திங்கள், 23 பிப்ரவரி, 2015

மேல ஏறி வாறோம்..நீ ஒதுங்கிநில்லு!!-WC2015

பிப்ரவரி.15 2015!! ஒட்டுமொத்தமொத்த இந்தியாவும் உச்சபட்ச வெப்பநிலையில் தகித்து கொண்டிருந்தது.ஞாயிறு விடுமுறையில் கூட நெரிசலில் சிக்கி தவிக்கும் பெருநகரத்து சாலைகள் எல்லாம் ஆள் அரவமின்றி வெறிச்' என்றிருந்தன.இவையனைத்துக்கும் காராணம்,அங்காளி பங்காளிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் உலககோப்பை 2015 முதல் லீக் போட்டியில் நேருக்கு நேர் மோதவிருந்த்து தான்!வரலாற்றை எப்படியாவது மாற்றி எழுதிவிடும் முனைப்புடன் பாகிஸ்தானும்..இதுவரையிலான வெற்றி சரித்திரத்தை தக்கவைத்துக்கொள்ளும் நோக்குடன் இந்தியாவும் களம் காண தயாராயின.எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் 'பட்டாசு வெடிக்க காத்திருக்கும்' விளம்பரத்தை வெளியிட..பற்றிக்கொண்டது இருநாட்டு ரசிகர் படையும்!


முதல்போட்டியில் இந்தியா களம் காணும் வரையில்,அதிதீவிர இந்திய ரசிகர்களுக்கும் கூட உள்ளூர கடுஞ்ஜுரம் அடித்துகொண்டிருந்தது என்பதுதான் நிதர்சனம்.காரணம்,இந்திய அணிக்கு கொடுக்கபட்டிருந்த அழுத்தமும்..உலககோப்பைக்கு முன்னாலான இருமாதங்கள் இந்திய அணிக்கு 'சத்தியசோதனை' காலமாய் அமைந்ததும் தான்!அதோடு உலககோப்பைக்காக தெரிவு செய்யப்பட்ட டீம் ஸ்குவாடை பார்க்கையிலேயே தெரிந்திருக்கும்..இது வழமையான இந்திய அணியில் இடம்பெறும் எதிரணியை மிரட்டக்கூடிய ஜாம்பாவான்கள் அதிகம் இல்லாத வீரர்களை கொண்ட ஒரு பட்டியல் என்று.இவையெல்லாம் ஒன்று சேர்ந்ததாலோ என்னவோ,ஜெயிச்சா சந்தோசம்..இல்லைனா..ரொம்ப மோசமா தோக்காம இருந்தாக்கூட ஓகே என்ற நிலைக்கு சராசரி இந்திய கிரிக்கெட் ரசிகன் தள்ளப்பட்டிருந்தான்!

நிலைமை இப்படி இருக்க அன்று களத்தில் நடந்தததோ வேறு!இந்தியாவை பார்த்து தப்புக்கணக்கு போட்டவர்களுக்கு அன்றைய ஆட்டம் "சிங்கம் இதுவரை சற்றே இளைப்பாறியது..அந்த இளைப்பாறல் நிரந்தரமானது அல்ல" என்பதை உணர்த்துவது போலான ஒரு ஆட்டம்.நாற்ப்பதைந்தாவது ஓவர் வரை கட்டுகோப்பான மிக நேர்த்தியானதொரு ஆட்டம்..பேட்டிங்,களத்தடுப்பு,மிகவும் மோசமானதாக பார்க்கப்பட்ட பந்துவீச்சு துறை அதன் மிக சிறப்பானதொரு பங்களிப்பை கொடுத்தது என நிறைவாக இருந்தது அணியின் செயல்பாடு..ஒன்றைத்தவிர,அது 45வது ஓவருக்கு பின் மடமடவென விக்கெட் சரியாமல் இருந்திருந்தால் அணியின் ஸ்கோர் அனாயசமாக 325ஐ தொட்டிருக்கும்.. 

இந்த வெற்றி ரசிகர்களுக்கு நம்பிக்கையை கொடுத்ததோ இல்லையோ நிச்சயம்ஒட்டுமொத்த அணிவீரர்களுக்கும் அளவிலா உற்சாகத்தையும்,நம்பிக்கையும் கொடுத்திருக்கும்.அதிமுக்கியமான ஒரு தொடரின் துவக்கம் இதைவிட வேறெப்படி சிறப்பாய் இருந்துவிட முடியும்?!போட்டிக்கு பின்னான பாராட்டு மழையில் ஒட்டுமொத்த இந்திய அணியும் நனைந்து கொண்டிருக்கையில்,கொண்டாடுவதற்கு இப்போது நேரமில்லை..கொண்டாடும் அளவிற்கு இன்னும் எதையும் நாங்கள் சாதித்துவிடவில்லை என்றார் தோனி..அதுதான் தோனி..அதனால் தான் அவர் தோனி! :)

பாகிஸ்தானுடனான வெற்றிக்கு பின்..இந்திய அணியின் ஹேட்டர்ஸ்களின் குரல் இப்போது இப்படி ஒலித்தது.அதாகப்பட்டது,'பாகிஸ்தான் ஒன்னும் அவ்ளோ ஸ்ட்ராங்கான டீம் இல்ல,அடுத்த மேட்ச் சவுத் ஆப்ரிக்காவோட..அதுல எப்படி பெர்பாமன்ஸ் பன்றாங்கன்றதை வச்சி தான் எதுவாயிருந்தாலும் சொல்லமுடியும்' என்பதாயிருந்தது!போதாக்குறைக்கு நான் சின்னபையன்னு தானேடா என்மேல கை வச்சிபுட்ட,தைரியமிருந்தா எங்க அண்ணன் மேல கையவச்சி பாருடா என்கிற ரேஞ்சில்,பாகிஸ்தானை ஜெயிச்சிட்டிங்க..முடிஞ்சா சவுத் ஆப்ரிக்காவை ஜெயிங்க என்று சொல்வது போல மீண்டும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 'மோக்கா மோக்கா' விளம்பரத்தை வெளியிட்டு சூழலை இன்னும் பரபரப்பாக்கியது.

