிவதில்லை..நமக்கு நடக்கும் வரையிலும்!ஆம்,ரம்யாவும் என்னை காதலிப்பதாகவும்,அவளே என்னிடம் சொல்வதற்க்குள் நான் முந்திக்கொண்டேன் என்று சொல்லி சந்தோசப்பட்டாள்.!பிறகென்ன,ஒரு ஆறுமாத காலம் என் வாழ்க்கையில் வசந்தக்காலம் தான்! 

எல்லாம் நன்றாய் போய்க்கொண்டிருந்த வேளையில் தான்,மூன்றாம்முறையாக அந்தக்கனவு வந்தது.கனவில் அந்தப்பெண்,
 "ரம்யா உனக்கு சரிப்பட்டு வரமாட்டாள்.அவளுடனான காதலை மறந்துவிடுவது தான் உனக்கு நல்லது.அவளைவிட நல்லப்பெண் உனக்கு வாழ்க்கைதுணையாய் கிடைப்பாள்"என்று இடியை தலையில் இறக்கி சென்றது.
முதல்முறையாக இந்தக்கனவு எனக்கு,ஏன் வருகிறது?என கோபம்கோபமாய் வந்தது.இரண்டு நாட்கள் சென்றிருக்கும்.ரம்யா என்னிடம் வந்து,தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்திருப்பதாகவும்,படிப்பு முடிந்த்ததும் அவரையே கல்யாணம் செய்ய சொல்லி அவளின் தந்தை வற்புறுத்துவதாகவும் சொன்னாள்.எனக்கு அதிர்ச்சி தான்..ஆனாலும் எதிர்ப்பார்த்திருந்த அதிர்ச்சி என்பதால் அதை தாங்கிக்கொள்ள முடிந்தது. 
அந்த நிமிடம் முதல்,நிச்சயம் இந்தக்கனவு விஷயம் சாதாரணமானது இல்லையென்பதை மட்டும் நம்ப தொடங்கியிருந்தேன்.
அதற்குபின் அந்த கனவு வரும் இரவுகளுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன்.முதல்முறை நான் வேலைக்காக இன்டர்வியு செல்லும்போது..
அப்பாவிற்க்கு உடம்பு சரியில்லாமால் போனபோது என, எப்போதெல்லாம் நான் குழப்பத்தில் இருக்கிறேனோ அல்லது முடிவுகள் எடுக்கமுடியாமல் தடுமாறி கொண்டிருக்கிறேனோ அப்போதெல்லாம் என் குழப்பத்தை தீர்ப்பதுபோல் அந்தக்கனவு வருவதும் வாடிக்கையாயிருந்தது.

வாழ்க்கையில் எல்லாம் சரியாய் போய்க்கொண்டிருப்பதாய் தோன்றிய நேரத்தில், திடீரென ஒரு பிரச்சனை.வழக்கமாய் பிரச்சனைகளுக்கு தீர்வாய் வரும் அந்த கனவுதான் ,இந்தமுறை பிரச்சனைக்கே காரணமாயிருந்தது!
நேற்று இரவும் அந்தக்கனவு வந்தது.ஆனால் வழக்கமாய் அந்தப்பெண்ணின் முகத்தில் இருக்கும் புன்னகை மறைந்து முகம் இறுகியிருந்தது.அது சொன்ன செய்தியும் கூட அப்படியொரு இறுக்கமான செய்திதான்.
அப்படி என்னதான் சொல்லியது என கேட்குறீர்களா?
"நீ இன்னும் இரண்டு நாட்கள் தான் உயிர் வாழப்போற!அதுக்குள்ளே நீ என்னவெல்லாம் செய்யனும்னு ஆசைப்படுறியோ எல்லாத்தையும் செஞ்சி முடிச்சிக்கோ"என்றது.
“என்னது நான் சாகப்போறேனா?!இன்னும் இரண்டு நாட்களிலேயா?!என்ன சொல்ற நீ..எப்படி?!” என்று முடிப்பதற்குள் உடம்பில் வியர்வை மழையாய் பெருக்கெடுக்க,தூக்கி வாரிப்போட்டு முழிப்பு வந்துவிட்டது.
இதோ இன்றோடு ஒருநாள் முடியப்போகிறது.இன்னும் ஓரு இரவே மிச்சமிருக்கிறது.இன்று இரவும் அந்த கனவு வரும்.இன்றாவது எப்படி சாகப்போகிறேன் என பதட்டப்படாமல் அவளிடம் கேட்கவேண்டும், என ஏதேதோ நினைத்தவாறே தூங்கிபோனேன்.
 
"டக்..டக்.டக்..” கதவை தட்டும் சத்தம் கேட்டது.ஆனால் இன்று வழக்கத்தை விட வேகமாய்...மிக வேகமாய்...தட்டிக்கொண்டே இருக்கிறது..
ஆர்வமிகுதியால் நானே தூக்ககலக்கத்தோடு சென்று கதவை திறேந்தேன்.
வெளியே….

"டேய்..விடிஞ்சு எவ்ளோ நேரம் ஆச்சு?!சீக்கிரமாய் போய் பால் வாங்கிட்டு வாடா.அப்பா ரொம்பநேரமா காபிக்காக காத்துகிட்ருக்கார்,அப்புறம் டிப்போ மூடிற போறாங்க"என்று புலம்பியபடி அம்மா நின்றுக்கொண்டிருந்தாள்!!
கண்களை கசக்கியபடியே அம்மாவை பார்த்தேன்.எல்லாம் மெல்லமாய் புரிய ஆரம்பித்தது.
ச்சே..அப்போ இவ்வளவு நேரம் கண்டேதேல்லாம் கனவா?!.
--------
(அதீதம்.காம் ஜூன் இதழில் வெளியானது.)

வெள்ளி, 1 நவம்பர், 2013

தீபாவளியும்..சிலபல கொசுவர்த்தி சுருள்களும்!!

 ண்டிகைகளின் முழு மகிழ்ச்சியையும் அனுபவிக்க வேண்டுமென்றால் நாம் குழந்தைகளாய் இருக்கவேண்டும்.அல்லது குழந்தைகளால் மட்டுமே பண்டிகைகளை முழு மகிழ்ச்சியுடன் கொண்டாடமுடிகிறது.அப்படி சந்தோசங்களும்,கொண்டாட்டங்களும் நிறைந்த பால்யபருவத்து தீபாவளி பண்டிகையை பற்றிய நினைவுகோர்வைகளே இந்த பதிவு..



இப்போதுபோல் தீபாவளி அன்றுகூட மற்றநாட்களை போலவே பத்துமணி வரை தூங்குவதில்லை அந்தநாட்களில்..தீபாவளி வந்துவிட்டாலே தூக்கம் பிடிக்காத நாட்கள் அவை!ஒரு மாதத்திற்கு முன்பிலிருந்தே ஸ்கூல் கணக்கு நோட்டில் தீபாவளிக்கான 'கவுண்ட் டவுன்' தொடங்கிவிடும்..முப்பத்திலிந்து ஆரம்பித்து ஒன்று வரை வரிசையாய் எண்களை எழுதி,ஒவ்வொருநாள் முடிவிலும் அதை ஒவ்வொன்றாய் அடித்துகொண்டே வருவதில் ஒரு சந்தோசம்!!இன்னும் பத்துநாள் தான் இருக்கிறது எனும்போது பற்றிகொள்ளும் அந்த பண்டிகை பரபரப்பு..அதற்கேற்றார் போல் வீட்டிலும் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.பலகாரம் செய்வதற்கு அரிசி கழுவி காயவைப்பதிலிருந்து,அதை மில்லுக்கு போய் ஒரு பெரிய  வரிசையில் காத்திருந்து அரைத்து வருவது வரை கொஞ்சமும் சலிப்பில்லாமல் செய்வோம்.அப்பத்தாவுடன் கதை பேசியபடியே,பலகாரம் சுட அவருக்கு உதவி செய்கிறேன் என்ற பேரில் உபத்ரவம் செய்து கொண்டிருப்போம்.



