ஞாயிறு, 9 மார்ச், 2014

கோச்சடையான் பாடல்கள் விமர்சனம் (First on Net)


இன்று நாளை என்று எதிர்ப்பார்ப்புகளை எகிறவைத்து மிக நீண்டதொரு காத்திருப்புக்குப் பின் ஒருவழியாக சூப்பர்ஸ்டார் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் மெகா கூட்டணியின் கோச்சடையான் பாடல்கள் இன்று வெளியிடப்படுகின்றன.இசை வெளியீட்டுவிழா இன்றுதான் என்றாலும் சோனி நிறுவனம் நேற்றுஇரவே ஐடியூன்ஸில் அதிகாரப்பூர்வமாக பாடல்களை வெளியிட்டுவிட்டது.பொதுவாய் ரகுமானின் ஆல்பம் ரிலீஸ் என்றாலே எதிர்பார்ப்பு எகிறி நிற்கும்.இது தலைவரின் படம் வேறு.சொல்லவா வேண்டும்?!எதிர்பார்ப்பு தாறுமாறாய் எகிறி கிடக்கிறது.இத்தனை எதிர்பார்ப்புகளையும் கோச்சடையான் பாடல்கள் பூர்த்தி செய்துருக்கிறதா என இப்போது பார்க்கலாம்.



எங்கே போகுதோ வானம்:
இந்த ஆல்பத்தில் முதலாவதாய் வெளியிடப்பட்ட பாடல் இதுதான்.கிட்டதட்ட ஐந்து மாதங்களுக்கு முன்பே சிங்கிள் டிராக்காய் ரிலீஸ் செய்யப்பட்டது.ரஜினியின் ஓபனிங் சாங் சென்டிமென்ட் படி இந்தபாடலையும் எஸ்பி.பியே பாடியுள்ளார்.ரசிகர்களுக்கு ரஜினி மெசேஜ் சொல்வதைப்போல அமைந்துள்ளது பாடலின் வரிகள்."உங்களின் வாழ்த்துகளால் உயிர்க்கொண்டு எழுந்துவிட்டேன்.வாழ்த்திய மனங்களுக்கு என் வாழ்க்கையை வழங்கிவிட்டேன்" என்ற வரிகளை கேட்கையில் கடந்தகால நினைவுகள் வந்து சோகங்களாய் மனமெங்கும் அப்பிக்கொள்கிறது.வழக்கமான தலைவர் பட ஓபனிங் சாங்க்ஸ் தருகின்ற உற்சாகம் ஏனோ இதில் கொஞ்சம் மிஸ்ஸிங்!

மணப்பெண்ணின் சத்தியம்:

இது லதா ரஜினிகாந்த் பாடியிருக்கும் பாடல்.திருமணத்தின் போது மணப்பெண் உறுதி எடுப்பது போல பாடல் வரிகள் எழுதப்பட்டிருக்கிறது.லதாவின் மென்குரலும்,வைரமுத்துவின் கவித்துவ வரிகளும் ஆகப்பெரும் பலம் இப்பாடலுக்கு.வெகுநாட்களுக்கு பிறகு பாடல் வரிகளை தெள்ளத்தெளிவாக கேட்க முடிந்ததற்காகவே ரகுமானுக்கு ஒரு ஸ்பெஷல் பொக்கே கொடுக்கலாம்.soothing melody!

எங்கள் கோச்சடையான்:

கோச்சடையானின் புகழ்பாடும் பாடல்.இன்டர்லூடில் செண்டைமேளமும்,ட்ரம்ஸுமாய் அதிர விட்டிருக்கிறார் ரஹ்மான்!Really It's goosebumping! தியேட்டரில் விசில் சத்தம் காதை  பிளக்கபோகும் பாடலாய் நிச்சயம் இது இருக்கும்.

மெதுவாகத்தான்...எனை ஈர்க்கிறாய்:

எஸ்.பி.பியும் சாதனா சர்க்கமும் இணைந்து பாடியிருக்கும் மெலோடி இது.கோச்சடையானின் மகன் ராணாவுக்கும் அவன் காதலிக்கும் இடையேயான டூயட்டாய் இருக்ககூடும்.இந்த பாடலுக்கு எஸ்.பி.பி இல்லாது வேறு குரலை பயன்படுத்தி இருந்தால் இன்னும் ஃப்ரெஷ்ஷாய் இருந்திருக்குமோ என ஏனோ தோன்றியது.இன்னும் சிலமுறை கேட்டால் என் ஃபேவரைட் லிஸ்டில் இடம்பிடித்துவிடும் வாய்ப்புகள் அதிகம்!ஆல்பத்தில் எல்லாரையும் கவரப்போகும் பாடலாகவும் இதுவே இருக்கப்போகிறது.

இதயம் நழுவி..:

ஸ்ரீனிவாஸ் மற்றும் சின்மயி பாடியிருக்கும் பாடல்.பிரிவின் வலியை கனகட்சிதமாய் வார்த்தைகளிலும்,இசையிலும் கொண்டு வந்திருக்கிறார்கள்.கேட்கலாம் ரகம்.

மாற்றம் ஒன்றுதான் மாறாதது:

தலைவரின் வாய்ஸில் "எதிரிகளை ஒழிக்க எத்தனையோ வழிகளுண்டு.முதல் வழி மன்னிப்பு!" என்று தொடங்குகிறது பாடல்.ஹரிசரண் பாடியுள்ள பாடலில் இடையிடையே,ரஜினியின் தத்துவ ஒன்லைனர்கள் பாடல் முழுக்க வருகிறது.எந்த சிட்சுவேஷனில் இந்த பாடல் வருகிறது,எப்படி இதை படமாக்கியிருப்பார்கள் என காண ஆர்வத்தை கிளப்பி விட்டுவிட்டார்கள்.தலைவர் அவரின் ட்ரேட்மார்க் சிரிப்போடு சொல்லும் "நண்பா எல்லாம் கொஞ்ச காலம்" என்ற பன்ச் செம்ம!

மணமகனின் சத்தியம்:

மணமகள் சத்தியம் பாடலின் Male version இது.ஹரிசரண் பாடியுள்ளார்.தாலாட்டு கேட்பதை போன்றதொரு ஃபீல்..செவிகளை செல்லமாய் வருடி செல்கிறது."அர்த்த ஜாம திருடன் போல் அதிர்ந்து பேசேன்! காமம் தீர்ந்த பொழுதிலும் எந்த காதல் தீரேன்!" என வார்த்தைகளில் விளையாடியிருக்கிறார் வைரமுத்து.

ராணாவின் கனவு (Raana's Dream):

எங்கே போகுதோ வானத்தின் instrumental version.லயிக்கவேண்டிய இசை!

கர்மவீரன்:

ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவர் சகோதரி ஏ.ஆர்.ரெஹைனா பாடியிருக்கும் பாடல்.கிளைமேக்ஸ் சாங் என சொல்ல கேள்வி!இந்த ஆல்பத்தில் அதிக நேரம் ஒலிக்ககூடிய பாடலும் இதுதான்.மொத்தம் 6.46 நிமிடங்கள்.அவ்வளவாய் ஈர்க்கவில்லை.

மொத்தத்தில் ரஹ்மானின் பாடல் கேட்க கேட்கத்தான் பிடிக்கும் என்ற லாஜிக் சில பாடல்களுக்கு பொருந்தினாலும் பல பாடல்கள் அந்த லாஜிக்கை உடைத்து முதல் முறை கேட்கையிலே கவர்ந்துவிட்டன.ரஹ்மான் தன் வேலையை செவ்வனே செய்துவிட்டார்.இனி ரசிகர்கள் கொண்டாட வேண்டியதுதான் பாக்கி.ஏய்..ப்பா...படத்தை சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்கப்பா.....