இந்திய ரசிகர்களுக்குமே கூட,இந்த போட்டியில் இந்தியாவின் செயல்பாடு எப்படி இருக்குமோவென்ற கேள்வியையும்,கலவரத்தையும் ஒருசேர ஏற்படுத்தியிருந்தது.தென்னாப்ரிக்காவை பொறுத்தவரை ABDவில்லியர்ஸ்,ஆம்லா,மில்லர்,டு ப்ளசிஸ் என அதிரடியான பேட்டிங் வரிசை ஒருபுறம்,உலகின் தலைசிறந்த பந்துவீச்சு,களத்தடுப்பில் கில்லி என எந்த பக்கத்திலிருந்து பார்த்தாலும் சவுத் ஆப்ரிக்கா மிக அபாயகரமானதொரு அணியாகவே விளங்கியது.இந்த சூழலை எப்படி கையாளப்போகிறது இந்தியா என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாய் இருந்தது நேற்றைய ஆட்டத்தில்.

டாஸ் ஜெயித்து முதல் பேட்டிங்கை தோனி தெரிவு செய்ய..முந்தைய ஆட்டத்தைபோலவே இந்த முறையும் ரோஹித் ஏமாற்றினாலும்,தவானும்,ரகானேவும்,கோலியும் ஆடிய ஆட்டம் ஜஸ்ட் அமேசிங்!எத்தனை பெரிய அணியாயிருந்தாலும்..எவ்வளவு மிரட்டலான வீரர்களாயிருந்தாலும்,'எங்களுக்கு பயம்னா என்னனே தெரியாது' என்று சொல்வதாய் இருந்தது அந்த ஆட்டம்..தவான் 137ல் அவுட் ஆக சென்றமுறை பாகிஸ்தானுடன் நடந்த அதே தவறு மீண்டும் நடந்தேறியது..ரன்களை மிக விரைவாக குவிக்கவேன்டியா கடைசி ஐந்து ஓவர்களில் விக்கெட்டுகள் வரிசையாய் விழ 335க்கு மேல் எதிர்பார்த்த அணியின் ஸ்கோர் 307-7 ஐம்பது ஓவர்களுக்கு என்றிருந்தது.

தோனியை பொறுத்துவரை ஒரு விசயத்தில் அவர் மிக தெளிவாய்இருந்தார் என்பது மட்டும் புரிந்தது..இதுதான் நம்ம டீமின் பவுலிங்,இதை வைத்துதான் மொத்த எதிரணியையும் வீழ்த்த வேண்டும்..அதற்கேற்றார் போல் களவியூகம் அமைக்கவேண்டும் என்பதுதான் அது!அதேபோல் இந்தபோட்டியில் தோனியின் துருப்புசீட்டு அஸ்வின்..இக்கட்டான கட்டத்தில் அஸ்வினின் பவுலிங் எதிரணிக்கு இன்னும் அதிக நெருக்கடியை கொடுத்தது.ஆரம்பத்திலிருந்தே அவர்களின் பார்ட்னர்ஷிப்களை சீரான இடைவெளியில் உடைத்து வந்ததே பாதி வெற்றியை இந்தியாவின் பக்கம் கொண்டுவந்து விட்டது.ABDவில்லியர்ஸின் ரன்வுட் தான் ஆட்டத்தின் திருப்புமுனை..ஜடேஜாவின் பந்தை ஏபிடி ஆஃப் சைடில் அடித்து ஆட,மோஹித் அதை மிஸ் ஃபீல்டிங் செய்ததாய் நினைத்து ABDஇரண்டாவது ரன்னுக்கு ஓட,சரியான நேரத்தில் தோனி வசம் பந்து சென்றடைய ஒரு பர்ஃபெக்ட் ரன்அவுட். அதன்பின் அடுக்கப்பட்ட சீட்டுகட்டுகளாய் விக்கெட்கள் விழ ஒரு ஆகச்சிறந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை இந்தியா தனதாக்கி கொண்டது.

பங்காளிகளை ஜெயித்தது,ஒரு முன்னணி அணியுடனான அபார வெற்றி இவையெல்லாம் இந்தியாவுக்கு,இந்த உலககோப்பையை நோக்கி செல்வதற்கான வெளிச்ச பாதையை காட்டியிருக்கிறது..

இன்னும் செல்லவேண்டியதூரம் அதிகம் இருக்கின்றது...போலவே பல தடைகளும்!!அதனாலென்ன?? உடைப்பதற்காகதானே தடைகள்!படைப்பதற்காகத்தானே சாதனைகள்!!

  தடை அதை உடை!!!புது சரித்திரம் படை!!கமான் இந்தியா.......கமான்!!! #WEWON'TGIVEITBACK