செவ்வாய், 9 டிசம்பர், 2014

தமிழன் என்ன சோதனை எலியா?-மீத்தேன் பயங்கரம்

தமிழகத்தின் நெற்களஞ்சியம்,சோழநாடு சோறுடைத்து..மாடுகட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டி போரடித்த சோழ நாடு, என்றெல்லாம் பெருமை இப்பூமிக்கு உண்டு.ஆனால் இனியும் இதுபோல மார்த்தட்டி பெருமைபேசிக்கொண்டு இருந்தோமேயானால் தமிழனை போல ஒரு ஈனா வானா வேறு எங்கும் இருக்கமுடியாது என்றுதான் அர்த்தம்...காவேரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர்,திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி விவசாயிகள்/மக்களின் ஒட்டுமொத்த வாழ்வும் மயிரிழையில் தொக்கி நிற்கிறது.அவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்காகவே ஒரு திட்டத்தை ஆள்பவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.அதுதான் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம்!!


 மன்னார்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பூமிக்கு கீழ் நிலக்கரி இருப்பதை மத்திய இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியத்துறை கண்டறிந்துள்ளது.இந்த நிலக்கரி படிமங்களின் மீது மீத்தேன் எனும் ஒருவித வாயு இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த வாயு எரிபொருளாக உபயோகபடுத்தவல்லது.இந்த மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்திற்காக ஹரியானாமாநிலத்தை சேர்ந்த கிரேட் ஈஸ்ட்டர் எனர்ஜி என்ற நிறுவனத்துடன் 2010 ஆம் ஆண்டு அப்போதைய மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.இந்த மீத்தேனானது மிக எளிதில் தீப்பற்ற கூடியது என்பதும்,இத்தனை அபாயகரமான வாயுவை எந்த அளவுக்கு எச்சரிக்கை உணர்வோடு கையாள போகிறார்கள் என்பதும் ஒருபக்கம் இருந்தாலும்..


இத்திட்டத்தினால் பூமியின் கீழ் பல்லாயிரம் அடி ஆழத்தில் உள்ள வாயுவை வெளியே எடுக்க இவர்கள் போட போகும் ஆழ்துளை கிணறுகள் தான் ஒட்டுமொத்த தமிழர்களின் வாழ்வையும் சூறையாடப்போகும் எமன்!!

"என்னப்பா பெருசா பில்டப் குடுத்துகிட்டே இருக்க?இந்தியாவுல இப்ப இருக்க எரிபொருள் பஞ்சத்துக்கு..நாமளே ஒரு எரிபொருளை தயாரிக்க முடிஞ்சா நல்லதுதானே?என்ன நாம தண்ணிக்காவ பூமியில போர் போடுற மாதிரி,அவுங்க பூமியில ஆழமா போர் போடபோறாங்க அவ்ளோதானே?"என்று இதுவரை அலட்சியமாய் இதை படித்து வந்தவர்கள் மனதை கொஞ்சம் திடமாக்கி கொள்ளுங்கள்.உங்களுக்காக காத்திருக்கிறது அடுத்தடுத்த அதிர்ச்சிகள்!!

ஆழ்துளை கிணறு மூலம் பூமியின் அடி ஆழத்தில் உள்ள நிலக்கரி படிமங்களுக்கும்,பாறைகளுக்கும் இடையே பரவியுள்ள மீத்தேனை வெளியே எடுக்கப்போகிறார்கள் இதுதான் திட்டம்..கேட்பதற்கு மிக எளிமையாய் இருக்கிறது அல்லவா?!ஆனால் நிதர்சனம் அதுவல்ல.

மீத்தேனை எடுப்பதற்காக சுமார் ஆறாயிரம் அடி ஆழத்திற்கு பூமியில் துளையிட்டு,பின் அதிலிருந்து பல்லாயிரம் மீட்டர் நீளத்திற்கு பக்கவாட்டில் துளையிடப்படும்.ஒரு ஆழ்துளையிலிருந்து பல்வேறு பக்கவாட்டு துளைகள் போடப்படும்.பின் இந்த துளைகள் வழியே வேதிப்பொருட்களை மிக அதிக அழுத்தத்தில் உட்செலுத்தி அடிஆழத்தில் உள்ள பாறைகளில் விரிசல் ஏற்படுத்தப்படும்.இதனால் அந்த பாறைகளின் இடையே சிக்கியிருக்கும் மீத்தேன் வாயுவானது வெளியேறி,மேலிருந்து அனுப்பபட்ட உயர் அழுத்த ரசாயன கலவையோடு கலந்து வெளியே எடுக்கப்படும்.

வெளியே எடுக்கபட்டபின் அந்த ரசாயன கலவையிலிருந்து மீத்தேன் மட்டும் தனியே பிரிக்கப்படும்.இப்படி ஒரு ஆழ்துளை கிணறிலிருந்து மீத்தேனை எடுக்கும் Process-க்கு ஆண்டொன்றிற்கு நானூறு டேங்கர் லாரி அளவிற்கு தண்ணீர் தேவை.ஒரு ஆழ்துளை கிணற்றிற்கு மட்டும் ஐந்து நாட்கள் நடக்கும் இந்த நீரியல் விரிசல் முறைக்கு 5கோடியே 66லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை.மொத்தம் இரண்டாயிரத்திற்கும் மேல் காவேரி டெல்டாவை சுற்றி ஆழ்துளை கிணறுகள் அமைப்பதாய் திட்டமாம்.அதுமட்டுமில்லாது தொடர்ந்து முப்பது ஆண்டுகளுக்கு இப்பகுதியிலிருந்து மீத்தேனை உறிஞ்சி எடுக்கப்போகிறார்கள்.

