செவ்வாய், 9 டிசம்பர், 2014

தமிழன் என்ன சோதனை எலியா?-மீத்தேன் பயங்கரம்

தமிழகத்தின் நெற்களஞ்சியம்,சோழநாடு சோறுடைத்து..மாடுகட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டி போரடித்த சோழ நாடு, என்றெல்லாம் பெருமை இப்பூமிக்கு உண்டு.ஆனால் இனியும் இதுபோல மார்த்தட்டி பெருமைபேசிக்கொண்டு இருந்தோமேயானால் தமிழனை போல ஒரு ஈனா வானா வேறு எங்கும் இருக்கமுடியாது என்றுதான் அர்த்தம்...காவேரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர்,திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி விவசாயிகள்/மக்களின் ஒட்டுமொத்த வாழ்வும் மயிரிழையில் தொக்கி நிற்கிறது.அவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்காகவே ஒரு திட்டத்தை ஆள்பவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.அதுதான் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம்!!


 மன்னார்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பூமிக்கு கீழ் நிலக்கரி இருப்பதை மத்திய இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியத்துறை கண்டறிந்துள்ளது.இந்த நிலக்கரி படிமங்களின் மீது மீத்தேன் எனும் ஒருவித வாயு இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த வாயு எரிபொருளாக உபயோகபடுத்தவல்லது.இந்த மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்திற்காக ஹரியானாமாநிலத்தை சேர்ந்த கிரேட் ஈஸ்ட்டர் எனர்ஜி என்ற நிறுவனத்துடன் 2010 ஆம் ஆண்டு அப்போதைய மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.இந்த மீத்தேனானது மிக எளிதில் தீப்பற்ற கூடியது என்பதும்,இத்தனை அபாயகரமான வாயுவை எந்த அளவுக்கு எச்சரிக்கை உணர்வோடு கையாள போகிறார்கள் என்பதும் ஒருபக்கம் இருந்தாலும்..


இத்திட்டத்தினால் பூமியின் கீழ் பல்லாயிரம் அடி ஆழத்தில் உள்ள வாயுவை வெளியே எடுக்க இவர்கள் போட போகும் ஆழ்துளை கிணறுகள் தான் ஒட்டுமொத்த தமிழர்களின் வாழ்வையும் சூறையாடப்போகும் எமன்!!

"என்னப்பா பெருசா பில்டப் குடுத்துகிட்டே இருக்க?இந்தியாவுல இப்ப இருக்க எரிபொருள் பஞ்சத்துக்கு..நாமளே ஒரு எரிபொருளை தயாரிக்க முடிஞ்சா நல்லதுதானே?என்ன நாம தண்ணிக்காவ பூமியில போர் போடுற மாதிரி,அவுங்க பூமியில ஆழமா போர் போடபோறாங்க அவ்ளோதானே?"என்று இதுவரை அலட்சியமாய் இதை படித்து வந்தவர்கள் மனதை கொஞ்சம் திடமாக்கி கொள்ளுங்கள்.உங்களுக்காக காத்திருக்கிறது அடுத்தடுத்த அதிர்ச்சிகள்!!

ஆழ்துளை கிணறு மூலம் பூமியின் அடி ஆழத்தில் உள்ள நிலக்கரி படிமங்களுக்கும்,பாறைகளுக்கும் இடையே பரவியுள்ள மீத்தேனை வெளியே எடுக்கப்போகிறார்கள் இதுதான் திட்டம்..கேட்பதற்கு மிக எளிமையாய் இருக்கிறது அல்லவா?!ஆனால் நிதர்சனம் அதுவல்ல.

மீத்தேனை எடுப்பதற்காக சுமார் ஆறாயிரம் அடி ஆழத்திற்கு பூமியில் துளையிட்டு,பின் அதிலிருந்து பல்லாயிரம் மீட்டர் நீளத்திற்கு பக்கவாட்டில் துளையிடப்படும்.ஒரு ஆழ்துளையிலிருந்து பல்வேறு பக்கவாட்டு துளைகள் போடப்படும்.பின் இந்த துளைகள் வழியே வேதிப்பொருட்களை மிக அதிக அழுத்தத்தில் உட்செலுத்தி அடிஆழத்தில் உள்ள பாறைகளில் விரிசல் ஏற்படுத்தப்படும்.இதனால் அந்த பாறைகளின் இடையே சிக்கியிருக்கும் மீத்தேன் வாயுவானது வெளியேறி,மேலிருந்து அனுப்பபட்ட உயர் அழுத்த ரசாயன கலவையோடு கலந்து வெளியே எடுக்கப்படும்.

வெளியே எடுக்கபட்டபின் அந்த ரசாயன கலவையிலிருந்து மீத்தேன் மட்டும் தனியே பிரிக்கப்படும்.இப்படி ஒரு ஆழ்துளை கிணறிலிருந்து மீத்தேனை எடுக்கும் Process-க்கு ஆண்டொன்றிற்கு நானூறு டேங்கர் லாரி அளவிற்கு தண்ணீர் தேவை.ஒரு ஆழ்துளை கிணற்றிற்கு மட்டும் ஐந்து நாட்கள் நடக்கும் இந்த நீரியல் விரிசல் முறைக்கு 5கோடியே 66லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை.மொத்தம் இரண்டாயிரத்திற்கும் மேல் காவேரி டெல்டாவை சுற்றி ஆழ்துளை கிணறுகள் அமைப்பதாய் திட்டமாம்.அதுமட்டுமில்லாது தொடர்ந்து முப்பது ஆண்டுகளுக்கு இப்பகுதியிலிருந்து மீத்தேனை உறிஞ்சி எடுக்கப்போகிறார்கள்.

இன்னும் எளிமையாய் சொல்வதென்றால் மேட்டூர் அணையின் கொள்ளளவான என்பது டிஎம்சி தண்ணீரை இந்த ஆழ்துளை அரக்கன்கள் நான்கே மாதத்தில் குடித்து தீர்க்குமென்றால் நீங்களே கணக்கு போட்டு கொள்ளுங்கள்.முப்பது வருடத்தில் காவேரி பாய்ந்த இடம் பாலைவனமாய் மாறி நிற்கும்.

காவேரியில் தண்ணீர் ஓடுவது என்பதே கர்நாடகாக்காரன் ஏதோ மனசு வைத்து போனா போவுதே என்று பிச்சை போட்டால்தான் உண்டு.அப்படியிருக்க இத்திட்டத்திற்கான தண்ணீரை காவிரியிலிருந்து மட்டுமே எடுப்போம் என்று சொல்லுவதெல்லாம் பணம் சம்பாரிக்க வேண்டி இந்த தனியார் நிறுவனங்களும்,அரசும் நடத்தும் பித்தலாட்டமேயன்றி வேறேதும் இல்லை.

இப்படி ஒட்டுமொத்த நிலத்தடி நீரையும் உறிஞ்சிவிட்டால்,வெற்றிடம் ஏற்பட்டு,கடல்நீர் உட்புக ஆரம்பிக்கும்.அதோடு மட்டுமில்லாமல் இதற்காக பூமியில் செலுத்தபடும் நச்சு தன்மையுள்ள வேதிபொருட்கள் தொடர்ந்து மண்ணை மலடாக்கி விவசாயம் மட்டுமல்ல,வேறெந்த சிறு புல்பூண்டும் முளைக்காத பொட்டல்காடாய் மாற்றிவிடும்!இந்த நச்சுபொருட்கள் காற்றில் கலந்து சுவாச மண்டலத்தை நச்சு மண்டலமாக்கிவிடும்.அதன்பின் என்ன?மீத்தேனை சுவாசித்து,மீத்தேனை குடித்து,மீத்தேனை உண்டு சாவதை தவிர தமிழனுக்கு வேறு வழியில்லை.

ஒருபக்கம் கூடங்குளம்,மறுபக்கம் மீத்தேன்..இப்படி ஆளும் அரசு எதை சோதனை செய்து பார்க்க நினைத்தாலும்..அதன் தொடக்கம் என்னவோ தமிழ்நாடு தான்.ஏற்கனவே இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.இன்னுமும் தமிழ் சமூகம்,தமிழ்நாட்டில் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் விசயம்தானே,நமக்கென்ன வந்தது என வழக்கமான அலட்சியத்தோடு தூங்கி கிடந்தால்..இந்த இடம் சுடுகாடாய் மாறி நிற்கும்..பிறகேது நமக்கு விழிப்பு?நிரந்தர தூக்கம் தான்.

கூடங்குளம் கட்டுமான பணிகள் முடிந்தபின்,அதற்கெதிரான போராட்டங்கள் வலுத்தன.ஆனாலும் அம்மக்களின் அழுகுரல் சிறிதும் ஆளும்வர்க்கத்தின் காதுகளுக்கு எட்டவில்லை.அவர்கள் அப்படித்தான்.நாம் தான் இனி எச்சரிக்கையாய் இருக்கவேண்டும்.தொடங்கிய திட்டங்கள் இனி வளரவிடாமல் போராடி தடுக்கவேண்டியது நம் கடமை.

நான் இப்போ என்ன செய்யணும்?என்ற கேள்வி இப்போது உங்களில் யாருக்கேனும் மிச்சமிருந்தால்,அல்லது எனக்கு கிடைத்த இந்த இயற்கை தந்த காற்றையும்.தண்ணீரையும் காப்பாற்றி என் அடுத்த தலைமுறைக்கு தருவது என் கடமை என்று நினைத்தீர்களேயானால்..நீங்கள் செய்யவேண்டியது இதுதான்..இப்படி ஒரு திட்டம் செயல்பட போகிறது,அப்படி ஏற்பட்டால் இவ்வளவு பின்விளைவுகள் ஏற்படும் என்பதை ஒவ்வொரு தமிழனிடமும் எடுத்து செல்லவேண்டும்.திரைப்படத்தில் மக்களை காப்பாற்றும் ஆபத்பாந்தவனாய் வரும் எந்த நாயகனும் நிஜத்தில் ஒருபோதும் வரப்போவதில்லை.அதனால் நம் பிரச்சனைகளை தீர்க்க நாம் தான் போராடவேண்டும்.

இணையத்தில் சொல்வதால்/எழுதுவதால்  என்ன ஆகிவிடப்போகிறது..என்றெல்லாம் எண்ணுவதை விடுங்கள்.மிகப்பெரிய காட்டுத்தீ ஒரு சிறு நெருப்பு பொறியிலிருந்து தான் உருவாகிறது.அதனால் முடிந்தவரை இதை பகிருங்கள்/விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்..நம்மால் முடிந்ததை செய்வோம்.நிச்சயம் முடியும் என்று செய்வோம்.


கடைசியாய்..
இத்திட்டத்தை எதிர்த்து குரல் கொடுப்பது தான்,வாழ்நாள் முழுக்க மண்ணுக்காகவே வாழ்ந்து மண்ணிலே விதையான இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாருக்குநாம் செலுத்தும் குறைந்தபட்ச மரியாதையாய் இருக்கும்.

நன்றி: மே17 இயக்கம்
படங்கள் : கூகுள் இமேஜஸ்

செவ்வாய், 18 நவம்பர், 2014

லிங்கா பாடல்கள்-ஒரு பார்வை

வணக்கம் மக்கழ்ழே....

நீஈஈஈஈண்ட இடைவேளைக்கு அப்புறமா (ஏதோ கலெக்டர் எக்ஸாமுக்கு ப்ரிபேர் பண்ண போன மாதிரியே ஒரு பில்டப்பா இருக்குல்ல..ஆனா அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல..சோம்பேறித்தனம் தான் எழுதாததுக்கு காரணம்னு சொல்லி தெரியவேண்டியதில்ல:( // தலைவர் படம் சாங்க்ஸ் ரிலீஸ் ஆனதை சாக்கா வச்சி ரீ என்ட்ரி போட்டாச்சு!!

Most awaited album of the year-ஆன (எல்லா  படத்துக்கும் இதையேதானடா சொல்றீங்க?! ) லிங்கா பாட்டு ரிலீஸ் ஆகி இருபத்திநாலு மணிநேரத்துக்கு மேலாச்சு..உச்சபட்ச எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செஞ்சிருக்காரா ஏ.ஆர்.ஆர்.ன்னு இப்ப பாத்துரலாம்...


ஓ..நண்பா..:

வழவழன்னு இழுக்காம...ஆல்பத்துல மொத்தம் அஞ்சே பாட்டு தான்..அதுல ஓ..நண்பா தான் ஓபனிங் சாங்..வழக்கம்போல சென்டிமென்ட்டை மாத்தாம இதுலயும் எஸ்.பி.பி தான் பாடியிருக்கார்.வழக்கமான ஓபனிங் சாங் மாதிரிதான் இதுவும்...ரகுமானும் ரொம்ப மெனக்கடாம ஒரு பாஸ்ட் பீட் சாங் போடனுமேன்னு  போட்ட மாதிரி இருக்கு..வைரமுத்து, ரஜினி மூலமா ரசிக நண்பர்களுக்கு பல மெசேஜ் சொல்லியிருக்காரு..மத்தபடி Nothing Special.

என் மன்னவா..:

ப்ரி லூட் முடிஞ்சி..சின்ன சின்ன நட்சத்திரம் பறிக்க வந்தாய் ன்னு ஆரம்பிக்குபோது சும்மா ஜிவ்வுங்குது..'மோக குடமே முத்து வடமே..உந்தன் கச்சை மாங்கனி பந்தி வை ராணி'ன்னு வைரமுத்து இறங்கி அடிச்சிருக்காரு(ஒரு பெரிய மனுஷனுக்கு இப்படியாய்யா லிரிக்ஸ் வைக்கிறது? :) மொத்தத்தில் என் மன்னவா கேக்க கேக்க புடிக்கிற வகை!

இந்தியனே வா :

உணர்ச்சி பொங்குற மாதிரி (அதான் இந்த ஒத்த பாட்டுல முன்னுக்கு வருவாங்கல்ல?!) சிச்சுவேஷன்ல வர்ற சாங் இது..ரஹ்மானே இந்த பாட்டை பாடியிருக்காரு..தண்ணீர் இல்லாமல் மனிதன் கிடையாதுன்னு ஹம்மிங்கோட ஆரம்பிச்சு அப்படியே போயி.....சேர்வோமா?னு அவர் ஹைபிச்ல பாடும்போது ரியலி Goosebumps.இந்த பாட்டுக்கு ஹிட்லிஸ்டில் இடமுண்டு:)

மோனா..கேஸலினா..:

Yes..Here Once again Rahman proved..#whyrahmanisgod :) பாட்டு ஆரம்பத்துலயே சும்மா அதகளம் தான்..மனோவோட உற்சாக குரல்ல ஆரம்பிக்கிற பாட்டு கடைசிவரைக்கும் அதே டெம்போவோட போகுது.கார்க்கியோட எளிதாய் ஈர்க்ககூடிய வார்த்தை தேர்வுகள் அபாரம்..பாட்டு இன்ஸ்டன்ட் ஹிட் ஆகிரும்..Mona Mona -Song of the Album

உண்மை ஒருநாள் வெல்லும்:

இன்னும் ஒரு 'விடுகதையா இந்த வாழ்க்கை!!'டைப் பாட்டு..எளிமையான மெட்டு..பவர்ஃபுல் லிரிக்ஸ்..தியேட்டர்ல உள்ள மொத்த ரசிகர்களும் கண்ணுல தண்ணி வச்சிக்க போறா:)கேக்கலாம் டைப்!

And Finally..

ஆறுமாசத்துல ஒரு படத்தை எடுக்குறதுனா..அதுவும் மெகா பட்ஜெட்,சூப்பர்ஸ்டார் ன்னு பல எதிர்பார்ப்புகளை சமாளிக்க வேண்டிய பிரஷர் ஒருபக்கம்..ஆனாலும் டயத்துல படத்தை முடிச்சிட்டாரு கே.எஸ்.ரவிக்குமார்..ஹேட்ஸ் ஆப் யூ சார்:)ஆனா அந்த அவசரப்படுத்தலின் விளைவு பாடல்கள்ல தெரியிதுன்றது மறுக்கமுடியா உண்மை..இன்னும் கொஞ்சம் அவகாசம் இருந்திருந்தா..பாடல்கள் இன்னும் சூப்பரா வந்திருக்கலாம் ..சரி விடுங்க தலைவர் படத்துல பாடல்கள் எல்லாம் ரெண்டாம்பட்சம் தான்!இப்போதைக்கு மோனா கேசலினா ரொம்ப புடிச்சிருக்கு..ரஹ்மானை பொருத்தவரைக்கும் கேக்க கேக்க தான் புடிக்கும்னு ஒரு தியரி இருக்கு.ஒருவேளை அது இந்த ஆல்பத்துலயும் தொடரலாம்.lets see.

படம் டிசம்பர் 12 தலைவர்பிறந்தநாள் அன்னைக்கு ரிலீஸ்னு சொல்லியிருக்காங்க..பாப்போம்..டிரைலர் பாத்தாச்சா?சும்மா பிரி பிரின்னு பிரிச்சிக்கார்..





செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

திருட்டு வி.சி.டி யும்!குபீர் போராட்ட திரைபிரபலங்களும்!

அது 'பாட்ஷா' வெளியாகிருந்த தருணம்...எங்க ஊரு தியேட்டர் மட்டுமில்ல..ஒட்டுமொத்த தமிழ்நாட்ல உள்ள அத்தனை தியேட்டரிலும் படம் ஹவுஸ்ஃபுல்லா போயிட்டுருந்துச்சு..அப்பதான் கேபிள் டிவி தமிழ்நாட்ல கால் ஊன்றி நிக்க ஆரம்பிசிருந்த நேரம்!படம் ரிலீஸ் ஆகி நாலஞ்சு நாள்லயே கேபிள் டிவில சுடசுட சுட்டு போட்டானுக..இத்தனைக்கும் படம் லோக்கல்லயே ரெண்டு தியேட்டர்ல ஓடிகிட்டு இருந்துச்சி.இந்த விசயம் எப்படியோ ரஜினி ரசிகர் மன்றத்துக்காரங்க காதுக்கு போயி,அவங்க கேபிள் டிவி ஆபீஸ்க்குள்ள பூந்து சிஸ்டம்,ஆண்ட்டனான்னு எல்லாத்தையும் அடிச்சி நொறுக்கி..பெரும் பிரச்சனையாகி போலீஸ் கேஸ் ஆகுற லெவலுக்கு போயிருச்சி.கிட்டத்தட்ட இருபது வருஷம் ஆகப்போகுது..இந்த சினிமாவுக்கும் பைரசஸிக்குமான போராட்டம்!

இத்தனை வருஷத்துல கேசட்...சி.டி யாகி..சி.டி......டி.வி.டி ஆகி இப்போ டோரன்ட் வரைக்கும் வந்துருச்சி.ஆனாலும் இதுக்கு தீர்வு மட்டும் கிடைக்கல..கிடைக்கலன்றத விட,சினிமான்ற மக்களுக்கான ஊடகத்தை அந்த மக்களுக்கு நியாயமா கொண்டு சேக்காத வரைக்கும் இன்னும் இருபது வருஷம் ஆனாலும் இந்த பிரச்சனை தீரவே தீராது!

உடனே நான் திருட்டு வி.சி.டி. ஆதரவா பேசுறேன்னு யாரும் பொங்க ஆரம்பிச்சிர வேண்டாம்.இன்னிக்கு இருக்க நிலமையில ஒரு மிடில்கிளாஸ் குடும்பம் தியேட்டருக்கு போயி படம் பாக்குறதுன்றது ஒரு பெரிய விசயமா,ஒரு ஆடம்பர செலவா மாறிடுச்சி.தியேட்டர்ல முதல் வரிசையோ,கடைசி வரிசையோ எதுவா இருந்தாலும் ஒரே விலைன்னு டிக்கெட்ல மட்டும் சமதர்மத்தை கடைபிடிச்சிட்டு,இன்டர்வெல்ல ஒரு பாப்கார்ன் விலை நூறு ரூபாய்னு விக்கிறானுக!

இதுல உள்ள நுழையறப்பவே ஏர்போர்ட் செக்யூரிட்டி செக்கிங்கையே மிஞ்சிற அளவுக்கு ஒவ்வொரு ஆடியன்ஸையும் செக்கிங் பண்றானுக.ஒரு பாதுகாப்புக்காக தான் இப்படி பண்றாங்கன்னு நினைச்சா நம்மளை மாதிரி ஒரு லூசுக்கூ......முட்டை யாரும் இருக்கமுடியாது.இவனுக பண்ற செக்கிங் எல்லாம்,தண்ணிபாட்டிலை எவனும் உள்ள கொண்டு வந்துறக்கூடாது,ஸ்நாக்ஸை எவனும் உள்ள எடுத்துட்டு வந்திடகூடாதுன்றதுக்கு தான்!பின்னே,அதையெல்லாம் நாம வெளிலலருந்து கொண்டு போய்ட்டா அப்புறம் இவனுக கேண்டீன் பிஸ்னஸ்ல ஒண்ணுக்கு மூணுன்னு லாபம் வச்சி சாதாரண மக்களை கொள்ளை அடிக்கமுடியாதுல்ல?!

இன்டர்வெல்ல சீட்டை விட்டு எந்திருச்சி வெளில வர்றவன்,ஒரு காபி விலை அறுபது ரூவான்னு தெரிஞ்சதும்,ஒண்ணுக்க மட்டும் இருந்துட்டு மறுபடி சீட்ல போயி உக்கந்துக்கிறான்.இதுதான் நிதர்சனம்.இது பத்தாதுன்னு பார்கிங்ன்ற பேர்ல நடக்குற கொள்ளைய பத்தி சொல்லனும்னா நான் இன்னும் விடியவிடிய ஒக்காந்து டைப் பண்ணனும்.பார்கிங்ல கொள்ளை அடிக்கிறதுக்கு மட்டும் டிசைன் டிசைனா யோசிக்கிரானுக.இப்பல்லாம் ஹவர் கணக்குல தான் காசு வாங்குறதே..அது முப்பது ரூபாயிலருந்து அம்பது ரூபாய் வரைக்கும் அவுங்கவுங்க இஷ்டத்துக்கு!

காசு இருக்கவனுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்ல.ஆனா அன்றாட பிரச்சனைகளிலிருந்து கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவனும்னு நினைச்சு வர்றவங்களுக்கும்,குடும்பத்தோட கொஞ்சம் நேரம் செலவழிக்கலாமேன்னு வர்றவங்களுக்கும் இங்க நடக்குற கொள்ளையெல்லாம் பாத்தா மறுபடி தியேட்டருக்கு போகனும்ன்ற நினைப்பு ஜென்மத்துக்கும் வராது.

கொஞ்ச நாள் முன்ன வரைக்கும் படம் ரிலீஸ் ஆகி மறுநாளே பிரஸ் மீட் வைக்கிறது தான் ட்ரெண்டு!இப்ப உள்ள ட்ரெண்டு என்னான்னா,படம் ரிலீஸ் டேட் கன்பார்ம் ஆனவுடனயே பிரஸ்ஸை கூப்பிட்டு உக்கார வச்சி,திருட்டு விசிடிக்கு எதிரா அறிக்கை விடனும்..முடிஞ்சா இன்னும் ஒரு ஸ்டெப் மேல போயி,தாங்களே களத்துல இறங்கி திருட்டு விசிடி எந்த பொட்டிகடையில எல்லாம் விக்கிறாய்ங்க அல்லது எந்த கேபிள் டிவியில எல்லாம் புதுப்படம் போடுறாங்கன்னு கண்டுபிடிச்சி நேரா போயி மடக்கி பிடிக்கிறது தான்.அப்புறம் முக்கியமா இந்த மாதிரியான களப்பணியின்(!) போது அவுங்க பண்ற வீரதீர பராக்ரமங்களை எல்லாம் பதிவு பண்ண கேமராவை தூக்கிட்டு கூடவே ஒரு ஆளு போகணும்.அப்பதானே அதை யூடூப்ல அப்லோட் பண்ணி படத்துக்கு இன்னும் பப்ளிசிட்டி பண்ணலாம்!

தான் படம் ரிலீஸ் ஆவுறப்ப மட்டும் இப்படி திடீர் சமூகப்போராளியா மாறி,பொங்கி போராட்டம் நடத்தி,அநீதிக்கு எதிரா குரல் குடுக்குற இந்த பிரபலங்கள்,அவுங்க படம் ரிலீஸுப்ப முதநாளே க்யூவுல நின்னு டிக்கெட் எடுத்து படம் பாத்து வெளில வர்றப்ப மொத்த பர்ஸையும் வழிச்சி குடுத்துட்டு வயிறெஞ்சிகிட்டே வீட்டுக்குபோறானே,அவனுக்காகவும் கொஞ்சம் குரல் குடுக்குலாமே?!

சினிமான்றது மக்களுக்கானது.அதை நியாயமா,அவனை சந்தோசப்படுத்துற வகையில அவன்கிட்ட கொண்டுபோயி சேத்தா அவன் ஏன் திருட்டுத்தனமா பாக்கபோறான்?!குற்றஉணர்ச்சியோட/மட்டமான தரத்தில உள்ள பிரிண்ட்டை பாக்கணும்னு அவனுக்கு மட்டும் ஆசையா என்ன?

திரும்ப திரும்ப சொல்றதெல்லாம் ஒண்ணுதான்.ஆடியன்ஸ்-ங்குறவன் தங்கமுட்டை போடுற வாத்து மாதிரி!(வாத்துன்றது அசூயையா இருந்தாலும் ஒரு வகையில அது பொருத்தம் தான்)..சினிமாக்காரங்களே,உங்க சுய லாபத்துக்காகவும்,பேராசைக்காகவும் ஒரேஅடியா அவனை கொன்றாதீங்க!அப்புறம் நட்டம் உங்களுக்குத்தான்!

ஞாயிறு, 22 ஜூன், 2014

ஒரு விஜய் ரசிகனின்(முன்னாள்) கண்ணீர் கதை!

இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல.மீறி யார் மனதேனும் புண்படுமேனால்,அதற்கு கம்பெனி 'ஒண்ணியும் பண்ணமுடியாது' என சொல்லிக்கொள்கிறது.
#################

கி.பி.1992 டிசம்பர் 4 -அன்றையதினம் உதித்த சூரியனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தமிழ்சினிமாவில்,ஏன் உலகசினிமாவிலேயே(!) தன்னைப்போல ஒளிவீசப்போகிற ஒரு நாயகன் உதயமாகப்போகிறான் என்று!பேரொளி கொண்டு நுரைபொங்க கரை தொட்ட அலைகளுக்கு தெரிந்திருக்கவில்லை,இவன்தான் இன்னும் இருபது ஆண்டுகளுக்கு பின் தமிழ்சினிமா எனும் கடலில் மாபெரும் அலையாய் மக்கள் மனதில் வீசப்போகிறான் என்று ! (கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ..போவோம்..போயித்தான் பாப்போமே!)..இவ்வளவு ஏன் அந்த நடிகருக்கே அப்போது தெரிந்திருக்காது..இந்த கருமமெல்லாம் நடக்கப்போகிறது என்று!!ஆனால் இதத்தனையும் நடந்தது.அன்று தான்,இத்தனை பெருமைக்குக்கும் சொந்தக்காரரான..அவரின் ரசிகர்களால் 'விஜய் அண்ணா' என்று அன்போடு அழைக்கப்படும் சாட்ஷாத் இளையதளபதி விஜய் அவர்களின் முதல் படம்  'நாளைய தீர்ப்பு' ரிலீஸ் ஆனது!


இந்த இன்ட்ரோ-வுக்காக பயங்கரமா மெனக்கெட்டாலும் ரிசல்ட் என்னவோ அவர் பட ஓபனிங்சாங் போலவே சற்றே டொங்கலாய் அமைந்திருப்பது காலாம் செய்த கோலம்!ஆரம்ப காலத்தில் எஸ்.ஏ.சியும்,சங்கவியும் அவரின் திரை வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போட்டாலும் அவருக்கென்று ஒரு அடையாளம் கிடைத்தது பூவே உனக்காக திரைப்படத்திற்கு பின் தான்..யோசித்து பார்த்தால் அந்த காலத்தில் இருந்து இன்று வரை விஜய்க்கு எதிரி வேறு எங்கும் இல்லை.அவர் வீட்டுக்குள்ளயே அப்பா என்ற பெயரில் இருந்திருக்கிறார்.

