வியாழன், 27 பிப்ரவரி, 2014

தலைகீழ் விகிதங்கள்-ஒரு வாசிப்பனுபவம்!

எழுத்தாளர் எஸ்.ரா அவர்கள் தமிழின் மிகச்சிறந்த நூறு நாவல்களுள் ஒன்றாக 'தலைகீழ் விகிதங்கள்' புத்தகத்தை குறிப்பிட்டிருந்நதார்.இணையத்திலும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் என்று பலரும் சொல்லவே,புத்தகத்தை வாங்க ஒருபெரும் போராட்டம் நடத்தி(!) ஒருவழியாய் வாங்கி,படித்தும் முடித்தாயிற்று!


நாவலின் முன்னுரையில் இந்த புத்தகம் எழுதவேண்டி இருந்ததின் அவசியத்தையும்,இதற்கு கிடைத்த வரவேற்பை பற்றியும்,பிற்பாடு வாசகர்கள் இதேப்போல் ஒரு நாவலை மீண்டும் எழுதசொல்லி வற்புறுத்துகையில்,அறுபது வயதான நான் எப்படி மீண்டும் முப்பது வயது இளைஞனாக மாறுவது சாத்தியமில்லையோ அதுமாதிரி மீண்டும் இதுப்போல் ஒரு நாவல் எழுதுவதும் சாத்தியமில்லை என்று புறக்கணித்ததை பற்றியும் நாவலாசிரியர் நாஞ்சில்நாடன் வாசகர்களிடம் பகிர்ந்துள்ளார்.அதுமட்டுமில்லாமல் இந்த நாவல்தான் பின்னால் இயக்குநர் தங்கர்பச்சனால் சொல்ல மறந்த கதை என்று திரைப்படமாக எடுக்கப்பட்டது.உண்மையில் இந்த தகவலை படித்ததும் சற்றே ஏமாற்றமாய் தான் இருந்தது.ஏனெனில் புத்தகத்தை வாசிக்கையில் கிடைக்கவேண்டிய சுவாராஸ்யம் குறைந்துவிடுமே என்பதனால் தான்!நல்லவேளையாக சொல்லமறந்த கதை படத்தை பார்த்து வெகுநாட்களாகி விட்டதால் அவ்வளவாய் காட்சிகள் நியாபகத்தில் இல்லை.இன்னொரு விசயம்,இயக்குநர் தங்கர்பச்சன் இந்த நாவலை படமாய் எடுக்க விருப்பபட்டு,அதற்காக கொடுத்த பணத்தில் தான் சில ஆண்டுகளுக்கு முன் இதய அறுவைசிகிச்சை செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.உண்மையில் இதை படித்ததும் இதற்காக சந்தோசப்படுவதா இல்லை வருத்தப்படுவதா என்று புரியாத மனநிலையில் இருந்தேன்.

சிவதாணு படித்துவிட்டு வேலை கிடைக்காது பெரும் மனப்போராட்டத்துடன் வாழும் ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்தவன்.அவனுக்கு கீழ் ஒரு தங்கை,இரண்டு தம்பிகள் என அவனுக்கு கிடைக்கும் போகும் வேலையை நம்பி வறுமையை சகித்துக்கொண்டு வாழ்கின்ற குடும்பம்.வேலைக்காக எவ்வளவு முயற்சித்தும் எந்த பலனும் இல்லாத நிலையில்,சிவதாணுவின் குடும்ப நண்பர் மூலமாக,ஊரின் பெரிய மனிதரும் ஹோட்டல் உரிமையாளருமான சொக்கலிங்க பிள்ளையின் மகளை மணம் முடிக்க முற்சிகள் நடக்கிறது.ஆரம்பத்தில் இருக்குடும்பங்களின் அந்தஸ்த்திற்கும் இடையே உள்ள வேறுப்பாட்டை சிவதாணு உணர்ந்து முதலில் இந்த திருமணத்திற்கு மறுத்தாலும்,எல்லோரது தொடர்ச்சியான மூளைச்சலவையால் திருமணத்திற்கு சம்மதிக்கிறான்.இங்கிருந்து வெகுவேகமாய் பயணிக்கிறது கதை.

வசதி இல்லாதவன் என்ற ஒரே காரணத்திற்காக மாமனார் வீட்டில் சிவதாணுவுக்கு நடக்கும் அவமரியாதைகளையும்,இயல்பிலேயே தன்மானம் அதிகம் உள்ளவனுக்கு இந்த அவமரியாதைகள் தரும் வழிகளையும் சிவதாணு பாத்திரத்தின் வழியே வெகுநுணுக்கமாய் விவரித்துள்ளார் நாஞ்சிலார்.வாழ்க்கை பெரும் போராட்டமாய் நகர்கையில் எல்லாவற்றிற்கும் தீர்வாய் இருக்கப்போகும் அந்த வேலை கிடைத்ததா?பெற்றவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டு கணவனை தவறாய் பேசிவிட..அதனால் ஏற்படும் பூதாகரமான விளைவுகள்..அந்த பிணக்கை முதலில் யார் தீர்ப்பது என உருவாகும் ஈகோ போட்டிகள்,கடைசியில் சிவதாணு மனைவி பார்வதியோடு சேர்ந்தானா?என்பதையெல்லாம் சொல்லி நிறைவுப்பெருகிறது நாவல்.

சாதரண மனிதர்களின் ஆசைகள்,கனவுகள்,கோபங்கள்,வலிகள் ஆகியவற்றை மிக நுணுக்கமாய் அணுகி ஒரு அழகிய உணர்ச்சி போராட்டாமாய் இந்த நாவல் படைக்கப்பட்டுள்ளது.கதையின் ஊடேயே வரும் நாஞ்சில் மண்ணின் வட்டார வழக்கு சுவாரஸ்யமாய் இருந்தாலும் சில வார்த்தைகள் எனக்கு புரியவில்லை.இப்போதுதான் ஒவ்வொன்றாய் நண்பர்களிடம் கேட்டு அர்த்தம் தெரிந்து கொண்டிருக்கின்றேன்.நாவலை படித்து முடித்ததும் சொல்ல மறந்த கதை படத்தை பார்க்க வேண்டும்போல் தோன்றுகிறது.வேறொன்றுமில்லை,தங்கர் எப்படிஇந்த நாவலுக்கு திரைக்கதை அமைத்திருக்கிறார் என பார்க்க வேண்டிதான்!!

தலைகீழ் விகிதங்கள் அவசியம் படிக்கவேண்டிய நாவல்.

புத்தக விவரம்:
தலைகீழ் விகிதங்கள்
விஜயா பதிப்பகம்.
பக்கங்கள் : 296
விலை       : 130/-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக