வியாழன், 27 பிப்ரவரி, 2014

தலைகீழ் விகிதங்கள்-ஒரு வாசிப்பனுபவம்!

எழுத்தாளர் எஸ்.ரா அவர்கள் தமிழின் மிகச்சிறந்த நூறு நாவல்களுள் ஒன்றாக 'தலைகீழ் விகிதங்கள்' புத்தகத்தை குறிப்பிட்டிருந்நதார்.இணையத்திலும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் என்று பலரும் சொல்லவே,புத்தகத்தை வாங்க ஒருபெரும் போராட்டம் நடத்தி(!) ஒருவழியாய் வாங்கி,படித்தும் முடித்தாயிற்று!


நாவலின் முன்னுரையில் இந்த புத்தகம் எழுதவேண்டி இருந்ததின் அவசியத்தையும்,இதற்கு கிடைத்த வரவேற்பை பற்றியும்,பிற்பாடு வாசகர்கள் இதேப்போல் ஒரு நாவலை மீண்டும் எழுதசொல்லி வற்புறுத்துகையில்,அறுபது வயதான நான் எப்படி மீண்டும் முப்பது வயது இளைஞனாக மாறுவது சாத்தியமில்லையோ அதுமாதிரி மீண்டும் இதுப்போல் ஒரு நாவல் எழுதுவதும் சாத்தியமில்லை என்று புறக்கணித்ததை பற்றியும் நாவலாசிரியர் நாஞ்சில்நாடன் வாசகர்களிடம் பகிர்ந்துள்ளார்.அதுமட்டுமில்லாமல் இந்த நாவல்தான் பின்னால் இயக்குநர் தங்கர்பச்சனால் சொல்ல மறந்த கதை என்று திரைப்படமாக எடுக்கப்பட்டது.உண்மையில் இந்த தகவலை படித்ததும் சற்றே ஏமாற்றமாய் தான் இருந்தது.ஏனெனில் புத்தகத்தை வாசிக்கையில் கிடைக்கவேண்டிய சுவாராஸ்யம் குறைந்துவிடுமே என்பதனால் தான்!நல்லவேளையாக சொல்லமறந்த கதை படத்தை பார்த்து வெகுநாட்களாகி விட்டதால் அவ்வளவாய் காட்சிகள் நியாபகத்தில் இல்லை.இன்னொரு விசயம்,இயக்குநர் தங்கர்பச்சன் இந்த நாவலை படமாய் எடுக்க விருப்பபட்டு,அதற்காக கொடுத்த பணத்தில் தான் சில ஆண்டுகளுக்கு முன் இதய அறுவைசிகிச்சை செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.உண்மையில் இதை படித்ததும் இதற்காக சந்தோசப்படுவதா இல்லை வருத்தப்படுவதா என்று புரியாத மனநிலையில் இருந்தேன்.

சிவதாணு படித்துவிட்டு வேலை கிடைக்காது பெரும் மனப்போராட்டத்துடன் வாழும் ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்தவன்.அவனுக்கு கீழ் ஒரு தங்கை,இரண்டு தம்பிகள் என அவனுக்கு கிடைக்கும் போகும் வேலையை நம்பி வறுமையை சகித்துக்கொண்டு வாழ்கின்ற குடும்பம்.வேலைக்காக எவ்வளவு முயற்சித்தும் எந்த பலனும் இல்லாத நிலையில்,சிவதாணுவின் குடும்ப நண்பர் மூலமாக,ஊரின் பெரிய மனிதரும் ஹோட்டல் உரிமையாளருமான சொக்கலிங்க பிள்ளையின் மகளை மணம் முடிக்க முற்சிகள் நடக்கிறது.ஆரம்பத்தில் இருக்குடும்பங்களின் அந்தஸ்த்திற்கும் இடையே உள்ள வேறுப்பாட்டை சிவதாணு உணர்ந்து முதலில் இந்த திருமணத்திற்கு மறுத்தாலும்,எல்லோரது தொடர்ச்சியான மூளைச்சலவையால் திருமணத்திற்கு சம்மதிக்கிறான்.இங்கிருந்து வெகுவேகமாய் பயணிக்கிறது கதை.

வசதி இல்லாதவன் என்ற ஒரே காரணத்திற்காக மாமனார் வீட்டில் சிவதாணுவுக்கு நடக்கும் அவமரியாதைகளையும்,இயல்பிலேயே தன்மானம் அதிகம் உள்ளவனுக்கு இந்த அவமரியாதைகள் தரும் வழிகளையும் சிவதாணு பாத்திரத்தின் வழியே வெகுநுணுக்கமாய் விவரித்துள்ளார் நாஞ்சிலார்.வாழ்க்கை பெரும் போராட்டமாய் நகர்கையில் எல்லாவற்றிற்கும் தீர்வாய் இருக்கப்போகும் அந்த வேலை கிடைத்ததா?பெற்றவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டு கணவனை தவறாய் பேசிவிட..அதனால் ஏற்படும் பூதாகரமான விளைவுகள்..அந்த பிணக்கை முதலில் யார் தீர்ப்பது என உருவாகும் ஈகோ போட்டிகள்,கடைசியில் சிவதாணு மனைவி பார்வதியோடு சேர்ந்தானா?என்பதையெல்லாம் சொல்லி நிறைவுப்பெருகிறது நாவல்.

சாதரண மனிதர்களின் ஆசைகள்,கனவுகள்,கோபங்கள்,வலிகள் ஆகியவற்றை மிக நுணுக்கமாய் அணுகி ஒரு அழகிய உணர்ச்சி போராட்டாமாய் இந்த நாவல் படைக்கப்பட்டுள்ளது.கதையின் ஊடேயே வரும் நாஞ்சில் மண்ணின் வட்டார வழக்கு சுவாரஸ்யமாய் இருந்தாலும் சில வார்த்தைகள் எனக்கு புரியவில்லை.இப்போதுதான் ஒவ்வொன்றாய் நண்பர்களிடம் கேட்டு அர்த்தம் தெரிந்து கொண்டிருக்கின்றேன்.நாவலை படித்து முடித்ததும் சொல்ல மறந்த கதை படத்தை பார்க்க வேண்டும்போல் தோன்றுகிறது.வேறொன்றுமில்லை,தங்கர் எப்படிஇந்த நாவலுக்கு திரைக்கதை அமைத்திருக்கிறார் என பார்க்க வேண்டிதான்!!

தலைகீழ் விகிதங்கள் அவசியம் படிக்கவேண்டிய நாவல்.

புத்தக விவரம்:
தலைகீழ் விகிதங்கள்
விஜயா பதிப்பகம்.
பக்கங்கள் : 296
விலை       : 130/-

சனி, 22 பிப்ரவரி, 2014

ராஜீவ் கொலையும்,வடஇந்தியர்களின் பொதுப்புத்தியும்

இந்தி பேசத்தெரியாதவனை எப்படி இந்தியனாய் ஏற்றுக்கொள்ளக்கூடாது என வட இந்தியர்களின் மூளையில் உறைந்து போயிருக்கிறதோ அதேபோல இந்த ராஜீவ் கொலை வழக்கிலும் சில முன்முடிவுகளை அவர்களாகவே எடுத்துக்கொண்டு மொத்த தமிழர்களையும் கொலை குற்றவாளிகளாவும் தேசத்துரோகிகளாகவும் பாவித்து அதை இன்றளவும் நம்பிக்கொண்டும் மற்றவர்களை நம்ப வைக்கவும் பெரும் பிரயத்தனப்பட்டுக் கொண்டுருக்கின்றனர்.இதில் வருத்தமான விசயம் என்னவென்றால் இதுமாதிரியான எண்ணம் அங்குள்ள பாமர மக்களுக்கு மட்டும்தான் என்றில்லை..மெத்த படித்தவர்களும் இதை பற்றிய எந்த புரிந்துணர்வும் இல்லாமல் தான் பேசுகின்றனர்.