கில்லி படத்தில் விஜய்க்கு கிடைத்த மாஸ் ஹீரோ அந்தஸ்திற்கு பின் அவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் உருவாகியிருந்தது.அதன்பிறகு திருப்பாச்சி,சிவகாசி,போக்கிரி என விஜய் தொட்டதெல்லாம் ஹிட் தான்.தொடர்ச்சியாய் இரண்டு படம் ஹிட்டடித்த்தும் நம்ம நடிகர்களுக்கு வரும் அரசியல் ஆசையும்,முதல்வர் நாற்காலி கனவும் விஜயையும் விட்டு வைக்கவில்லை.ஆரம்ப நாட்களில் தன்னை ஒரு தீவிர ரஜினி ரசிகனாக அடையாளபடுத்திகொண்ட விஜய்..அரசியல் ஆசை துளிர் விட்டதும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ரசிகனாய் காட்டிகொண்டார்..மக்கள் திலகத்தின் பெயரை உச்சரித்தால் தான் தமிழ்நாட்டில் அரசியல் செய்யமுடியும் என்ற தீர்க்கதரிசனம் அன்னாருக்கு அந்த சிறுவயதிலேயே இருந்தது ஆச்சரியம்தான்!

சொல்லப்போனால் இங்கு ஆரம்பித்தது விஜய் ரசிகனுக்கு கண்டம். குருவி வில்லு சுறா வேட்டைக்காரன் என எத்தனை எத்தனை கண்டங்கள்..இந்த காலக்கட்டத்தில் தான் ஒவ்வொரு விஜய் ரசிகனும் எப்படி வலிக்காத மாதிரியே நடிக்கிறது என்பதை கற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தான்..விஜய் ரசிகன்னு தெரிஞ்சா போதும் ரோட்ல சும்மா போறவன்கூட கூப்ட்டு வச்சி அடிக்க ஆரம்பிச்சானுக.இதுல உச்சபட்ச கொடுமை என்னன்னா  ராமராஜன் ஃபேன்ஸ்ல்லாம் எங்களை புடிச்சி வச்சி கலாய்ச்சானுக..ஆனா ஒண்ணுடா உங்ககிட்ட அந்த மாதிரி அடிவாங்குனதுக்கு அப்புறம் வேற எவன் அடிச்சாலும் தாங்கிக்குற சக்தி எங்களுக்கு வந்துருச்சிடா..சுறா படத்துல தியேட்டர்குள்ள மாட்டிகிட்டு கத்தி கதறி,சிக்கி சீரழிஞ்ச பின் எனக்குள் இருந்த விஜய் ரசிகன் பாதி காணாமல் போயிருந்தான்..மிச்சமிருந்த கொஞ்சமும் அரசியல் பிரவேசத்திற்காக அவர் செய்த செயல்களிலும்..சுயநலத்திற்காக அவர் அடித்த பல்ட்டிகளிலும் மொத்தமாய் காணாமல் போனது.

ஒருவழியாய் தொடர் தோல்விகளுக்கு பின் மீண்டெழுந்து காவலன்,நண்பன்,துப்பக்கின்னு ஹிட்டடிக்க ஆரம்பிச்சதுல விஜயை விடவும் அதிகம் சந்தோசப்பட்டது அவரின்  ரசிகர்கள் தான்..ஆனா விதி தான் வலியது ஆச்சே..ரெண்டு படம் ஹிட்டானதும் அண்ணனுக்கு மீண்டும் அதே அரசியல் ஆசை முதல்வர் நாற்காலி கனவு..இந்த முறை ஒரு படி அதிகம் போய் தனது அடுத்த படத்திற்கு 'தலைவா' என பெயர் வைத்து 'டைம் டூ லீட்' என சப்டைட்டிலும் வைத்தாயிற்று.இதற்கு இடையில் விஜயின் அப்பா வேறு, 'நான் அண்ணா,என் மகன் எம்.ஜி.ஆர்' என்று உச்சபட்சமாய் உளறி வைத்தார்..இப்போது புரிகிறதா வில்லன் வீட்டிலேயே இருக்கிறார் என நான் ஏன் சொன்னேன் என்று! இது  போதாதா?!ஆட்சியாளர்களின் கடும் கோபத்திற்கு ஆளாகி தலைவா ரிலீஸில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது..ஒருவழியாய் மன்னிப்பு கேட்டு சர்ச்சைகள் எல்லாம் முடிந்து படம் தியேட்டரில் வெளிவருவதற்கு முன்னே டிவிடி களிலும்,இணையத்திலும் வெளியாகிவிட்டது..டோரன்ட்டில் படம் பார்த்துவிட்டு அதற்கு நம்மவர்கள் ஃபர்ஸ்ட்  ஆன் நெட் விமர்சனமெல்லாம் எழுதியது வரலாறு..