இன்னும் எளிமையாய் சொல்வதென்றால் மேட்டூர் அணையின் கொள்ளளவான என்பது டிஎம்சி தண்ணீரை இந்த ஆழ்துளை அரக்கன்கள் நான்கே மாதத்தில் குடித்து தீர்க்குமென்றால் நீங்களே கணக்கு போட்டு கொள்ளுங்கள்.முப்பது வருடத்தில் காவேரி பாய்ந்த இடம் பாலைவனமாய் மாறி நிற்கும்.

காவேரியில் தண்ணீர் ஓடுவது என்பதே கர்நாடகாக்காரன் ஏதோ மனசு வைத்து போனா போவுதே என்று பிச்சை போட்டால்தான் உண்டு.அப்படியிருக்க இத்திட்டத்திற்கான தண்ணீரை காவிரியிலிருந்து மட்டுமே எடுப்போம் என்று சொல்லுவதெல்லாம் பணம் சம்பாரிக்க வேண்டி இந்த தனியார் நிறுவனங்களும்,அரசும் நடத்தும் பித்தலாட்டமேயன்றி வேறேதும் இல்லை.

இப்படி ஒட்டுமொத்த நிலத்தடி நீரையும் உறிஞ்சிவிட்டால்,வெற்றிடம் ஏற்பட்டு,கடல்நீர் உட்புக ஆரம்பிக்கும்.அதோடு மட்டுமில்லாமல் இதற்காக பூமியில் செலுத்தபடும் நச்சு தன்மையுள்ள வேதிபொருட்கள் தொடர்ந்து மண்ணை மலடாக்கி விவசாயம் மட்டுமல்ல,வேறெந்த சிறு புல்பூண்டும் முளைக்காத பொட்டல்காடாய் மாற்றிவிடும்!இந்த நச்சுபொருட்கள் காற்றில் கலந்து சுவாச மண்டலத்தை நச்சு மண்டலமாக்கிவிடும்.அதன்பின் என்ன?மீத்தேனை சுவாசித்து,மீத்தேனை குடித்து,மீத்தேனை உண்டு சாவதை தவிர தமிழனுக்கு வேறு வழியில்லை.

ஒருபக்கம் கூடங்குளம்,மறுபக்கம் மீத்தேன்..இப்படி ஆளும் அரசு எதை சோதனை செய்து பார்க்க நினைத்தாலும்..அதன் தொடக்கம் என்னவோ தமிழ்நாடு தான்.ஏற்கனவே இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.இன்னுமும் தமிழ் சமூகம்,தமிழ்நாட்டில் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் விசயம்தானே,நமக்கென்ன வந்தது என வழக்கமான அலட்சியத்தோடு தூங்கி கிடந்தால்..இந்த இடம் சுடுகாடாய் மாறி நிற்கும்..பிறகேது நமக்கு விழிப்பு?நிரந்தர தூக்கம் தான்.

கூடங்குளம் கட்டுமான பணிகள் முடிந்தபின்,அதற்கெதிரான போராட்டங்கள் வலுத்தன.ஆனாலும் அம்மக்களின் அழுகுரல் சிறிதும் ஆளும்வர்க்கத்தின் காதுகளுக்கு எட்டவில்லை.அவர்கள் அப்படித்தான்.நாம் தான் இனி எச்சரிக்கையாய் இருக்கவேண்டும்.தொடங்கிய திட்டங்கள் இனி வளரவிடாமல் போராடி தடுக்கவேண்டியது நம் கடமை.

நான் இப்போ என்ன செய்யணும்?என்ற கேள்வி இப்போது உங்களில் யாருக்கேனும் மிச்சமிருந்தால்,அல்லது எனக்கு கிடைத்த இந்த இயற்கை தந்த காற்றையும்.தண்ணீரையும் காப்பாற்றி என் அடுத்த தலைமுறைக்கு தருவது என் கடமை என்று நினைத்தீர்களேயானால்..நீங்கள் செய்யவேண்டியது இதுதான்..இப்படி ஒரு திட்டம் செயல்பட போகிறது,அப்படி ஏற்பட்டால் இவ்வளவு பின்விளைவுகள் ஏற்படும் என்பதை ஒவ்வொரு தமிழனிடமும் எடுத்து செல்லவேண்டும்.திரைப்படத்தில் மக்களை காப்பாற்றும் ஆபத்பாந்தவனாய் வரும் எந்த நாயகனும் நிஜத்தில் ஒருபோதும் வரப்போவதில்லை.அதனால் நம் பிரச்சனைகளை தீர்க்க நாம் தான் போராடவேண்டும்.

இணையத்தில் சொல்வதால்/எழுதுவதால்  என்ன ஆகிவிடப்போகிறது..என்றெல்லாம் எண்ணுவதை விடுங்கள்.மிகப்பெரிய காட்டுத்தீ ஒரு சிறு நெருப்பு பொறியிலிருந்து தான் உருவாகிறது.அதனால் முடிந்தவரை இதை பகிருங்கள்/விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்..நம்மால் முடிந்ததை செய்வோம்.நிச்சயம் முடியும் என்று செய்வோம்.


கடைசியாய்..
இத்திட்டத்தை எதிர்த்து குரல் கொடுப்பது தான்,வாழ்நாள் முழுக்க மண்ணுக்காகவே வாழ்ந்து மண்ணிலே விதையான இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாருக்குநாம் செலுத்தும் குறைந்தபட்ச மரியாதையாய் இருக்கும்.

நன்றி: மே17 இயக்கம்
படங்கள் : கூகுள் இமேஜஸ்