செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

திருட்டு வி.சி.டி யும்!குபீர் போராட்ட திரைபிரபலங்களும்!

அது 'பாட்ஷா' வெளியாகிருந்த தருணம்...எங்க ஊரு தியேட்டர் மட்டுமில்ல..ஒட்டுமொத்த தமிழ்நாட்ல உள்ள அத்தனை தியேட்டரிலும் படம் ஹவுஸ்ஃபுல்லா போயிட்டுருந்துச்சு..அப்பதான் கேபிள் டிவி தமிழ்நாட்ல கால் ஊன்றி நிக்க ஆரம்பிசிருந்த நேரம்!படம் ரிலீஸ் ஆகி நாலஞ்சு நாள்லயே கேபிள் டிவில சுடசுட சுட்டு போட்டானுக..இத்தனைக்கும் படம் லோக்கல்லயே ரெண்டு தியேட்டர்ல ஓடிகிட்டு இருந்துச்சி.இந்த விசயம் எப்படியோ ரஜினி ரசிகர் மன்றத்துக்காரங்க காதுக்கு போயி,அவங்க கேபிள் டிவி ஆபீஸ்க்குள்ள பூந்து சிஸ்டம்,ஆண்ட்டனான்னு எல்லாத்தையும் அடிச்சி நொறுக்கி..பெரும் பிரச்சனையாகி போலீஸ் கேஸ் ஆகுற லெவலுக்கு போயிருச்சி.கிட்டத்தட்ட இருபது வருஷம் ஆகப்போகுது..இந்த சினிமாவுக்கும் பைரசஸிக்குமான போராட்டம்!

இத்தனை வருஷத்துல கேசட்...சி.டி யாகி..சி.டி......டி.வி.டி ஆகி இப்போ டோரன்ட் வரைக்கும் வந்துருச்சி.ஆனாலும் இதுக்கு தீர்வு மட்டும் கிடைக்கல..கிடைக்கலன்றத விட,சினிமான்ற மக்களுக்கான ஊடகத்தை அந்த மக்களுக்கு நியாயமா கொண்டு சேக்காத வரைக்கும் இன்னும் இருபது வருஷம் ஆனாலும் இந்த பிரச்சனை தீரவே தீராது!

உடனே நான் திருட்டு வி.சி.டி. ஆதரவா பேசுறேன்னு யாரும் பொங்க ஆரம்பிச்சிர வேண்டாம்.இன்னிக்கு இருக்க நிலமையில ஒரு மிடில்கிளாஸ் குடும்பம் தியேட்டருக்கு போயி படம் பாக்குறதுன்றது ஒரு பெரிய விசயமா,ஒரு ஆடம்பர செலவா மாறிடுச்சி.தியேட்டர்ல முதல் வரிசையோ,கடைசி வரிசையோ எதுவா இருந்தாலும் ஒரே விலைன்னு டிக்கெட்ல மட்டும் சமதர்மத்தை கடைபிடிச்சிட்டு,இன்டர்வெல்ல ஒரு பாப்கார்ன் விலை நூறு ரூபாய்னு விக்கிறானுக!

இதுல உள்ள நுழையறப்பவே ஏர்போர்ட் செக்யூரிட்டி செக்கிங்கையே மிஞ்சிற அளவுக்கு ஒவ்வொரு ஆடியன்ஸையும் செக்கிங் பண்றானுக.ஒரு பாதுகாப்புக்காக தான் இப்படி பண்றாங்கன்னு நினைச்சா நம்மளை மாதிரி ஒரு லூசுக்கூ......முட்டை யாரும் இருக்கமுடியாது.இவனுக பண்ற செக்கிங் எல்லாம்,தண்ணிபாட்டிலை எவனும் உள்ள கொண்டு வந்துறக்கூடாது,ஸ்நாக்ஸை எவனும் உள்ள எடுத்துட்டு வந்திடகூடாதுன்றதுக்கு தான்!பின்னே,அதையெல்லாம் நாம வெளிலலருந்து கொண்டு போய்ட்டா அப்புறம் இவனுக கேண்டீன் பிஸ்னஸ்ல ஒண்ணுக்கு மூணுன்னு லாபம் வச்சி சாதாரண மக்களை கொள்ளை அடிக்கமுடியாதுல்ல?!