ராஜீவ் காந்தியின் கொலை வரலாற்று சோகம் தான்.சிந்திக்க தெரிந்த எந்த மனிதனும் அதை ஆதரிப்பானில்லை!இன்றளவும் அதற்காக வருத்தப்பட்டு கொண்டிருக்கோம் தான்.ஆனால் ஒரு உயிர் பழியானதற்காக வாய்க்கிழிய மனிதநேயம் பேசும் இவர்கள்தான்,லட்சக்கணக்கில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு ஆதரவாய் ஆயுதங்களையும்,படைகளையும் கொடுத்து இந்திய அரசு பழிக்குபழி என்று செயல்படுகையில் மொத்த இனமும் அழிந்து சாவதை பார்த்து சந்தோசப்பட்டார்கள்!அப்போது ராஜீவ்க்காக மனிதநேயம் பேசியவர்களின் வாய்களில் இப்போது கோரப்பற்களில் ரத்தம் வழிய சிரிப்பதை காண சகிக்க முடியாதிருந்தது.

இப்போதும் அந்த கொலை வழக்கில் சம்பந்தபட்டவர்கள் என்று சொல்லி சாந்தன்,முருகன்,பேரறிவாளன் ஆகிய மூவரின் தலைக்குமேல் தூக்கு கயிறு தொங்கி கொண்டிருந்த வேளையில்,கொஞ்சமும் இரக்கமின்றி அவர்கள் சாகவேண்டியவர்கள் தான் என்றார்கள்.அவர்களை உசுப்பேற்றி அந்த வெறுப்பு கொஞ்சமும் நீர்த்து போய் விடாதபடி காங்கிரஸ் சார்பு வடஇந்திய ஊடகங்கள் கச்சிதமாய் பணியாற்றின..பணியாற்றிக்கொண்டும் இருக்கின்றன!

மூன்று நாட்களுக்கு முன் மூவரின் தூக்கு தண்டனையையும் ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது..என்னுடன் வேலை பார்க்கும் ஒரு வடஇந்தியர் என்னிடம் இப்படி கேட்டார். "அந்த கொலைக்காரய்ங்க மூணு பேருக்கும் தூக்கு தண்டனை கொடுக்காதது சரியா?தப்பா?" என்று இந்தியில் கேட்டுவிட்டு,நான் என்ன பதில் சொல்லப்போகிறேன் அதைவைத்து என்னை எப்படி மடக்கலாம் என்ற நோக்கில் அர்த்தமாய் பார்த்தார்.இவர்களுக்கு இதே வேலைதான்.மற்ற விசயங்களில் அவர்களுடன் சுமூகமாய் இருந்தாலும் விடுதைப்புலிகள்பற்றியோ,ராஜீவ் கொலையில் இந்த அப்பாவிகள் பக்கமிருக்கும் நியாயத்தை பற்றி பெசுகையிலோ நம் பொறுமையை சோதித்துவிடுவார்கள்.எனக்கு தெரிந்து கிட்டத்தட்ட எல்லோரும் இதே ரகம் தான்.அப்படி நியாயத்தை பேசுகையில் நீயும் தமிழன் தானே,அதனால் தான் அவர்களுக்கு ஆதரவாய் பேசுகிறாய்,அவர்கள் தேசத்துரோகிகள் அவர்களை ஆதரித்து பேசுவதும் தேசத்துரோகம் தான் என்ற அளவிற்கு போய்விடுவார்கள்.ஏற்கனவே இந்த விசயத்தில் நிறைய அனுபவப்பட்டிருகின்றேன்.

அதனால் உணர்ச்சிவசப்படாமல்,அந்த இந்திக்காரரை பார்த்து,"இரண்டு இத்தாலி கடற்படையினர் எந்த காரணமுமேஇல்லாமல் இரண்டு இந்திய மீனவர்களை சுட்டு கொன்றார்களே,அவர்கள் இருவருக்கும் தூக்குதண்டனை அளிக்கப்படமாட்டாது என உறுதி சொல்லி விசாரணைக்கு வரசொன்னதே இந்திய அரசு..நியாபகம் இருக்கா?கொன்னது அவுனுகதான்னு தெரியும்..இருந்து அந்த சலுகை அளிக்கப்பட்டது.ஆனா இவுங்க மூணு பேரும் சந்தேகத்தின் பேரில் தான் குற்றவாளிகள்.செஞ்ச தப்புக்கே தூக்கு இல்லாதபோது செய்யாத தப்புக்கு எதுக்கு தரனும் தூக்கு?" என்றேன்.எந்த பதிலும் சொல்லதோன்றாது அப்படியே அமைதியாகிவிட்டார்.பின்னால் யோசித்து பார்த்திருக்கக்கூடும்.

