சனி, 22 பிப்ரவரி, 2014

ராஜீவ் கொலையும்,வடஇந்தியர்களின் பொதுப்புத்தியும்

இந்தி பேசத்தெரியாதவனை எப்படி இந்தியனாய் ஏற்றுக்கொள்ளக்கூடாது என வட இந்தியர்களின் மூளையில் உறைந்து போயிருக்கிறதோ அதேபோல இந்த ராஜீவ் கொலை வழக்கிலும் சில முன்முடிவுகளை அவர்களாகவே எடுத்துக்கொண்டு மொத்த தமிழர்களையும் கொலை குற்றவாளிகளாவும் தேசத்துரோகிகளாகவும் பாவித்து அதை இன்றளவும் நம்பிக்கொண்டும் மற்றவர்களை நம்ப வைக்கவும் பெரும் பிரயத்தனப்பட்டுக் கொண்டுருக்கின்றனர்.இதில் வருத்தமான விசயம் என்னவென்றால் இதுமாதிரியான எண்ணம் அங்குள்ள பாமர மக்களுக்கு மட்டும்தான் என்றில்லை..மெத்த படித்தவர்களும் இதை பற்றிய எந்த புரிந்துணர்வும் இல்லாமல் தான் பேசுகின்றனர்.

ராஜீவ் காந்தியின் கொலை வரலாற்று சோகம் தான்.சிந்திக்க தெரிந்த எந்த மனிதனும் அதை ஆதரிப்பானில்லை!இன்றளவும் அதற்காக வருத்தப்பட்டு கொண்டிருக்கோம் தான்.ஆனால் ஒரு உயிர் பழியானதற்காக வாய்க்கிழிய மனிதநேயம் பேசும் இவர்கள்தான்,லட்சக்கணக்கில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு ஆதரவாய் ஆயுதங்களையும்,படைகளையும் கொடுத்து இந்திய அரசு பழிக்குபழி என்று செயல்படுகையில் மொத்த இனமும் அழிந்து சாவதை பார்த்து சந்தோசப்பட்டார்கள்!அப்போது ராஜீவ்க்காக மனிதநேயம் பேசியவர்களின் வாய்களில் இப்போது கோரப்பற்களில் ரத்தம் வழிய சிரிப்பதை காண சகிக்க முடியாதிருந்தது.

இப்போதும் அந்த கொலை வழக்கில் சம்பந்தபட்டவர்கள் என்று சொல்லி சாந்தன்,முருகன்,பேரறிவாளன் ஆகிய மூவரின் தலைக்குமேல் தூக்கு கயிறு தொங்கி கொண்டிருந்த வேளையில்,கொஞ்சமும் இரக்கமின்றி அவர்கள் சாகவேண்டியவர்கள் தான் என்றார்கள்.அவர்களை உசுப்பேற்றி அந்த வெறுப்பு கொஞ்சமும் நீர்த்து போய் விடாதபடி காங்கிரஸ் சார்பு வடஇந்திய ஊடகங்கள் கச்சிதமாய் பணியாற்றின..பணியாற்றிக்கொண்டும் இருக்கின்றன!

மூன்று நாட்களுக்கு முன் மூவரின் தூக்கு தண்டனையையும் ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது..என்னுடன் வேலை பார்க்கும் ஒரு வடஇந்தியர் என்னிடம் இப்படி கேட்டார். "அந்த கொலைக்காரய்ங்க மூணு பேருக்கும் தூக்கு தண்டனை கொடுக்காதது சரியா?தப்பா?" என்று இந்தியில் கேட்டுவிட்டு,நான் என்ன பதில் சொல்லப்போகிறேன் அதைவைத்து என்னை எப்படி மடக்கலாம் என்ற நோக்கில் அர்த்தமாய் பார்த்தார்.இவர்களுக்கு இதே வேலைதான்.மற்ற விசயங்களில் அவர்களுடன் சுமூகமாய் இருந்தாலும் விடுதைப்புலிகள்பற்றியோ,ராஜீவ் கொலையில் இந்த அப்பாவிகள் பக்கமிருக்கும் நியாயத்தை பற்றி பெசுகையிலோ நம் பொறுமையை சோதித்துவிடுவார்கள்.எனக்கு தெரிந்து கிட்டத்தட்ட எல்லோரும் இதே ரகம் தான்.அப்படி நியாயத்தை பேசுகையில் நீயும் தமிழன் தானே,அதனால் தான் அவர்களுக்கு ஆதரவாய் பேசுகிறாய்,அவர்கள் தேசத்துரோகிகள் அவர்களை ஆதரித்து பேசுவதும் தேசத்துரோகம் தான் என்ற அளவிற்கு போய்விடுவார்கள்.ஏற்கனவே இந்த விசயத்தில் நிறைய அனுபவப்பட்டிருகின்றேன்.

அதனால் உணர்ச்சிவசப்படாமல்,அந்த இந்திக்காரரை பார்த்து,"இரண்டு இத்தாலி கடற்படையினர் எந்த காரணமுமேஇல்லாமல் இரண்டு இந்திய மீனவர்களை சுட்டு கொன்றார்களே,அவர்கள் இருவருக்கும் தூக்குதண்டனை அளிக்கப்படமாட்டாது என உறுதி சொல்லி விசாரணைக்கு வரசொன்னதே இந்திய அரசு..நியாபகம் இருக்கா?கொன்னது அவுனுகதான்னு தெரியும்..இருந்து அந்த சலுகை அளிக்கப்பட்டது.ஆனா இவுங்க மூணு பேரும் சந்தேகத்தின் பேரில் தான் குற்றவாளிகள்.செஞ்ச தப்புக்கே தூக்கு இல்லாதபோது செய்யாத தப்புக்கு எதுக்கு தரனும் தூக்கு?" என்றேன்.எந்த பதிலும் சொல்லதோன்றாது அப்படியே அமைதியாகிவிட்டார்.பின்னால் யோசித்து பார்த்திருக்கக்கூடும்.

ராஜீவ் கொலையை பொருத்தவரையிலும் உண்மையை உரக்க சொல்ல வேண்டிய ஊடகங்களோ உண்மையை திரித்து சொல்வதிலேயே குறியாய் இருக்கின்றன.நம் மீதான வீண் பழிகளையும்,நம் தரப்பு நியாயங்களையும் பிற மாநில மக்களுக்கு யார் புரிய வைப்பது?யார் புரிய வைக்க போகிறார்கள்?ஆனால் இனியும் தாமதிக்காமல் இந்த உண்மைகள் எல்லோருக்கும் உணரவைக்க படவேண்டும்.ஒருவேளை அது முன்பே புரியவைக்கப்பட்டிருந்தால் இலங்கையில் இத்தனை தமிழர்கள் செத்து மடிந்திருக்க மாட்டார்கள்.

4 கருத்துகள்: