வெள்ளி, 18 ஜனவரி, 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா-நியாயம் கேட்கும் சாந்தனு!!


பொங்கலுக்கு வெளியாகி சந்தானம்,பவர் ஸ்டார் நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் படம்,கண்ணு லட்டு தின்ன ஆசையா!.

இது எண்பதுகளில் வெளியான திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் இயக்கிய இன்று போய் நாளை வா திரைப்படத்தின் காப்பி என்பது படம் பார்த்த எல்லோருக்குமே தெரியும்..க.ல.தி.ஆசையா திரைப்பட குழுவே  ஒரு பேட்டியில,இது  இன்று போய் நாளை  வா-வின் ரீமேக் தான் அப்படின்னு சொல்லியிருந்தாங்க..

இப்போ பிரச்சனை என்னான்னா இந்த படத்த தன்னோட முறையான அனுமதி இல்லாம படமா எடுத்திருக்கிறதா,கேஸ் போட்டு இருக்கார் பாக்கியராஜ்..ஆனா படம் ரிலீஸ் ஆகுற சமயத்துல லம்பா ஒரு அமவுண்ட் கொடுத்து பாக்கியராஜை ஆஃப் பண்ணிட்டதாகவும் ஒரு பேச்சு அடிபட்டுச்சு!!

இது ஒரு பக்கம் இருக்கப்ப பாக்கியராஜோட பையன் சாந்தனு,முதல்ல அப்பாகிட்ட வந்து தயாரிப்பாளர் ராம.நாராயணனும்,சந்தானமும் இந்த படத்தோட உரிமையை கேட்டாங்க..


ஆனா அப்பா அந்த கதைய என்னைய வச்சி எடுக்குறதா இருந்தாதால,தர மறுத்திட்டாரு.அதுக்கு அப்புறம் அப்பாவுக்கு தெரியாமலே இந்த படத்தை எடுத்து இப்போ ரிலிசும் பண்ணிட்டாங்க..இதுக்கு கவிதாலயா புஸ்பா கந்தசுவாமியும் உடந்தையா இருந்துருக்காங்க..ஆனா இதுக்காக ஒரு பைசா கூட அப்பாவுக்கு கிரெடிட்டா தரலை.. இது முழுக்க முழுக்க என் அப்பாவுக்கு சொந்தமான கதை..இதை திருடுனவங்களை சும்மா விடபோறதில்லைனும்,இந்த பிரச்சனைல அப்பாவுக்கு ஆதராவ எல்லாரும் குரல் கொடுக்கனும்னும் ட்விட்டர்ல சாந்தனு கேட்ருக்காரு..


இப்பல்லாம் அடுத்தவன் கதையை திருடுறது, இல்லைனா என் கதையை திருடிட்டான்னு கேஸ் போடுறது,இதான் ட்ரென்ட் போல!!எது எப்படியோ இந்த பிரச்சனை மூலமா படத்துக்கும்,சந்தானம் அன்ட் கோ-விற்கும் எக்ஸ்ட்ரா பப்ளிசிட்டி தான்!!

இன்னும் பேசுவோம்..
சகா..

சனி, 12 ஜனவரி, 2013

தமிழ் இனி மெல்ல சாகுமா??-ஓர் அலசல்

 இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் வாழ்ந்த தமிழன் இன்றைய தமிழனுடன் பேசமுடியும்.வேறெந்த மொழியிலும் இந்த சிறப்பு இல்லை -எழுத்தாளர் சுஜாதா.

இது ஒரு சின்ன உதாரணம்தான்..இதுப்போல் எத்தனையோ சிறப்புகள் தமிழுக்குண்டு..தமிழ் மொழியின் பெருமைகளைப்பத்தி பேசணும்னாஇந்த ஒரு பதிவு போதாது!!


எல்லாமும் சரி..ஆனால் கொஞ்சம் கனவு கலைத்து பார்த்தால் நிதர்சனம் நிச்சயம் வேறாகத்தான் இருக்கும்..
இன்று உள்ள சமுதாயம் தமிழலில் பேச வெட்கப்படக்கூடிய சமுதாயமாக மாறி வருகிறது என்பதுதான் உண்மை.தமிழ் என்பதுபோய் இப்போது டமில் ஆகிவிட்டது..கேட்டால் ஃபேஷனாம்!!
நான்பார்த்த வரையில்,தமிழனை தவிர மற்ற மொழிபேசுபவர்கள் அது இந்தியாவிற்கு உள்ளோ அல்லது வெளிநாடுகளோ..நிச்சயம் அவர்கள் மொழியில் பேச வெட்கப்படுவதில்லை..மாறாக இது என் மொழி, உனக்கு புரிந்தாலும் புரியாவிட்டாலும் அதை பேசுவதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது என்பதுதான் பலரது நிலைபாடும்!!


வடஇந்தியர்கள் பலரும் பேசும்போது நீங்கள் கவனித்திருக்கலாம்..அவர்கள் பேச்சில் மிகமிககுறைந்த அளவே ஆங்கிலகலப்பு இருக்கும்..ஆனா இங்கே ஒரு வாக்கியத்தை ஆங்கிலம் கலக்காமல் சொல்வது என்பதே மிக கடினமான காரியமாகிவிட்டது.

தீர்வுதான் என்ன??
                   
                    பாஸ் என்ன சொல்றீங்க??நாங்க கார்ப்பரேட் கம்பெனில வேலை பாக்குறோம்..அங்கே போய் தூயதமிழ்ல பேசிக்கிட்டு இருக்கமுடியுமா?ன்னு கேக்குறவங்களுக்கு நான் ஒன்னே ஒன்னுதான் சொல்ல விரும்புறேன்..உங்களை யாரும் இப்போ ஆங்கிலம் பேசவேண்டாம்னோ அல்லது நான் ''தானியங்கி மூவுருளி''(ஆட்டோ ரிக்ஸா)யில் பயணம் செய்து கொண்டிருக்கிறேன் அப்படின்னு தூய செந்தமிழ்லயோ பேசனும்னு சொல்லல..!

குறைந்தபட்சம் உங்கள் நண்பர்களிடம்,உங்கள் உறவுகளிடம் உங்களுக்கு தெரிந்த தமிழில் பேசுங்கள்..அரைகுறையாய் ஆங்கிலத்தில் பேசுகையில் வரும் கர்வம் தமிழில் பேசுகையில் ஏன் வெட்கமாய் மாறவேண்டும்??!
இது நிச்சயம் ஒரேநாளில் நடந்துவிடகூடிய அதிசியம் அல்ல..நீங்கள் டீக்கடைக்கு போய் ஒரு தேநீர் வேண்டும் என்று கடைக்காரரிடம் கேட்டால் அவர் உங்களை விநோதமாக பார்க்கவே வாய்ப்புகள் அதிகம்..ஆனால் அதை பொருட்படுத்தாமல் நீங்கள் தொடர்ந்து பேசினால் நிச்சயம் ஒருநாள் பழக்கத்திற்கு வந்துவிடும்..மற்ற மாநிலத்துகாரர்கள் அவர்கள் தாய்மொழியில் பேச எந்தவித வெட்கமோ/தயக்கமோ காட்டுவதில்லை..பின் நாம் மட்டும் ஏன் இப்படி??


தமிழில் பேசுவதற்கு வெட்கபடுவதற்க்கு பின்னால் இன்னும் ஏதோவொரு அடிமைத்தனம் ஒளிந்திருப்பதாகவே கருதுகிறேன்..தமிழன் கடைசிவரை தமிழனாய் இருக்கும்வரை நிச்சயம் தமிழுக்கு அழிவில்லை!!உங்களை சங்கம் வைத்து தமிழ் வளர்க்க சொல்லவில்லை.குறைந்தபட்சம் சங்கடப்படாம தமிழ்ல பேசுங்கன்னு தான் சொல்றேன்..

இனி தமிழில் பேச பெருமைப்படுவோம்..தமிழன் என்பதில் கர்வோம் கொள்வோம்!!

 குறிப்பு :நண்பர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்..பதிவு பற்றி உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்..

இன்னும் பேசுவோம்..
சகா..

திங்கள், 7 ஜனவரி, 2013

விஷப்பரிட்சையா?!! விஸ்வரூபம்?


