திங்கள், 22 ஏப்ரல், 2013

மனசுக்காரர்கள் பூமி!

 இன்றைய தேதியில் நீங்கள் அதிகமாக பயம்கொள்ளும் விஷயம் எதைப்பற்றியதாக இருக்கும் என யாரிடமும் கேட்டால் வரக்கூடிய பதில்களில் "சக மனிதன் தான்" என்கிற பதிலும் நிச்சயம் இடம் பெற்றிருக்கும்!மனுசனை மனுசன் அடிச்சு சாப்பிடுற காலம்யா..புரிஞ்சு நடந்துக்க..!என்பது போன்ற அறிவுரைகளை எப்போதும் கேட்டுகொண்டிருக்கிற தலைமுறை தான் நாம்.அதையெல்லாம் தாண்டி இன்னமும் மனசுக்குள் ஈரத்தோடு மனிதம் வளர்த்து, வாழ்ந்துகொண்டிருக்கின்ற மனிதர்களும்நம்மைச்சுற்றி இருக்கத்தான் செய்கிறார்கள்.அதுபோலானதொரு நல்ல மனசுக்காரரை பற்றிய பதிவுதான் இது..


வறுமையின் பிடியில் வாடியநாட்கள் அவை..இப்போதும் "வாழ்ந்துகெட்ட குடும்பங்க அது" என்று யாரவது,யாரையாவது அடையாளம் அறிமுகப்படுத்தினால் எனக்கு என் சிறு வயது நினைவுகள்தான் மனதில் நிழலாடும்.ஊரில் எங்கள் தாத்தா செல்வாக்காக வாழ்ந்தவர்.பெரியாரின் தி.க.கட்சியால் தீவிர ஈடுபாடு கொண்டவர்.தாத்தாவின் மறைவு எங்கள் குடும்பத்திற்கே பேரிழப்பு!அப்பா சொந்தமாய் தொழில்செய்து ஏகப்பட்ட நஷ்டம்.குடியிருந்த வீடுவரை விற்றாயிற்று!அடுத்து என்ன செய்வது என்று தெரியாதநிலை.இருந்த எல்லாவற்றையும் இழந்துவிட்டாலும் அப்பா வாழவேண்டும் என்ற நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை..ஒருவேளை அது,பிள்ளைகளாகிய எங்கள் மூவரின் மீதான நம்பிக்கையாய் கூட இருந்திருக்கலாம்!

அதன்பின்,ஒரு சிறிய இடத்தை வாடகைக்கு பிடித்து 'டிபன் கடை' ஒன்றை தொடங்கினோம்..கடை என்பதை ஒரு சொல்லாடலுக்காக மட்டுமே இங்கே
பயன்படுத்தியிருக்கிறேனே தவிர,உண்மையில் அது மெயின்ரோட்டை ஒட்டினாற்போல்,ரெண்டு மரபென்ச்சுகள்,ஆறு கட்டை நாற்காலி,ஒரு தோசைக்கல் மற்றும் ஒரு விறகுஅடுப்பு இவற்றை உள்ளடக்கிய சிறியஇடம் அவ்வளவே!அங்கு வியாபாரமும் பெரிதாய் சொல்லிகொள்ளும் அளவிற்கு இருந்ததில்லை.இப்போது யோசித்து பார்த்தால்,அந்தகடையை நடத்தியதில் இருந்த ஒரே நல்ல விசயமாய் தோன்றுவது,இரவு ஒருவேளை சாப்பாடாவது வயிறு நிறைய கிடைத்தது என்பதுதான்!நைட்டு கடையில் மீதமாகும்
பரோட்டாக்கள் தான் மறுநாள் காலை உணவாய் இருக்கும் பலநாட்களில்,சமயங்களில் மதியஉணவும் அதுவாகவே!அந்த கடைக்கும் போட்டியாய் அருகில் சில கடைகள் முளைக்கவே இங்கு வியாபாரம்             படுமந்தமாகியது.ஒவ்வொரு நாள் மாலையும் கடைக்கு தேவையான
மளிகை சாமான்கள்,விறகு போன்றவற்றை வாங்குவதற்கே தடுமாறவேண்டிய சூழல்.அப்படியே பொருட்களை கடனுக்கு வாங்கிபோட்டாலும்,இரவு கடை அடைக்கையில் பணம், பாக்கி கொடுக்கவேண்டியவர்களுக்கு கொடுத்ததுபோக மிஞ்சுவது என்னவோ, நாங்கள் சாப்பிட்ட சாப்பாடு மட்டுமே!

ஒருநாள் மாலைஐந்துமணி ஆகிவிட்டது.அன்றைய நாள் கடையை தொடங்க வேண்டுமெனில் குறைந்தது 200ரூபாயாவது தேவை..இனி யாரிடமும் கடன் கேட்க வழியில்லை என்பதாலோ என்னவோ அப்பா மூலையில் முடங்கிவிட்டார்.ஏதாவது செய்தாக வேண்டும் என்று மட்டும் தோன்றியது
எனக்கு.யாரிடம் கேட்பது என்பது ஒருபிரச்சனை என்றால்,ஒரு சிறுவனை நம்பி யார் 200ரூபாய் கடனாய் தருவார்கள்? என்பது மாபெரும் பிரச்சனை.என்ன செய்வது என்று யோசித்த நிலையில்தான் 'ரகு மாமா'வின் நினைவு வந்தது.மாமா என்றால் சொந்தமெல்லாம் கிடையாது..ரகு மாமா முன்பு அப்பாவிடம் வேலை பார்த்தவர்.அப்பாவுக்கும்,அவருக்கும் ஏற்பட்ட ஒரு சிறு மனவருத்தத்தில்,அப்பா அவரை வேலையைவிட்டு நீக்கிவிட்டார்.அதன்பின் அவரை எப்போதாவது எங்கள் வீட்டின் அருகே இருக்கும் பெட்டிக்கடையில் பார்ப்பதுண்டு. சிசர் சிகரட்டை ஆழமாய் உள்ளிழுத்தபடியே "எப்படியிருக்க தம்பி" என்பார்.நானும் சிரிப்பை பதிலாக்கிவிட்டு செல்வேன்.இப்போது ஏதோஒரு பர்னிச்சர் கம்பெனியில் தவணை வசூலிக்கும் வேலை செய்து கொண்டிருந்தார்.

சரி,அவரிடமே பணம் கடனாய் கேட்டுவிடலாம் என்று நினைத்தாலும்,தருவாரா என்ற கேள்வியும் அறுத்து கொண்டே இருந்தது.அது மாலைநேர வசூலுக்கு அவர் வருகின்ற நேரம்தான்.நான் அவருக்குமுன்பே..எப்போதும் அவர் தம்மடிக்க வரும் அந்த பொட்டிகடையில் காத்திருந்தேன்..வழக்கத்தை விட சிறிது தாமதமாக ரகுமாமா வந்தார்.எந்த
ஒரு மனிதனும் வாழ்கையில் சந்திக்க விரும்பாத/கூடாத  தருணம் நன்கு பழகியவர்களிடம் கடன் கேட்கும் சந்தர்ப்பமாய்த்தான் இருக்கும்.எப்படி ஆரம்பிப்பது என தெரியாது,கண்கள் தழுதழுக்க நின்று கொண்டிருந்தவனை பார்த்து,

"என்ன தம்பி,இங்க நின்னுகிட்டிருக்க?"என்றார்.

கண்களை இருந்து இறங்கிய முதல் துளி கண்ணீரோடு,"மாமா,நைட்டு கடை போட காசில்ல,மளிகை சாமான் வாங்க ஒரு 200ரூபாய் பணம் வேணும் மாமா"என்றேன்.

என்னிடமிருந்து இதை சற்றும் எதிர்ப்பாக்கதவராய்,"மொதல்ல நீ கண்ணை தொடைடா" என்றவாறே,பாக்கெட்டிலிருந்து இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து நீட்டினார்.

தேங்க்ஸ் மாமா,நாளைக்கு இதே நேரம் பணத்தை திருப்பி குடுத்திடுறேன் என்றவனிடம்,

"மொதல்ல நீ பணத்தை கொண்ட அப்பாகிட்ட குடுத்து கடைய போட சொல்லு"என்றார்.

இப்போது நினைத்து பார்கையில் ஒரு விசயம் புரிகிறது. நிச்சயம் அந்தப்பணம் அவருடையதாக இருந்திருக்க வாய்ப்பில்லை.அது அவர் கம்பெனிக்கு கட்டவேண்டிய கலெக்சன் பணமாகத்தான் இருக்கும்.ஒருவேளை கம்பெனிக்கு இது தெரிந்தால்,அவர் வேலையைக்கூட இழக்க நேரிடலாம்.இன்னும் சொல்லப்போனால் அவர் அந்த உதவியை செய்யவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.ஆனாலும் என் கண்ணீர் துளிகளுக்கு அவர் காட்டிய இரக்கமும்,என் அப்பாவிடம் சம்பளம் வாங்கியவர் என்ற அந்தஉணர்வை மறக்காததும்..தேவை என்று கேட்ட நொடியில் கொஞ்சமும் யோசிக்காது உதவிய அந்த மனசும்,மனிதம் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்பதற்கான அடையாளங்கள்..!

அன்று ஒருநாள் மட்டுமல்ல,இதற்குமேல் கடையை நடத்தவேண்டாம் என முடிவெடுத்த நாள் வரை..எத்தனையோ முறை அவர் பணம் கடனாய் கொடுத்து நாங்கள் கடையை நடத்தியிருக்கின்றோம்.இப்போது எங்களின் மீதான வறுமையின் பிடி கொஞ்சம் தளர்ந்துவிட்டது..படிப்பிற்க்காவும்,வேலைக்காகவும் அந்த ஊரைவிட்டு வேறு ஊர் வந்தாயிற்று..எதையோ தொலைத்துவிட்டு,தொலைத்தது கிடைத்துவிடாதா என்று ஏக்கத்தோடு எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் நகரவாழ்க்கை ஆரம்பத்தில் வித்யாசப்பட்டாலும்..இப்போது நானும் அந்த ஏதோ ஒன்றை தொலைத்துவிட்டு,அதை தேடி ஓடும் கூட்டத்துள் ஒருவன்..!எப்போதெல்லாம் இந்த நகரத்து மனிதர்கள் மீதும்,வாழ்க்கையின் மீதும் நம்பிக்கையின்மை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் ரகுமாமாவை நினைத்துகொள்வேன்..நம்பிக்கை தானாய் ஊற்றெடுக்கும்.

எப்போது ஊருக்கு சென்றாலும்,அவர் வழக்கமாய் நிற்கும் பெட்டிகடையில் அவரை தேடி விழிகள் அலையும்.ஆனாலும் இதுவரை அவரை பார்க்கமுடியவில்லை..இந்தமுறை ஊருக்கு செல்கையில் கண்டிப்பாய் பார்த்தே ஆகவேண்டும்..எப்போதும் அவர்தான் என்னிடம் வலிய பேசுவார்.இந்தமுறையாவது அவர் என்னை கேட்பதற்கு முன்பே நான் கேட்கவேண்டும் அவரை,
 "நல்லாயிருக்கீங்களா மாமா"என்று!ஏனென்றால் இன்று வாழும் இந்த வாழ்க்கை,ஒரு காலத்தில் அவர் போட்ட பிச்சைதானே?!!