ராஜீவ் கொலையை பொருத்தவரையிலும் உண்மையை உரக்க சொல்ல வேண்டிய ஊடகங்களோ உண்மையை திரித்து சொல்வதிலேயே குறியாய் இருக்கின்றன.நம் மீதான வீண் பழிகளையும்,நம் தரப்பு நியாயங்களையும் பிற மாநில மக்களுக்கு யார் புரிய வைப்பது?யார் புரிய வைக்க போகிறார்கள்?ஆனால் இனியும் தாமதிக்காமல் இந்த உண்மைகள் எல்லோருக்கும் உணரவைக்க படவேண்டும்.ஒருவேளை அது முன்பே புரியவைக்கப்பட்டிருந்தால் இலங்கையில் இத்தனை தமிழர்கள் செத்து மடிந்திருக்க மாட்டார்கள்.

வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

கோலிசோடா/Moebius கொரியன் சினிமா


இங்கு எல்லோருக்கும் ஏதோ ஒரு அடையாளம் நாம் விரும்பியோ,விரும்பாமலோ இந்த சமூகத்தால் நமக்கு கொடுக்கப்படிருக்கிறது.பிடிச்சிருக்கோ பிடிக்கலையோ நாமும் அந்த அடையாளங்களை சுமந்து திரிந்தே வாழ பழகிவிட்டிருக்கிறோம்.ஆனால் எந்த அடையாளங்களுமே இல்லாமல்,ஏன் அவர்களின் உண்மையான பெயர்கூட மற்றவர்களுக்கு தெரியாமல்,அவரவர் வாய்க்கு வசதியான பெயர்களால் அழைக்கப்பட்டு,ஒருக்கட்டதில் அதில் ஏதோ ஒரு பெயராகவே மாறிவிடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.அப்படி எந்த அடையாளமும் இல்லமால் வாழ்பவர்களுக்கு திடீரென ஒரு அடையாளம் கிடைக்க அதை எப்படியாவது தக்க வைத்துகொள்ள போராடும் நான்கு பசங்களின் கதைதான் கோலிசோடா!!


நாலு பசங்க,அப்புறம் கோயம்பேடு மார்கெட் தான் கதைக்களம்னு சொன்னதும் அங்காடி தெரு டைப் கதையாஇருக்கும்னு நினைச்சா..சர்ப்ரைஸ்!!பசங்க படத்துல வர்ற அதே டீம் தான் இந்த படத்துலயும்..படம் ஆரம்பத்துல கொஞ்சம் ஸ்லோவோ இருந்தாலும் கதைக்குள்ள போக ஆரம்பிச்சதும் விறுவிறு தான்..கோயம்பேடு மார்க்கெட்டையே கன்ட்ரோல் வச்சிருக்க வில்லன்,ஒரு சந்தர்பத்துல அவனை பகைச்சிக்க வேண்டிய கட்டாயம் இந்த நாலு பசங்களுக்கும் ..அந்த பணபலமும் ஆள்பலமும் உள்ள கூட்டத்தை எதிர்த்து ஜெயிச்சாங்களா, தங்களோட லட்சியத்தை அடஞ்சாங்களா இல்லையான்றது தான் கிளைமேக்ஸ்.

படத்துல நாலு சின்னபசங்க சேந்து அத்தனை ரவுடிகளையும் அடிக்கிறது,கிளைமேக்ஸ்ல அத்தாம்பெரிய மார்க்கெட் தாதாவை அசால்ட்டா கடைக்குள்ள கட்டம் கட்டுறதுன்னு நிறைய தில்லாலங்கடித்தனங்கள் இருந்தாலும் திரைக்கதையோட வேகத்துலயும்,அந்த இடத்துல பசங்க அடிவாங்குறப்ப எப்படியாச்சும் வில்லனுகளை திருப்பி அடிச்சிடனும்னு நம்ம மனசு தவிக்கிறதுலயும் மத்த லாஜிக் கேள்விகள் எல்லாம் மறந்துபோயிடது.மோர் ஓவர்,நம்ம மாஸ் ஹீரோக்கள் ஹீரோயிசம்னு நினைச்சு பண்ற அக்கப்போர்களை கம்பேர் பண்றப்ப இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல!மொத்ததுல கோலி சோடா மூர்த்தி சிறுசானாலும் கீர்த்தி பெருசு!!
@@@@@@@@@@@@@@@@@@@

சில தினங்களுக்கு முன் இயக்குனர் வசந்தபாலன் ஒரு கொரியன் படத்தை பத்தி அவரோட முகப்புத்தகத்துல இப்படி எழுதியிருந்தாரு."உங்களுக்குஉண்மையாவே கட்ஸ் இருந்தா இந்த படத்தை பாருங்க"ன்னு சொல்லி ஒரு படத்தை பத்தி சொல்லியிருந்தாரு.அந்த படம் பேரு 'Moebius' .சரி அப்படி என்னதான் இருக்குதுன்னு நெனைச்சி அந்த படத்தை பாக்கனும்னு முடிவு பண்ணினேன்.பெரும்பாலும் ஹாரர் டைப் படங்களில் தான் கொரியன்ஸ் கில்லி..இதுவும் அதுமாதிரி படமாத்தான்  இருக்கும்னு நினைச்சேன்.பட்,இது டோட்டலா வேறமாதிரி.நம்ம ஊரை பொருத்தவரைக்கும் காமம்-ன்றது பொதுவெளியில் பேசக்கூடாத ஒரு அசிங்கமான விஷயம்.இங்க செக்ஸை பற்றிய புரிதல்களும் மிக கம்மி.ஒரு வயது வந்த ஒரு பையனோ,பெண்ணோ தங்களுக்கு வர்ற உடல்ரீதியான சாதாரண சந்தேகங்களை கூட அப்பா அம்மாகிட்ட பேசி தீர்த்துக்கமுடியாது.அந்த சந்தேகங்களை போக்கி தெளிவடையனும்னா ஒரு மூணாவது மனிதரோ அல்லது நண்பர்களின் உதவியையோ தான் நாடணும்.


ஆனா  இந்த படத்துல ஒரு தனிமனிதனின் உணர்ச்சிகளுக்கு கொடுக்கப்படுற முக்கியத்துவம் கவனிக்கத்தக்கது.ஒரு அப்பா,அம்மா,மகன் இந்த மூவருக்குள்ளும் நடக்கிற உணர்வு போராட்டங்கள் தான் படம்.முதல் சீன்லயே கதைகுள்ள போக ஆரம்பிச்சிடுறாரு இயக்குனர் 'Kim Ki-duk'. படத்தோட முதல் சீன்லருந்து கடைசி சீன் வரைக்கும் ஒரு டையலாக் கூட கிடையாது.ஆனா அது படத்தை எந்த விதத்துலயும் பாதிக்கல.இன்னும் சொல்லப்போன அந்த நடிகர்களின் நடிப்புக்கு வசனங்கள் தேவையே இல்ல!அப்பாவிற்கு ஒரு பெண்ணுடன் தகாத உறவு,அதுனால அப்பா அம்மா ரெண்டு பேருக்குள்ளேயும் சண்டை..ஒருகட்டத்தில அந்த சண்டை வெறியாய் மாறி,கணவனை எதுவும் செய்யமுடியாத கோபத்தில் தன் மகனோட ஆண்குறியை வெட்டிடுறாள்.அதுனால பாதிக்கப்படுற அந்த பையன் படுற அவமானங்களும்,தன் குற்றத்தை உணர்ந்து..அந்த அவமானங்களிலிருந்து தன் மகனை எப்படியாச்சும் காப்பாத்தி பழைய நிலைக்கு கொண்டு வந்திடனும்னு நினைக்குற அப்பாவின் போராட்டமும்..தன்னாலதானே இப்படி தன் மகனுக்கு ஆச்சு என நினைத்து உருகும் அம்மவோட மனகுமுறலும் தான் மீதிப்படம்.

நிச்சயம் எழுத்துக்களால் அந்த படம் தந்த  உணர்வுகளை முழுசா கொண்டுவர முடியும்னு தோணல.நம்ம ஊரை பொருத்தவரைக்கும் இந்த கதையும்,மனிதர்களும் நடைமுறை சாத்தியமே இல்லாத ஒன்று என்றாலும்..ஒரு படமாய் மனதை வெகுவாய் பாதித்துவிட்டது.Strictly for 16+