இன்றைய தேதியில் திரையுலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு விஷயம்,உலகநாயகனின் விஸ்வரூபம் திரைப்பட வெளியீடு..
எப்போதுமே புதுமுயற்சிகளில் ஆர்வம்காட்டும் கமல்,இந்தமுறை கையில் எடுத்திருப்பது DTH வெளியீடு.



கமலின் இந்த முயற்சிக்கு ஒருபக்கம் ஆதரவு இருந்தாலும்,தியேட்டர் உரிமையாளர்கள் இன்னமும் எதிர்ப்பு தெரிவித்து கொண்டேதான் இருக்கிறார்கள்.
தயாரிப்பாளராய்,கமலின் வாதம் சரி என்றாலும்,அதை நடைமுறை படுத்துவதில் உள்ள சிக்கல்கள் ஏராளம்..இன்னும் சொல்லப்போனா இந்த DTH வெளியீடை எப்படியெல்லாம் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கமுடியும்னு இப்பவே நம்மாளுக ரூம் போட்டு யோசிக்க ஆரம்பிச்சிருப்பாங்க!!அதுக்கு ஒரு சின்ன சாம்பிள் தான் இந்த போட்டோ:



விஸ்வரூபம் சந்திக்க இருக்கும் பிரச்சனைகள்:

கமல் சொல்லியிருக்க மாதிரி ,படம் ரிலீஸ்க்கு ஆகுறதுக்கு பத்துமணிநேரத்திற்கு முன் DTHல் வெளியான உடனே,நம்மவர்கள் ட்விட்டர்,ஃபேஸ்புக்குல படத்தோட ரிசல்ட்ட போட ஆரம்பிச்சிருவாங்க..படம் நல்லா இருந்தா தப்பிச்சுது..இல்லைனா தியேட்டர் கலெக்சன் பெருமளவு குறைய சான்ஸ் இருக்கு.

அதேமாதிரி,குடும்பத்துல உள்ளவங்க மட்டும் பாக்காம அவங்க சொந்தங்கள் அல்லது பக்கத்துவீட்டுகார்களுடன் பார்ப்பது..அப்புறம் ஹோட்டல்,பார் போன்ற பொது இடங்கள்ல படத்த காமிச்சாங்கன்னா,நிச்சயம் தியேட்டர் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்பிருக்கு.

ஆனாலும் இந்த புது முறைக்கு பொதுமக்களிடம் நிச்சயம் வரவேற்ப்பு இருக்கவே செய்யும்..ஆயிரம் ரூபா கொஞ்சம் அதிகம்தான்னாலும்,தியேட்டரில்முதல்நாள் டிக்கெட்விற்பனையில் நடக்கும் பகல்கொள்ளைக்கு இது எவ்ளவோ பரவாயில்லைன்னு தான் மக்கள் நினைப்பாங்க!

யார் என்று புரிகிறதா
இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே
சரித்திரம் படைத்தவன்
ஞாபகம் வருகிறதா!!
இது விஸ்வரூபம் பாடல் வரிகள்..இந்த பாடல் வரிகள் உண்மையாகி கமல் என்ற உண்மை கலைஞன் வெற்றி பெறவேண்டும் என்பதே,திரைஆர்வலர்களின் விருப்பம்..பொறுத்திருந்து பார்ப்போம்..விஸ்வரூபத்தின் விஸ்வரூபத்தை!!

இன்னும்பேசுவோம்..
சகா.




ஞாயிறு, 6 ஜனவரி, 2013

இசைப்புயலும் இனியநாட்களும்..


இசைப்புயலின் பிறந்தநாள் இன்று..உச்சம் தொட்டுவிட்ட உன்னத கலைஞன் ரகுமான்..எனக்குள் இசைப்புயல் மையம் கொண்டது பள்ளிநாட்களில் தான்..



பள்ளியின்  நூற்றாண்டு விழாவுக்காக எங்க கிளாஸ்ல எல்லாரையும் டான்ஸ் காம்படீசனுக்காக தண்ணி தெளிச்சி விட்டுடாங்க..நமக்கு டான்ஸ்லயெல்லாம் ஆர்வம் இல்லாட்டியும் கிளாஸ் நடக்காதேன்ற சின்ன சந்தோசம் மனசுக்குள்ள!விழாவுக்கு வேற, அப்போ இருந்த கல்விஅமைச்சர் வர்றதாக ஏற்பாடு..எங்களுக்கு டான்சுக்காக செலக்ட் பண்ணிருந்த பாட்டு ரகுமானின் 'வந்தேமாதாரம்' சாங்..முதல்நாள் பிராக்டிஸ்ல அந்த பாட்டை கேக்குறப்பவே எதோ ஒரு சிலிர்ப்பு மனசுக்குள்ள..


வரிகள் சரியா புரியலைன்னாலும் பாட்டோட ஆரம்பமான வந்தேமாதரம்ங்கறது மட்டும் மனசுக்குள்ள ரிப்பீட் மோட்ல ஓடிகிட்டே இருக்கும்..நமக்கு சுட்டுபோட்டாலும் டான்ஸ் வராது,இதுல டான்ஸ் சொல்லிகொடுக்குறதுக்குன்னு தனியா ஒரு மாஸ்டரை ஸ்பெஷல் அப்பாயின்மென்ட்ல வரவெச்சிருந்தாங்க..!

நாங்க ஒரு ஆறுபேரு,எத்தனை தடவை சொல்லி கொடுத்தாலும்,நாங்க மட்டும் தனியா ஏதோ  ஒரு ஸ்டெப்ல ஆடிகிட்ருப்போம்..இப்படி குரூப்பா ஆடுறதுல உள்ள ஒரு பிரச்சனை என்னானா,நாம ஒரு ஸ்டெப் தப்பா ஆடிட்டோம்னாலும் நம்ம பின்னால ஆடுறவனும் நம்மளால கன்பியூஸ் ஆயிடுவானுக!மாஸ்டரும் கடைசிநாள் வரை,எப்படி எப்படியோ சொல்லி கொடுத்தாரு..ம்ம்ஹூம்,வரல்லையே..!கடைசில அவரே கடுப்பாகி தம்பிகளா, நீங்க தயவுசெஞ்சு மொத ரோவுல நின்னுராதீங்க..கடைசில  ஒரு ஓராம நின்னு முன்னாடி ஆடுறவன பாத்து முடிஞ்சா வரைக்கும் சமாளிங்கடான்னு சொல்லிட்டு விட்டுட்டாரு..ஒரு வழியா நாங்களும் சமாளிச்சு ஆடி(?!) ப்ரோக்ராமை நல்லபடியா முடிச்சிட்டோம்..

டான்ஸ் தான் வர்ரலையே தவிர,அந்த வந்தே மாதரம் பாட்டு அப்படியே மனசுக்குள்ள நின்னுடுச்சி..

"தாயே உன்பெயர் சொல்லும் பொழுதே இதயத்தில் மின்னலை பாயுமே
இனிவரும் காலம் இளைஞனின் காலம்உண்கடல் மெல்லிசை பாடுமே!!"

இந்த வரிகளை இப்போ கேட்டாலும் அதே சிலிர்ப்பு..! இசை என்பது வெறும் ஒலி அல்ல..அது நம் வாழ்கையின் அடையாளம்.எப்போது கேட்டாலும் நாம் வாழ்ந்த நாட்களையும் சேர்த்து நினைவுமீட்டல் செய்யும் சக்தி இசைக்கு மட்டுமே உண்டு!!

 கோடானுகோடி இளைஞர்களின் உள்ளத்தை கொள்ளைகொண்டிருக்கும் ஆஸ்கர் நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..உங்கள் இசை பயணத்தில் இன்னும் பல உயரங்களை அடைய வாழ்த்தும் உங்கள் ரசிகர்களில் ஒருவன்..

இன்னும் பேசுவோம்,
சகா..


சனி, 5 ஜனவரி, 2013

பிள்ளையார் சுழி

ஒருவழியா நாமளும் பிளாக் ஆரம்பிச்சாச்சு!!(ஒரு வேளை,இது தெரிஞ்சுதான்..பாரதி இனி தமிழ் மெல்ல சாகும்னு சொல்லியிருப்பாரோ?!)..இனிமேல் மனசுல பட்டதை உங்ககிட்ட பகிர்ந்துக்கிறேன்..அது பலநேரங்களில் மொக்கையாவோ,புலம்பலாகவோ,கவிதை(கவுஜ?!)யாவோ இருக்கும்..உங்கள் ஆதரவுகளை எதிர்நோக்கி..

சகா..