இன்டர்வெல்ல சீட்டை விட்டு எந்திருச்சி வெளில வர்றவன்,ஒரு காபி விலை அறுபது ரூவான்னு தெரிஞ்சதும்,ஒண்ணுக்க மட்டும் இருந்துட்டு மறுபடி சீட்ல போயி உக்கந்துக்கிறான்.இதுதான் நிதர்சனம்.இது பத்தாதுன்னு பார்கிங்ன்ற பேர்ல நடக்குற கொள்ளைய பத்தி சொல்லனும்னா நான் இன்னும் விடியவிடிய ஒக்காந்து டைப் பண்ணனும்.பார்கிங்ல கொள்ளை அடிக்கிறதுக்கு மட்டும் டிசைன் டிசைனா யோசிக்கிரானுக.இப்பல்லாம் ஹவர் கணக்குல தான் காசு வாங்குறதே..அது முப்பது ரூபாயிலருந்து அம்பது ரூபாய் வரைக்கும் அவுங்கவுங்க இஷ்டத்துக்கு!

காசு இருக்கவனுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்ல.ஆனா அன்றாட பிரச்சனைகளிலிருந்து கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவனும்னு நினைச்சு வர்றவங்களுக்கும்,குடும்பத்தோட கொஞ்சம் நேரம் செலவழிக்கலாமேன்னு வர்றவங்களுக்கும் இங்க நடக்குற கொள்ளையெல்லாம் பாத்தா மறுபடி தியேட்டருக்கு போகனும்ன்ற நினைப்பு ஜென்மத்துக்கும் வராது.

கொஞ்ச நாள் முன்ன வரைக்கும் படம் ரிலீஸ் ஆகி மறுநாளே பிரஸ் மீட் வைக்கிறது தான் ட்ரெண்டு!இப்ப உள்ள ட்ரெண்டு என்னான்னா,படம் ரிலீஸ் டேட் கன்பார்ம் ஆனவுடனயே பிரஸ்ஸை கூப்பிட்டு உக்கார வச்சி,திருட்டு விசிடிக்கு எதிரா அறிக்கை விடனும்..முடிஞ்சா இன்னும் ஒரு ஸ்டெப் மேல போயி,தாங்களே களத்துல இறங்கி திருட்டு விசிடி எந்த பொட்டிகடையில எல்லாம் விக்கிறாய்ங்க அல்லது எந்த கேபிள் டிவியில எல்லாம் புதுப்படம் போடுறாங்கன்னு கண்டுபிடிச்சி நேரா போயி மடக்கி பிடிக்கிறது தான்.அப்புறம் முக்கியமா இந்த மாதிரியான களப்பணியின்(!) போது அவுங்க பண்ற வீரதீர பராக்ரமங்களை எல்லாம் பதிவு பண்ண கேமராவை தூக்கிட்டு கூடவே ஒரு ஆளு போகணும்.அப்பதானே அதை யூடூப்ல அப்லோட் பண்ணி படத்துக்கு இன்னும் பப்ளிசிட்டி பண்ணலாம்!

தான் படம் ரிலீஸ் ஆவுறப்ப மட்டும் இப்படி திடீர் சமூகப்போராளியா மாறி,பொங்கி போராட்டம் நடத்தி,அநீதிக்கு எதிரா குரல் குடுக்குற இந்த பிரபலங்கள்,அவுங்க படம் ரிலீஸுப்ப முதநாளே க்யூவுல நின்னு டிக்கெட் எடுத்து படம் பாத்து வெளில வர்றப்ப மொத்த பர்ஸையும் வழிச்சி குடுத்துட்டு வயிறெஞ்சிகிட்டே வீட்டுக்குபோறானே,அவனுக்காகவும் கொஞ்சம் குரல் குடுக்குலாமே?!

சினிமான்றது மக்களுக்கானது.அதை நியாயமா,அவனை சந்தோசப்படுத்துற வகையில அவன்கிட்ட கொண்டுபோயி சேத்தா அவன் ஏன் திருட்டுத்தனமா பாக்கபோறான்?!குற்றஉணர்ச்சியோட/மட்டமான தரத்தில உள்ள பிரிண்ட்டை பாக்கணும்னு அவனுக்கு மட்டும் ஆசையா என்ன?

திரும்ப திரும்ப சொல்றதெல்லாம் ஒண்ணுதான்.ஆடியன்ஸ்-ங்குறவன் தங்கமுட்டை போடுற வாத்து மாதிரி!(வாத்துன்றது அசூயையா இருந்தாலும் ஒரு வகையில அது பொருத்தம் தான்)..சினிமாக்காரங்களே,உங்க சுய லாபத்துக்காகவும்,பேராசைக்காகவும் ஒரேஅடியா அவனை கொன்றாதீங்க!அப்புறம் நட்டம் உங்களுக்குத்தான்!