இன்னும் தீபாவளிக்கு இரண்டு நாட்கள் தான் இருக்கிறது எனும்போது,புதுத்துணி எடுக்க அப்பா எப்படா கடைக்கு கூட்டிசெல்வார் என்றிருக்கும்.சமயத்தில் அவருக்கு இருக்கும் வேலைப்பளுவில்,ஒரு வேலை தீபாவளி வருவதையே மறந்துவிட்டாரோ என்றெல்லாம் கூட சந்தேகம் வந்துபோகும்!ஒருவழியாய் அவர் வேலையெல்லாம் முடிந்ததும் துணிக்கடைக்கு போவனும் என்ற செய்தி அம்மா மூலமாக தேனாய் காதில் பாயும்.அம்மா தான் எங்களுக்கும் அப்பாவுக்குமான இடைவெளியை நிரப்பும் செல்போன்..ஈமெயில்..மெசேன்ஜர் எல்லாமும்!!

புதுத்துணி எடுப்பது என்றால் எங்களுக்கு பிடித்ததை எடுப்பது என்பதல்ல..பிடித்திருப்பதாய் அப்பாவால் சொல்லப்பட்டதை அல்லது முடிவுசெய்யபட்டதை வழிமொழிவது அவ்வளவே..எது எப்படியோ அது புதுத்துணி..அது ஒன்று போதாதா?! ட்ரெஸ் எடுத்தவுடனேயே பாதி தீபாவளி கலை முகத்தில் வந்துவிடும்.புதுத்துணி எடுப்பதை விட,அதை போடுகையில் எப்படி இருக்கும் என்பதை பற்றி கனா காண்பதுதுதான் பெரும்பொழுதுபோக்காய் இருக்கும் அப்போது.துணி எடுத்தாச்சு..அடுத்து என்ன? வெடி தான்!


பொதுவாய் வெடி மட்டும் முன்கூட்டியே வாங்குவதில்லை..தீபாவளியன்று முதல்நாள் நள்ளிரவில் தான் வெடி வேட்டைக்கு செல்வது வழக்கம்!அப்போதுதான் விலை குறைவாக இருக்கும்..அதிகமாகவும் கிடைக்கும் என்றொரு எண்ணம்..ஆனால் உண்மையில் கடைசிநேர வியாபாரம் என்பதால் வெடியின் விலை தாறுமாறாய் இருக்கும்.ஆனாலும் அந்த கூட்டநெரிசலில் ஒவ்வொரு கடையாய் சென்று பேரம் பேசி வாங்குவதில் ஒரு சந்தோசம் இருக்கவே செய்யும்.ஒரு வழியாய் வெடி வாங்கி முடித்து வீடு திரும்பினால் கிட்டதட்ட இரவு மணி இரண்டு அல்லது மூன்றாகி இருக்கும்.வீட்டில் இருப்பவர்கள் பாதி தூக்கத்தில் இருப்பார்கள்.ஆனால் நமக்குதான் அந்த இம்சைபிடித்த தூக்கம் வராமல் கண்ணாமூச்சி காட்டி கொண்டிருக்கும்.

இதற்குள் ஆங்காங்கே பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்க தொடங்கியிருக்கும்.ஆனால் எங்கள் வீட்டிலோ சாமி கும்பிட்டால் தான் பட்டாசை தொடவேண்டும் என்பது விதி.
புது டிரெஸ் ஆசையும்..பலகாரங்களின் வாசமும் சேர்ந்து  மனம் ஒருவித பரவசத்தோடயே இருக்கும்.நண்பர்கள் எல்லோரும் என்னமாதிரி ட்ரெஸ் எடுத்திருப்பார்கள்? ஏன் இந்த சூரியன் இன்றுமட்டும் இவ்வளவு நேரம் தூங்குகிறது(!)? என ஏதேதோ நினைத்தபடியே தூங்கியும் போயிருப்பேன். "டேய்,சாமி கும்பிடனும்..எல்லாரும் ரெடியாயிட்டாங்க..சீக்கிரம் போயி குளிடா"என அம்மா வந்து எழுப்பையில் வாரிசுருட்டி எழுந்து பார்த்தால் மணி ஆறாயிருக்கும்! ச்சே எப்படி தூங்கினோம் என உள்ளுகுள்ளேயே முனகிக்கொண்டு..தூக்ககலக்கத்துடன் அப்பா கையால் எண்ணெய் வாங்கி தலைக்கு வைத்துவிட்டு கண் எரியஎரிய குளியல் நடந்தேறும்.குளியல் முடிந்ததும் சாமி கும்பிடவேண்டும்.சாமி கும்பிடுவது என்றால்..கைகளை கூப்பியபடி கண்களை மூடியும் மூடாமலும்..சாமி படைத்திருக்கு அருகில் வைத்திருக்கும் புதுதுணிகளையும்,வெடியையுமே பார்த்தவாறு நிற்பது,அவ்ளோதான்!


சாமி கும்பிட்டதும்..புதுத்துணி அணிந்துகொண்டு பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கியபின் சாப்பிட உட்காரவேண்டியது தான்.என்னதான் இலை நிறைய பலகாரங்கள் இருந்தாலும் சாப்பிடபிடிக்காது கடமைக்காக கொஞ்சமாய் சாப்பிட்டுவிட்டு வெடிவெடிக்க சென்று விடுவோம்..புதுடிரெஸ் போட்டு கொண்டு,முதல் சரத்தை பற்ற வைக்கும்போது, மனம் அப்படி ஒரு நிறைவாய் இருக்கும்.அந்த புதுத்துணியின் வண்ணமும்,வெடிமருந்தின் வாசமும் மனசுமுழுக்க அப்பி கிடக்கிறது இன்னமும்!அந்த நாளின் முடிவில் மனம் மீண்டும்..அடுத்த தீபாவளி எப்போது வரும் என அப்போதிழுருந்தே காத்திருக்க தொடங்கிவிடும்!!

வெளியூருக்கு வேலைக்கு வந்துவிட்டபின்  தீபாவளியும்..சனி,ஞாயிறை போல் மற்றுமொரு விடுமுறை நாளாகிவிட்டது.சிலவருட இடைவெளிக்கு பின் மீண்டும் கடந்தஆண்டு தீபாவளிக்கு வீட்டில் இருக்க வாய்த்தது.இப்போது நினைத்தபடி எந்த டிசைனிலும் புது டிரெஸ் எடுக்கமுடியும்.அப்பா எதுவும் சொல்லமாட்டார்.எவ்வளவுக்கு வேண்டுமானாலும் வெடி வாங்கி ஆசை தீர வெடிக்க முடியும்.ஆனாலும் ஏதோ ஒன்று குறைவது போலவே ஒரு உள்ளுணர்வு.என்னாவாயிருக்கும் என யோசித்ததில், ஏதோ ஒன்று குறைந்ததே..அந்தகுறைந்த ஒன்றின் பெயர் 'பால்யம்' எனவும் இருக்ககூடும் எனப் புரிந்தது!

டிஸ்கி: நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள்!

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

தலைவா-A Visual Treat for Vijay Fans

 ப்பல்லாம் தமிழ்படம் தமிழ்நாட்டை தவிர மத்த எல்லா ஊர்லயும் ரிலீஸ் ஆவறது ட்ரென்ட்டா மாறிக்கிட்ருக்கு!சினிமாவை எப்போதும் சினிமாவாக மட்டுமே பார்க்காத அரசியல்வாதிகளும்/மக்களும் ஏன் சில சினிமாக்கார்களும், இருக்கும்வரை இதெல்லாம் மாறப்போறதில்லை.நேத்து படம் ரிலீஸ் ஆவுறது லேட்டாகுறதை பத்தி விஜய் பேசுனத பாத்தப்ப நெறையவே அவரோட வலி புரிஞ்சிச்சு!



எல்லா பிரச்சனைகளையும் தாண்டி  'தலைவா' சீக்கிரம் ரிலீஸ் ஆவும்னு நம்புவோம்.லெட்ஸ் கோ டூ ரிவியூ..





 கதைன்னு பாத்தா நமக்கு ரொம்பவே பழக்கப்பட்ட நாயகன் டைப் "டான் ஸ்டோரி" தான்.மும்பைல உள்ள தமிழர்கள் எல்லாருக்கும் தலைவரா இருக்காரு சத்யராஜ்.அவரு செய்ற அடிதடி பஞ்சாயத்துகள் மகன் விஜயை பாதிக்ககூடாதுன்னு சின்ன வயசுலேயே ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிடுறாரு.ஒருகட்டத்துல சத்யராஜ் அவருக்கு வேண்டாதவர்களால கொல்லப்பட..மகன் விஜய் அவங்களை எப்படி பலிவாங்குறாரு..அப்பாவோட தலைவர் பதவி விஜய்க்கு எப்படி வருதுன்றது தான் தலைவா'வின்  ஒன்லைன் ஸ்டோரி!






விஜய்...வாவ்!!நாளுக்கு நாள் மனுஷன் ஸ்டைலிஷ் ஆகிட்டே இருக்காரு..சும்மாவே விஜய் செமையா டான்ஸ் ஆடுவாரு.இதுல டான்சரா வேற 'சலங்கையை'கட்டி விட்ருக்காங்க..கேக்கவா வேணும்?பட்டைய கெளப்பியிருக்காரு..பாங்கு அடிச்சிட்டு வாங்கண்ணா,வணக்கங்கண்ணா சாங் ஆரம்பிக்கிறத்துக்கு முன்னே வர்ற இந்தி சாங்கை கேட்டுட்டு விஜய் கொடுக்குற ரியாக்சன் பட்டாசு.வழக்கம்போல சந்தானம் இந்த படத்துலயும் போறபோக்குல சிக்ஸ் அடிக்கிறாரு."அடுத்தவன் ஐபோன்ல ஐ.எஸ்.டி. கால் பேசணும்னு நெனைக்குறது ரொம்ப தப்பு ப்ரோ'ன்னு கவுண்டர் அடிக்கிறதெல்லாம் செம..பல்லு போன கெழவன் வரைக்கும் எல்லாரையும் 'ப்ரோ'ன்னு கூப்பிட வச்சிட்டாரு!..அமலாபாலை பத்தி 'பெருசா' சொல்றதுக்கு ஒண்ணுமில்லைங்கண்ணா!டைரக்டரும்,அ.பாலும் லவ்ஸ் பண்றதுக்கு  விஜயை பழிவாங்கிட்டாங்க போல :( 'யாரிந்த சாலையோரம்' நல்ல மெலோடி.ஜி.வி.பிரசாத் வாங்கண்ணா பாட்டுல ஒரு ஸ்டெப் கூட போட்ருக்காரு!!





டைரக்டர் விஜய்-அண்ணனை பத்தி சொல்ல தேவையில்லை..முன்னெல்லாம் ஹாலிவுட் படத்த மட்டும் சுட்டுட்ருந்தவரு இப்போ உள்ளூர் படங்களையும் விட்டு வைக்கலை..படத்தோட டைட்டில் கார்டுலயே மணிரத்னம்,ராம் கோபால் வர்மா,பிரியதர்ஷன் இப்படி எல்லாருக்கும் கிரெடிட் குடுத்துட்டாரு.அந்த பயம் இருக்கணும் மனசுல:-)

படத்தோட மிகப்பெரிய டிராபேக் என்னன்னா, ப்ரெஷ்ஷா எந்த சீனுமே இல்லையேன்ற பீல் வர்றதுதான்.மும்பைல நடக்குற பல காட்சிகள் அப்படியே நாயகன் படத்தை நியாபகப்படுத்துது.அப்புறம் சத்யராஜ் இறந்ததும் தலைவா'வா விஜய் மாறுறதெல்லாம் பக்கா தேவர்மகன் பார்ட் -2 பார்த்த எபெக்ட்.டான் ஸ்டோரி சொல்லணும்னு முடிவு பண்ணிட்டாங்க ஓகே.ஆனா,எத்தனையோ டான் படங்கள் இங்க பாத்தாச்சு.அதுலருந்து எப்படி டிப்பரெண்ட்டா காமிக்க போறோம்ன்றதுக்கான எந்த மெனக்கடலும் படத்துல இல்லை.அதுலயும் இன்டர்வெல் ட்விஸ்ட் எல்லாம் உஸ்ஸ்..வகையறாத்தான்! துப்பாக்கிக்கு அப்புறம் விஜயை வேற மாதிரி பாக்க ஆசைப்பட்ட மக்களுக்கு நிறையவே வருத்தம் தான்.இந்த டைரக்டரை பத்தி தெரிஞ்சும் எப்படி விஜய் கால்ஷிட் கொடுத்தாருன்னு தான் தெர்ல.சந்தானத்துல ஆரம்பிச்சு ஒய்.ஜி.எம். வரைக்கும் விஜய் அரசியலுக்கு வந்தே ஆகணும்ன்ற மாதிரி ஏகப்பட்ட பன்ச்'கள் பேசுறாங்க..நாம சொல்ல விரும்புறது ஒன்னேஒன்னு தான்..அரசியலெல்லாம் ரொம்ப கஷ்டம் ப்ரோ:-)

ஓவர் ஆல்,விஜய் ரசிகர்களுக்கு 'தலைவா' ஒரு விஷுவல்ட்ரீட்.படம் ரிலீஸானதும் ரசிகர்களுக்கு தீபவாளிதான்!மற்றவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.மொத்தத்தில் விஜய் தன் ரசிகர்களுக்கு சொல்லவர்றது இதுதான்-NOW TIME TO LEAD!

வெள்ளி, 31 மே, 2013

ஃபுல் மீல்ஸ்/வெல்கம் பேக் வடிவேலு(31/05/13)


 வைகை புயல்-இந்த பேரை கேட்டாலே சிரிப்பு தானாக வரும்.தமிழ் சினிமாவின் நகைச்சுவை சரித்திரத்தை  வடிவேலுவின் பெயர் இல்லாது கடக்க இயலாது... 

இன்றைய தலைமுறை பேசும் எல்லா பன்ச்'களுக்கும் சொந்தக்காரர்!கவுண்டமணி-செந்தில் கூட்டணிக்கு பிறகான தமிழ்சினிமாவின் காமெடி பஞ்சத்தை போக்கியவர்..வாழ்க்கை ஒரு வட்டம்னு சொல்றது வடிவேலு விசயத்துல உண்மை ஆயிடுச்சு..தேவையில்லாம அரசியல்ல இறங்கி வாயை கொடுத்து எதையோ புண்ணாக்கிகிட்ட கதையாகிடுச்சி!ஒகே இதெல்லாம் ஃபிளாஸ்பேக்கு,இப்போ வடிவேலு           'கஜ புஜ புஜ கஜ தெனாலிராமன்'ன்ற படம் மூலமா ரீ-என்ட்ரி கொடுக்க போறாராம்!வாட் எ ஹேப்பி நியுஸ்!சில ஆளுமைகள் ஒருகட்டத்திற்கு அப்புறம் பெருசா ஜொலிக்க முடியாம போயிடுவாங்க..அந்தமாதிரி இல்லாம வடிவேலுவோட  ரீஎன்ட்ரி முன்னைவிட பட்டாசா இருக்கனும்ன்றதுதான் என்னோட ஆசை!வீ ஆர் வெயிட்டிங் வைகைப்புயல்:) 

*************************************
மூன்றுபேர் மூன்று காதல்:

சமீபத்தில் பார்த்தது..படம் ஆரம்பிச்சதுல இருந்து ஏதோ சொல்ல வராங்கன்னு மட்டும் புரிஞ்சிது.பட் அது என்னன்னு தான் புரியல!எனக்கென்னவோ வசந்த் டொக்காயிட்டாரோன்னு தோணுது.இதுல என்ன ஒரு பியிட்டினா,மூணு பேர் மூணு காதல்ன்னு டைட்டில் வச்சிட்டு அதுல ஒரு காதலை கூட சேரவிடல.சோ சேடு!சாரி வசந்த்.

**************************
இணையத்தில் கடந்த சில நாட்களா,ஹாட் டாபிக் ஜெயமோகன் அவர்கள் சொன்ன கருத்தை பற்றித்தான்.ஆனாலும்,இலக்கிய அறிவு இல்லாதவங்க எல்லாம் நாட்ல உயிர் வாழவே தகுதி இல்லாதமாதிரி அவர் சொல்றேதெல்லாம் ரொம்பவே ஓவரு!வரவர நாட்ல இந்த எலக்கியவாதிகள் தொல்லை தாங்கமுடியல..எது எப்படியோ,எத்தனைபெரிய பொக்கிஷ எழுத்தாக இருந்தாலும் படிக்க ஆளில்லை எனில் அதை எழுதி என்ன பயன் இருந்துவிடப்போகிறது?!!

********************************
வீடியோ கார்னர்:
  
இந்த வீடியோவுல இவரு பேசுறதை கேளுங்க..சொல்வதெல்லாம் உண்மை மாதிரியான ப்ரோக்ராம்களை ஆதரிப்பதற்காக நாம் ஒவ்வொருவரும் வெட்கப்படவேண்டும்.இந்த வீடியோவை பாத்ததும் ஒன்னேஒன்னு தான் தோணிச்சு..வேதம் புதிதுல ஒரு சின்ன பையன்,சத்யராஜ்கிட்ட கேள்வி கேக்குறப்போ 'பளார் பளார்'னு அறையுரமாதிரி இருக்குமே அப்படி இருந்துச்சி.


  

***************************************

என்ன பொண்ணுடா :






என்ன கண்கள்..என்ன கண்கள்!!இந்த பொண்ணுக்கு ப்ரைட் பியுச்சர் இருக்கு..மார்க் மை வேர்ட்ஸ்!!

*******************************
மக்களே..கமெண்ட்ல எதாச்சும் எழுதிட்டு போங்க..அட்லீஸ்ட் திட்டிட்டாவது போங்க..சமயத்துல என்ன டேசுக்கு நானெல்லாம் பதிவு எழுதுறேன்னு எனக்கே டவுட்டா இருக்கு!:)


saga.

திங்கள், 22 ஏப்ரல், 2013

மனசுக்காரர்கள் பூமி!

 இன்றைய தேதியில் நீங்கள் அதிகமாக பயம்கொள்ளும் விஷயம் எதைப்பற்றியதாக இருக்கும் என யாரிடமும் கேட்டால் வரக்கூடிய பதில்களில் "சக மனிதன் தான்" என்கிற பதிலும் நிச்சயம் இடம் பெற்றிருக்கும்!மனுசனை மனுசன் அடிச்சு சாப்பிடுற காலம்யா..புரிஞ்சு நடந்துக்க..!என்பது போன்ற அறிவுரைகளை எப்போதும் கேட்டுகொண்டிருக்கிற தலைமுறை தான் நாம்.அதையெல்லாம் தாண்டி இன்னமும் மனசுக்குள் ஈரத்தோடு மனிதம் வளர்த்து, வாழ்ந்துகொண்டிருக்கின்ற மனிதர்களும்நம்மைச்சுற்றி இருக்கத்தான் செய்கிறார்கள்.அதுபோலானதொரு நல்ல மனசுக்காரரை பற்றிய பதிவுதான் இது..


வறுமையின் பிடியில் வாடியநாட்கள் அவை..இப்போதும் "வாழ்ந்துகெட்ட குடும்பங்க அது" என்று யாரவது,யாரையாவது அடையாளம் அறிமுகப்படுத்தினால் எனக்கு என் சிறு வயது நினைவுகள்தான் மனதில் நிழலாடும்.ஊரில் எங்கள் தாத்தா செல்வாக்காக வாழ்ந்தவர்.பெரியாரின் தி.க.கட்சியால் தீவிர ஈடுபாடு கொண்டவர்.தாத்தாவின் மறைவு எங்கள் குடும்பத்திற்கே பேரிழப்பு!அப்பா சொந்தமாய் தொழில்செய்து ஏகப்பட்ட நஷ்டம்.குடியிருந்த வீடுவரை விற்றாயிற்று!அடுத்து என்ன செய்வது என்று தெரியாதநிலை.இருந்த எல்லாவற்றையும் இழந்துவிட்டாலும் அப்பா வாழவேண்டும் என்ற நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை..ஒருவேளை அது,பிள்ளைகளாகிய எங்கள் மூவரின் மீதான நம்பிக்கையாய் கூட இருந்திருக்கலாம்!

அதன்பின்,ஒரு சிறிய இடத்தை வாடகைக்கு பிடித்து 'டிபன் கடை' ஒன்றை தொடங்கினோம்..கடை என்பதை ஒரு சொல்லாடலுக்காக மட்டுமே இங்கே
பயன்படுத்தியிருக்கிறேனே தவிர,உண்மையில் அது மெயின்ரோட்டை ஒட்டினாற்போல்,ரெண்டு மரபென்ச்சுகள்,ஆறு கட்டை நாற்காலி,ஒரு தோசைக்கல் மற்றும் ஒரு விறகுஅடுப்பு இவற்றை உள்ளடக்கிய சிறியஇடம் அவ்வளவே!அங்கு வியாபாரமும் பெரிதாய் சொல்லிகொள்ளும் அளவிற்கு இருந்ததில்லை.இப்போது யோசித்து பார்த்தால்,அந்தகடையை நடத்தியதில் இருந்த ஒரே நல்ல விசயமாய் தோன்றுவது,இரவு ஒருவேளை சாப்பாடாவது வயிறு நிறைய கிடைத்தது என்பதுதான்!நைட்டு கடையில் மீதமாகும்
பரோட்டாக்கள் தான் மறுநாள் காலை உணவாய் இருக்கும் பலநாட்களில்,சமயங்களில் மதியஉணவும் அதுவாகவே!அந்த கடைக்கும் போட்டியாய் அருகில் சில கடைகள் முளைக்கவே இங்கு வியாபாரம்             படுமந்தமாகியது.ஒவ்வொரு நாள் மாலையும் கடைக்கு தேவையான
மளிகை சாமான்கள்,விறகு போன்றவற்றை வாங்குவதற்கே தடுமாறவேண்டிய சூழல்.அப்படியே பொருட்களை கடனுக்கு வாங்கிபோட்டாலும்,இரவு கடை அடைக்கையில் பணம், பாக்கி கொடுக்கவேண்டியவர்களுக்கு கொடுத்ததுபோக மிஞ்சுவது என்னவோ, நாங்கள் சாப்பிட்ட சாப்பாடு மட்டுமே!

ஒருநாள் மாலைஐந்துமணி ஆகிவிட்டது.அன்றைய நாள் கடையை தொடங்க வேண்டுமெனில் குறைந்தது 200ரூபாயாவது தேவை..இனி யாரிடமும் கடன் கேட்க வழியில்லை என்பதாலோ என்னவோ அப்பா மூலையில் முடங்கிவிட்டார்.ஏதாவது செய்தாக வேண்டும் என்று மட்டும் தோன்றியது
எனக்கு.யாரிடம் கேட்பது என்பது ஒருபிரச்சனை என்றால்,ஒரு சிறுவனை நம்பி யார் 200ரூபாய் கடனாய் தருவார்கள்? என்பது மாபெரும் பிரச்சனை.என்ன செய்வது என்று யோசித்த நிலையில்தான் 'ரகு மாமா'வின் நினைவு வந்தது.மாமா என்றால் சொந்தமெல்லாம் கிடையாது..ரகு மாமா முன்பு அப்பாவிடம் வேலை பார்த்தவர்.அப்பாவுக்கும்,அவருக்கும் ஏற்பட்ட ஒரு சிறு மனவருத்தத்தில்,அப்பா அவரை வேலையைவிட்டு நீக்கிவிட்டார்.அதன்பின் அவரை எப்போதாவது எங்கள் வீட்டின் அருகே இருக்கும் பெட்டிக்கடையில் பார்ப்பதுண்டு. சிசர் சிகரட்டை ஆழமாய் உள்ளிழுத்தபடியே "எப்படியிருக்க தம்பி" என்பார்.நானும் சிரிப்பை பதிலாக்கிவிட்டு செல்வேன்.இப்போது ஏதோஒரு பர்னிச்சர் கம்பெனியில் தவணை வசூலிக்கும் வேலை செய்து கொண்டிருந்தார்.

சரி,அவரிடமே பணம் கடனாய் கேட்டுவிடலாம் என்று நினைத்தாலும்,தருவாரா என்ற கேள்வியும் அறுத்து கொண்டே இருந்தது.அது மாலைநேர வசூலுக்கு அவர் வருகின்ற நேரம்தான்.நான் அவருக்குமுன்பே..எப்போதும் அவர் தம்மடிக்க வரும் அந்த பொட்டிகடையில் காத்திருந்தேன்..வழக்கத்தை விட சிறிது தாமதமாக ரகுமாமா வந்தார்.எந்த
ஒரு மனிதனும் வாழ்கையில் சந்திக்க விரும்பாத/கூடாத  தருணம் நன்கு பழகியவர்களிடம் கடன் கேட்கும் சந்தர்ப்பமாய்த்தான் இருக்கும்.எப்படி ஆரம்பிப்பது என தெரியாது,கண்கள் தழுதழுக்க நின்று கொண்டிருந்தவனை பார்த்து,

"என்ன தம்பி,இங்க நின்னுகிட்டிருக்க?"என்றார்.

கண்களை இருந்து இறங்கிய முதல் துளி கண்ணீரோடு,"மாமா,நைட்டு கடை போட காசில்ல,மளிகை சாமான் வாங்க ஒரு 200ரூபாய் பணம் வேணும் மாமா"என்றேன்.

என்னிடமிருந்து இதை சற்றும் எதிர்ப்பாக்கதவராய்,"மொதல்ல நீ கண்ணை தொடைடா" என்றவாறே,பாக்கெட்டிலிருந்து இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து நீட்டினார்.

தேங்க்ஸ் மாமா,நாளைக்கு இதே நேரம் பணத்தை திருப்பி குடுத்திடுறேன் என்றவனிடம்,

"மொதல்ல நீ பணத்தை கொண்ட அப்பாகிட்ட குடுத்து கடைய போட சொல்லு"என்றார்.

இப்போது நினைத்து பார்கையில் ஒரு விசயம் புரிகிறது. நிச்சயம் அந்தப்பணம் அவருடையதாக இருந்திருக்க வாய்ப்பில்லை.அது அவர் கம்பெனிக்கு கட்டவேண்டிய கலெக்சன் பணமாகத்தான் இருக்கும்.ஒருவேளை கம்பெனிக்கு இது தெரிந்தால்,அவர் வேலையைக்கூட இழக்க நேரிடலாம்.இன்னும் சொல்லப்போனால் அவர் அந்த உதவியை செய்யவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.ஆனாலும் என் கண்ணீர் துளிகளுக்கு அவர் காட்டிய இரக்கமும்,என் அப்பாவிடம் சம்பளம் வாங்கியவர் என்ற அந்தஉணர்வை மறக்காததும்..தேவை என்று கேட்ட நொடியில் கொஞ்சமும் யோசிக்காது உதவிய அந்த மனசும்,மனிதம் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்பதற்கான அடையாளங்கள்..!

அன்று ஒருநாள் மட்டுமல்ல,இதற்குமேல் கடையை நடத்தவேண்டாம் என முடிவெடுத்த நாள் வரை..எத்தனையோ முறை அவர் பணம் கடனாய் கொடுத்து நாங்கள் கடையை நடத்தியிருக்கின்றோம்.இப்போது எங்களின் மீதான வறுமையின் பிடி கொஞ்சம் தளர்ந்துவிட்டது..படிப்பிற்க்காவும்,வேலைக்காகவும் அந்த ஊரைவிட்டு வேறு ஊர் வந்தாயிற்று..எதையோ தொலைத்துவிட்டு,தொலைத்தது கிடைத்துவிடாதா என்று ஏக்கத்தோடு எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் நகரவாழ்க்கை ஆரம்பத்தில் வித்யாசப்பட்டாலும்..இப்போது நானும் அந்த ஏதோ ஒன்றை தொலைத்துவிட்டு,அதை தேடி ஓடும் கூட்டத்துள் ஒருவன்..!எப்போதெல்லாம் இந்த நகரத்து மனிதர்கள் மீதும்,வாழ்க்கையின் மீதும் நம்பிக்கையின்மை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் ரகுமாமாவை நினைத்துகொள்வேன்..நம்பிக்கை தானாய் ஊற்றெடுக்கும்.

எப்போது ஊருக்கு சென்றாலும்,அவர் வழக்கமாய் நிற்கும் பெட்டிகடையில் அவரை தேடி விழிகள் அலையும்.ஆனாலும் இதுவரை அவரை பார்க்கமுடியவில்லை..இந்தமுறை ஊருக்கு செல்கையில் கண்டிப்பாய் பார்த்தே ஆகவேண்டும்..எப்போதும் அவர்தான் என்னிடம் வலிய பேசுவார்.இந்தமுறையாவது அவர் என்னை கேட்பதற்கு முன்பே நான் கேட்கவேண்டும் அவரை,
 "நல்லாயிருக்கீங்களா மாமா"என்று!ஏனென்றால் இன்று வாழும் இந்த வாழ்க்கை,ஒரு காலத்தில் அவர் போட்ட பிச்சைதானே?!!

திங்கள், 18 பிப்ரவரி, 2013

Life of Pie-யும் தன்னம்பிக்கையின் உச்சமும்!

எத்தனையோ படங்களை நாம கடந்து வந்திருப்போம்..அதுல சில படங்கள் மட்டும் தான் நமக்கு மனசுக்கு ரொம்ப நெருக்கமாவும்..அதைபத்தி நெறய யோசிக்கிற மாதிரியும்,அந்த கதாபாத்திரங்கள் நமக்குள்ளேயே கொஞ்சநாள் சுத்திகிட்டுருக்க  மாதிரியும் இருக்கும்..அந்த மாதிரியான,சட்டுன்னு எளிதில் கடந்திட முடியாத ஒரு கதை..அதை கொஞ்சமும் சுவாரஸ்யம் குறையாமல் சொல்லிய உத்தி..மனிதர்களை விட அன்பும் பாசமும் கொண்ட மிருகங்கள்-னு Life of Pi சுவாரஸ்யமான அனுபவம்தான்..


என்கிட்டஉள்ள பெரிய பிரச்சனை என்னான்னா,கடல் மாதிரியான மொக்கை தமிழ் படங்களை கூட உடனக்குஉடன் பார்த்துடுவேன்..ஆனா,சில நல்ல படங்களை வேற மொழின்ற காரணத்துக்காகவே,அதை பாக்குறதுல அதிக ஆர்வம் இருக்குறதில்லை..என்ன பண்றது?!என்னதான் இன்னைக்கு ஹாலிவுட் ரேஞ்சுக்கு பேசினாலும்..நாமெல்லாம் ஒருகாலத்துல ராமாராஜன் படம் பார்த்து வளர்ந்தவய்ங்க தானே?!:) எப்பவோ இந்த படத்த டவுன்லோடிட்டாலும் பாக்குறதுக்கு வாய்ப்பே அமையலே..இந்தவாரம் ரொம்ப போரடிக்கவே,சரி பாப்போமேன்னு சும்மா ஆரம்பிச்சு ரெண்டுமணி நேரம் போனதே தெரியாம பார்த்தேன்!

இனி..படம்..



படத்தின் ஆரம்பமே பாம்பே ஜெயஸ்ரீ-யின், 'கண்ணே கண்மணியே'ன்னு  தமிழ் பாட்டோட ஆரம்பிக்க இன்ப அதிர்ச்சி..!படம் பாண்டிச்சேரியில்தொடங்குகிறது..பாண்டியில், மியூசியம் நடத்திக்கிட்டு இருக்காரு அடில் ஹுசைன்..அவர் மனைவியாக தபு! அவர்களுக்கு இரண்டு மகன்கள்..கதையின் நாயகனாக இளையமகன் சுராஜ் ஷர்மா..ஒருகட்டத்தில் அந்த மிருககாட்சி சாலையை விற்கமுடிவு செய்கிறார்கள்.அதில் உள்ள விலங்குகளை மட்டும் தங்களோடு கனடாவிற்கு கூட்டிசென்று அங்கே விற்றுவிடும் யோசனையுடன் நால்வரின் கப்பல் பயணம் தொடங்கிகிறது!

இடையில் சுராஜின் பள்ளிபருவம்,சுராஜிக்கும் அனிதா என்ற பெண்ணிற்குமான காதல் இவையெல்லாம் அழகிய ஹைகூவாய் சொல்லபடுகிறது.கப்பல் பயணத்தில் திடீரென ஏற்படும் புயல் காற்றால் கப்பல் கடலில் மூழ்க,அதிலுருந்து நாயகனும் கப்பலில் இருந்த சில மிருகங்களும், படத்தின் இன்னொரு முக்கிய பாத்திரமான பெங்கால் புலியும் மட்டும் ஒரு படகில் தப்பிக்கின்றார்கள்.சந்தர்ப்ப சூழலால் மற்ற மிருகங்கள் இறந்துவிட அந்த நடுக்கடலில் மிச்சமிருப்பது நாயகனும்,புலியும் மட்டுமே!
முதலில் மிருகத்துக்கே உண்டான மூர்க்க குணமும்..மனிதனின் இயல்பான பயந்தசுபாவமும்  ஒத்துபோகாமல் இருக்க..பின் கொஞ்சம்கொஞ்சமாக அவர்களுக்குள் ஏற்படும் புரிதல் அற்புதம்.
இனி இருவரும் இந்த கடலிலேயே மடியப்போகிறோம் என்ற நிலை வருகையில் அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதே மீதிக்கதை.வாழ்க்கைக்கும் சாவிற்குமான அந்த தருணங்களில் ஹீரோவின் நடிப்பு அருமை!

படத்தின் சுவாரஸ்யங்களில் சில:

இந்த படத்த பாத்திட்டு இருக்கும்போது மனசுல தோணினதுஇதுதான்!இந்தளவுக்கு தன்னம்பிக்கையோட யாராலையும் போராடமுடியுமா-ன்றது தான்!


தபுவை பாக்குறப்போ ஒண்ணேஒன்னு தான் தோணுது..எவ்வளவு பெரிய சூப்பர் ஃபிகரா இருந்தாலும்,அதுவும் ஒரு நாளைக்கு ஆன்ட்டி ஆகியே தீரும்!இது உலக நீதி:(

அப்புறம் நம்மநடிகர் திலகம் சிவாஜியின் வசந்தமாளிகை பட போஸ்டரை ஒரு சீன்ல காமிக்கிறாங்க!இறந்தும் ஹாலிவுட்டில் நடிக்கிறார்நடிகர் திலகம்!

இந்தப்படம் ஆஸ்கருக்கு பலபிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளது!பாம்பே ஜெயஸ்ரீ-யும்விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்..விருதகளை அல்ல வாழ்த்துகள்.

படக்குழுவினர் விபரம்:
Directed by Ang Lee
Produced by
Gil Netter
David Womark
Screenplay by David Magee


Starring Suraj Sharma Irrfan Khan Tabu Adil Hussain Gerard Depardieu Rafe Spall
Music by Mychael Danna
Cinematography Claudio Miranda
Editing by Tim Squyres
Studio Rhythm & Hues Fox 2000 Pictures

இந்த படத்தை 3D யில் பார்த்தால் அருமையாய் இருக்கும்..கண்டிப்பா மிஸ் பண்ணகூடாத ஒரு படம்..மறக்காம உங்க கருத்துகளை சொல்லுங்கள்..

சகா..




வெள்ளி, 18 ஜனவரி, 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா-நியாயம் கேட்கும் சாந்தனு!!


பொங்கலுக்கு வெளியாகி சந்தானம்,பவர் ஸ்டார் நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் படம்,கண்ணு லட்டு தின்ன ஆசையா!.

இது எண்பதுகளில் வெளியான திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் இயக்கிய இன்று போய் நாளை வா திரைப்படத்தின் காப்பி என்பது படம் பார்த்த எல்லோருக்குமே தெரியும்..க.ல.தி.ஆசையா திரைப்பட குழுவே  ஒரு பேட்டியில,இது  இன்று போய் நாளை  வா-வின் ரீமேக் தான் அப்படின்னு சொல்லியிருந்தாங்க..

இப்போ பிரச்சனை என்னான்னா இந்த படத்த தன்னோட முறையான அனுமதி இல்லாம படமா எடுத்திருக்கிறதா,கேஸ் போட்டு இருக்கார் பாக்கியராஜ்..ஆனா படம் ரிலீஸ் ஆகுற சமயத்துல லம்பா ஒரு அமவுண்ட் கொடுத்து பாக்கியராஜை ஆஃப் பண்ணிட்டதாகவும் ஒரு பேச்சு அடிபட்டுச்சு!!

இது ஒரு பக்கம் இருக்கப்ப பாக்கியராஜோட பையன் சாந்தனு,முதல்ல அப்பாகிட்ட வந்து தயாரிப்பாளர் ராம.நாராயணனும்,சந்தானமும் இந்த படத்தோட உரிமையை கேட்டாங்க..


ஆனா அப்பா அந்த கதைய என்னைய வச்சி எடுக்குறதா இருந்தாதால,தர மறுத்திட்டாரு.அதுக்கு அப்புறம் அப்பாவுக்கு தெரியாமலே இந்த படத்தை எடுத்து இப்போ ரிலிசும் பண்ணிட்டாங்க..இதுக்கு கவிதாலயா புஸ்பா கந்தசுவாமியும் உடந்தையா இருந்துருக்காங்க..ஆனா இதுக்காக ஒரு பைசா கூட அப்பாவுக்கு கிரெடிட்டா தரலை.. இது முழுக்க முழுக்க என் அப்பாவுக்கு சொந்தமான கதை..இதை திருடுனவங்களை சும்மா விடபோறதில்லைனும்,இந்த பிரச்சனைல அப்பாவுக்கு ஆதராவ எல்லாரும் குரல் கொடுக்கனும்னும் ட்விட்டர்ல சாந்தனு கேட்ருக்காரு..


இப்பல்லாம் அடுத்தவன் கதையை திருடுறது, இல்லைனா என் கதையை திருடிட்டான்னு கேஸ் போடுறது,இதான் ட்ரென்ட் போல!!எது எப்படியோ இந்த பிரச்சனை மூலமா படத்துக்கும்,சந்தானம் அன்ட் கோ-விற்கும் எக்ஸ்ட்ரா பப்ளிசிட்டி தான்!!

இன்னும் பேசுவோம்..
சகா..

சனி, 12 ஜனவரி, 2013

தமிழ் இனி மெல்ல சாகுமா??-ஓர் அலசல்

 இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் வாழ்ந்த தமிழன் இன்றைய தமிழனுடன் பேசமுடியும்.வேறெந்த மொழியிலும் இந்த சிறப்பு இல்லை -எழுத்தாளர் சுஜாதா.

இது ஒரு சின்ன உதாரணம்தான்..இதுப்போல் எத்தனையோ சிறப்புகள் தமிழுக்குண்டு..தமிழ் மொழியின் பெருமைகளைப்பத்தி பேசணும்னாஇந்த ஒரு பதிவு போதாது!!


எல்லாமும் சரி..ஆனால் கொஞ்சம் கனவு கலைத்து பார்த்தால் நிதர்சனம் நிச்சயம் வேறாகத்தான் இருக்கும்..
இன்று உள்ள சமுதாயம் தமிழலில் பேச வெட்கப்படக்கூடிய சமுதாயமாக மாறி வருகிறது என்பதுதான் உண்மை.தமிழ் என்பதுபோய் இப்போது டமில் ஆகிவிட்டது..கேட்டால் ஃபேஷனாம்!!
நான்பார்த்த வரையில்,தமிழனை தவிர மற்ற மொழிபேசுபவர்கள் அது இந்தியாவிற்கு உள்ளோ அல்லது வெளிநாடுகளோ..நிச்சயம் அவர்கள் மொழியில் பேச வெட்கப்படுவதில்லை..மாறாக இது என் மொழி, உனக்கு புரிந்தாலும் புரியாவிட்டாலும் அதை பேசுவதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது என்பதுதான் பலரது நிலைபாடும்!!


வடஇந்தியர்கள் பலரும் பேசும்போது நீங்கள் கவனித்திருக்கலாம்..அவர்கள் பேச்சில் மிகமிககுறைந்த அளவே ஆங்கிலகலப்பு இருக்கும்..ஆனா இங்கே ஒரு வாக்கியத்தை ஆங்கிலம் கலக்காமல் சொல்வது என்பதே மிக கடினமான காரியமாகிவிட்டது.

தீர்வுதான் என்ன??
                   
                    பாஸ் என்ன சொல்றீங்க??நாங்க கார்ப்பரேட் கம்பெனில வேலை பாக்குறோம்..அங்கே போய் தூயதமிழ்ல பேசிக்கிட்டு இருக்கமுடியுமா?ன்னு கேக்குறவங்களுக்கு நான் ஒன்னே ஒன்னுதான் சொல்ல விரும்புறேன்..உங்களை யாரும் இப்போ ஆங்கிலம் பேசவேண்டாம்னோ அல்லது நான் ''தானியங்கி மூவுருளி''(ஆட்டோ ரிக்ஸா)யில் பயணம் செய்து கொண்டிருக்கிறேன் அப்படின்னு தூய செந்தமிழ்லயோ பேசனும்னு சொல்லல..!

குறைந்தபட்சம் உங்கள் நண்பர்களிடம்,உங்கள் உறவுகளிடம் உங்களுக்கு தெரிந்த தமிழில் பேசுங்கள்..அரைகுறையாய் ஆங்கிலத்தில் பேசுகையில் வரும் கர்வம் தமிழில் பேசுகையில் ஏன் வெட்கமாய் மாறவேண்டும்??!
இது நிச்சயம் ஒரேநாளில் நடந்துவிடகூடிய அதிசியம் அல்ல..நீங்கள் டீக்கடைக்கு போய் ஒரு தேநீர் வேண்டும் என்று கடைக்காரரிடம் கேட்டால் அவர் உங்களை விநோதமாக பார்க்கவே வாய்ப்புகள் அதிகம்..ஆனால் அதை பொருட்படுத்தாமல் நீங்கள் தொடர்ந்து பேசினால் நிச்சயம் ஒருநாள் பழக்கத்திற்கு வந்துவிடும்..மற்ற மாநிலத்துகாரர்கள் அவர்கள் தாய்மொழியில் பேச எந்தவித வெட்கமோ/தயக்கமோ காட்டுவதில்லை..பின் நாம் மட்டும் ஏன் இப்படி??


தமிழில் பேசுவதற்கு வெட்கபடுவதற்க்கு பின்னால் இன்னும் ஏதோவொரு அடிமைத்தனம் ஒளிந்திருப்பதாகவே கருதுகிறேன்..தமிழன் கடைசிவரை தமிழனாய் இருக்கும்வரை நிச்சயம் தமிழுக்கு அழிவில்லை!!உங்களை சங்கம் வைத்து தமிழ் வளர்க்க சொல்லவில்லை.குறைந்தபட்சம் சங்கடப்படாம தமிழ்ல பேசுங்கன்னு தான் சொல்றேன்..

இனி தமிழில் பேச பெருமைப்படுவோம்..தமிழன் என்பதில் கர்வோம் கொள்வோம்!!

 குறிப்பு :நண்பர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்..பதிவு பற்றி உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்..

இன்னும் பேசுவோம்..
சகா..

திங்கள், 7 ஜனவரி, 2013

விஷப்பரிட்சையா?!! விஸ்வரூபம்?


இன்றைய தேதியில் திரையுலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு விஷயம்,உலகநாயகனின் விஸ்வரூபம் திரைப்பட வெளியீடு..
எப்போதுமே புதுமுயற்சிகளில் ஆர்வம்காட்டும் கமல்,இந்தமுறை கையில் எடுத்திருப்பது DTH வெளியீடு.



கமலின் இந்த முயற்சிக்கு ஒருபக்கம் ஆதரவு இருந்தாலும்,தியேட்டர் உரிமையாளர்கள் இன்னமும் எதிர்ப்பு தெரிவித்து கொண்டேதான் இருக்கிறார்கள்.
தயாரிப்பாளராய்,கமலின் வாதம் சரி என்றாலும்,அதை நடைமுறை படுத்துவதில் உள்ள சிக்கல்கள் ஏராளம்..இன்னும் சொல்லப்போனா இந்த DTH வெளியீடை எப்படியெல்லாம் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கமுடியும்னு இப்பவே நம்மாளுக ரூம் போட்டு யோசிக்க ஆரம்பிச்சிருப்பாங்க!!அதுக்கு ஒரு சின்ன சாம்பிள் தான் இந்த போட்டோ:



விஸ்வரூபம் சந்திக்க இருக்கும் பிரச்சனைகள்:

கமல் சொல்லியிருக்க மாதிரி ,படம் ரிலீஸ்க்கு ஆகுறதுக்கு பத்துமணிநேரத்திற்கு முன் DTHல் வெளியான உடனே,நம்மவர்கள் ட்விட்டர்,ஃபேஸ்புக்குல படத்தோட ரிசல்ட்ட போட ஆரம்பிச்சிருவாங்க..படம் நல்லா இருந்தா தப்பிச்சுது..இல்லைனா தியேட்டர் கலெக்சன் பெருமளவு குறைய சான்ஸ் இருக்கு.

அதேமாதிரி,குடும்பத்துல உள்ளவங்க மட்டும் பாக்காம அவங்க சொந்தங்கள் அல்லது பக்கத்துவீட்டுகார்களுடன் பார்ப்பது..அப்புறம் ஹோட்டல்,பார் போன்ற பொது இடங்கள்ல படத்த காமிச்சாங்கன்னா,நிச்சயம் தியேட்டர் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்பிருக்கு.

ஆனாலும் இந்த புது முறைக்கு பொதுமக்களிடம் நிச்சயம் வரவேற்ப்பு இருக்கவே செய்யும்..ஆயிரம் ரூபா கொஞ்சம் அதிகம்தான்னாலும்,தியேட்டரில்முதல்நாள் டிக்கெட்விற்பனையில் நடக்கும் பகல்கொள்ளைக்கு இது எவ்ளவோ பரவாயில்லைன்னு தான் மக்கள் நினைப்பாங்க!

யார் என்று புரிகிறதா
இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே
சரித்திரம் படைத்தவன்
ஞாபகம் வருகிறதா!!
இது விஸ்வரூபம் பாடல் வரிகள்..இந்த பாடல் வரிகள் உண்மையாகி கமல் என்ற உண்மை கலைஞன் வெற்றி பெறவேண்டும் என்பதே,திரைஆர்வலர்களின் விருப்பம்..பொறுத்திருந்து பார்ப்போம்..விஸ்வரூபத்தின் விஸ்வரூபத்தை!!

இன்னும்பேசுவோம்..
சகா.




ஞாயிறு, 6 ஜனவரி, 2013

இசைப்புயலும் இனியநாட்களும்..


இசைப்புயலின் பிறந்தநாள் இன்று..உச்சம் தொட்டுவிட்ட உன்னத கலைஞன் ரகுமான்..எனக்குள் இசைப்புயல் மையம் கொண்டது பள்ளிநாட்களில் தான்..



பள்ளியின்  நூற்றாண்டு விழாவுக்காக எங்க கிளாஸ்ல எல்லாரையும் டான்ஸ் காம்படீசனுக்காக தண்ணி தெளிச்சி விட்டுடாங்க..நமக்கு டான்ஸ்லயெல்லாம் ஆர்வம் இல்லாட்டியும் கிளாஸ் நடக்காதேன்ற சின்ன சந்தோசம் மனசுக்குள்ள!விழாவுக்கு வேற, அப்போ இருந்த கல்விஅமைச்சர் வர்றதாக ஏற்பாடு..எங்களுக்கு டான்சுக்காக செலக்ட் பண்ணிருந்த பாட்டு ரகுமானின் 'வந்தேமாதாரம்' சாங்..முதல்நாள் பிராக்டிஸ்ல அந்த பாட்டை கேக்குறப்பவே எதோ ஒரு சிலிர்ப்பு மனசுக்குள்ள..


வரிகள் சரியா புரியலைன்னாலும் பாட்டோட ஆரம்பமான வந்தேமாதரம்ங்கறது மட்டும் மனசுக்குள்ள ரிப்பீட் மோட்ல ஓடிகிட்டே இருக்கும்..நமக்கு சுட்டுபோட்டாலும் டான்ஸ் வராது,இதுல டான்ஸ் சொல்லிகொடுக்குறதுக்குன்னு தனியா ஒரு மாஸ்டரை ஸ்பெஷல் அப்பாயின்மென்ட்ல வரவெச்சிருந்தாங்க..!

நாங்க ஒரு ஆறுபேரு,எத்தனை தடவை சொல்லி கொடுத்தாலும்,நாங்க மட்டும் தனியா ஏதோ  ஒரு ஸ்டெப்ல ஆடிகிட்ருப்போம்..இப்படி குரூப்பா ஆடுறதுல உள்ள ஒரு பிரச்சனை என்னானா,நாம ஒரு ஸ்டெப் தப்பா ஆடிட்டோம்னாலும் நம்ம பின்னால ஆடுறவனும் நம்மளால கன்பியூஸ் ஆயிடுவானுக!மாஸ்டரும் கடைசிநாள் வரை,எப்படி எப்படியோ சொல்லி கொடுத்தாரு..ம்ம்ஹூம்,வரல்லையே..!கடைசில அவரே கடுப்பாகி தம்பிகளா, நீங்க தயவுசெஞ்சு மொத ரோவுல நின்னுராதீங்க..கடைசில  ஒரு ஓராம நின்னு முன்னாடி ஆடுறவன பாத்து முடிஞ்சா வரைக்கும் சமாளிங்கடான்னு சொல்லிட்டு விட்டுட்டாரு..ஒரு வழியா நாங்களும் சமாளிச்சு ஆடி(?!) ப்ரோக்ராமை நல்லபடியா முடிச்சிட்டோம்..

டான்ஸ் தான் வர்ரலையே தவிர,அந்த வந்தே மாதரம் பாட்டு அப்படியே மனசுக்குள்ள நின்னுடுச்சி..

"தாயே உன்பெயர் சொல்லும் பொழுதே இதயத்தில் மின்னலை பாயுமே
இனிவரும் காலம் இளைஞனின் காலம்உண்கடல் மெல்லிசை பாடுமே!!"

இந்த வரிகளை இப்போ கேட்டாலும் அதே சிலிர்ப்பு..! இசை என்பது வெறும் ஒலி அல்ல..அது நம் வாழ்கையின் அடையாளம்.எப்போது கேட்டாலும் நாம் வாழ்ந்த நாட்களையும் சேர்த்து நினைவுமீட்டல் செய்யும் சக்தி இசைக்கு மட்டுமே உண்டு!!

 கோடானுகோடி இளைஞர்களின் உள்ளத்தை கொள்ளைகொண்டிருக்கும் ஆஸ்கர் நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..உங்கள் இசை பயணத்தில் இன்னும் பல உயரங்களை அடைய வாழ்த்தும் உங்கள் ரசிகர்களில் ஒருவன்..

இன்னும் பேசுவோம்,
சகா..


சனி, 5 ஜனவரி, 2013

பிள்ளையார் சுழி

ஒருவழியா நாமளும் பிளாக் ஆரம்பிச்சாச்சு!!(ஒரு வேளை,இது தெரிஞ்சுதான்..பாரதி இனி தமிழ் மெல்ல சாகும்னு சொல்லியிருப்பாரோ?!)..இனிமேல் மனசுல பட்டதை உங்ககிட்ட பகிர்ந்துக்கிறேன்..அது பலநேரங்களில் மொக்கையாவோ,புலம்பலாகவோ,கவிதை(கவுஜ?!)யாவோ இருக்கும்..உங்கள் ஆதரவுகளை எதிர்நோக்கி..

சகா..