இதெற்கெல்லாம் சிகரம் வைத்தது போல் ஒரு சம்பவம் விஜய் அவர்களின் மீதிருந்த மொத்த மதிப்பையும் குலைப்பதாய் இருந்தது..அது,2011 ல் நாகபட்டினத்தில்  இலங்கை அரசால் தண்டிக்கப்படுவதை  எதிர்த்து விஜய் மற்றும் அவர் ரசிககளால் கண்டன பொதுக்கூட்டம்..அந்த கூட்டத்தில் விஜய் பேசியது தான் ஹைலைட்..இலங்கை அரசை பார்த்து 'நான் அடிச்சா தாங்க மாட்டே நாலு நாளு தூங்க மாட்டே' என ஒரு பஞ்ச அடித்தார் பாருங்கள்..வாழ்க்கையே வெறுத்து விட்டது.அது எத்தனை முக்கியமான விசயம்..எத்தனை மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனை?!அதை எத்தனை நுட்பமாய் கையாளவேண்டும்.அதையெல்லாம் விடுத்து கைதட்டல் வாங்குவதற்காகவு ம்,தன்ரசிகர்களை உசுப்பேத்துவதாகவுமே இருந்தது அந்த பேச்சு முழுவதும்.

அவரு அரசியலுக்கு வந்தா உனக்கு என்னடா பிரச்சனை? என யாரேனும் கேட்பீர்களானால்,இது ஜனநாயக நாடு தான்..யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் தான்..ஆனால் மக்களுக்காக எதுவுமே செய்யாமல் தொடர்ந்து இரண்டு படம் ஹிட்டானதே முதல்வர் பதவிக்கு தகுதியும்,போதுமானதும் என நினைக்கும் மனநிலையே சற்று..இல்லைஇல்லை நிரம்பவே எரிச்சல் தருவதாய் இருக்கிறது.படுத்துக்கொண்டே ஜெயிப்பதற்கு இவர் ஒன்றும் எம்.ஜி.ஆரும் இல்லை..மக்களும் எம்.ஜி.ஆர் காலத்தில் வாழ்ந்தது போல் ஒன்றும் தெரியாதவர்களும் அல்ல...

கடைசியாய் ஒன்று,விஜய் அவர்களே..எத்தனை நெருக்கமான நபராய் இருந்தாலும்..தவறான வழிக்காட்டுதல் என தெரிந்தால்,அதை/அவரை உடனே புறக்கணியுங்கள்.நீங்கள் ஒரு நல்ல கலைஞன்..உங்களால் மற்றவர்களை சந்தோசபடுத்த முடிகிறது.அது ஒரு மாபெரும் வரம்.அதை செவ்வனே செய்யுங்கள்..மற்றவற்றை காலம் தீர்மானிக்கும்!Wish You A Very Happy Birthday IlayaThalabathi!

புதன், 18 ஜூன், 2014

அந்தி வானம்-சிறுகதை

எழுந்து கொல்லைபுறத்துக்கு போக வேண்டும்போல இருந்தது மாரியம்மாவுக்கு.வெளியே வானம்,இரவுமுழுக்க குடித்த இருள்எனும் மதுவின் போதையில் மயங்கிகிடந்தது.பக்கத்துவீட்டு கோணவாயன், மாட்டை கறவைக்கு அழைத்துசெல்ல தயார்படுத்தி கொண்டிருக்கும் சப்தம்கேட்டது.மணி நாலு இருக்கும் என நினைத்துக்கொண்டாள். எரிச்சலாய் இருந்தது மாரியம்மாவுக்கு.இப்படி நடக்கமுடியாம,ஒரு வெளியதெருவ போவகூட யாரோட உதவியாவது தேவையாய் இருக்கிறதே என தன்னையே நொந்துகொண்டாள்.அவள் இப்படி புலம்புவது இதுஒன்றும் முதல்முறைஅல்ல.வருஷகணக்காய் இதேநிலைமை தான்! எப்போது,அவளின் நடமாட்டம் குறைய தொடங்கியதோ அப்போதே, அவளை வாசல் திண்ணையின் ஒரு மூலையில் கொண்டுவந்து போட்டுவிட்டனர்.சொல்லப்போனால் மாரியம்மாவுக்கு,இந்த உலகில் வேறெதையும் விட அதிகம் நெருக்கமாய்இருப்பது,ஓரம் கிழிந்துபோய் கோரைகள் நீட்டியிருக்கும் அந்த பாயும்,மூத்திர வீச்சமடிக்கும் அந்த கம்பளிபோர்வையும் தான்.

இத்தனைக்கும் மாரியம்மா ஒன்றும்,ஒண்ணேஒன்னுன்னு பெத்து அதையும் கண்காணா தேசத்துக்கு பொழைக்க அனுப்பிவச்சிட்டு இங்க ஒத்தையில கிடக்கிறவ இல்ல.பிள்ளைகள் விசயத்தில் அவள் வாழ்வரசி. பொறந்தது மொத்தம் எட்டு புள்ளைக.அதுல அம்மை,பேரு தெரியாத வியாதின்னு வாரி குடுத்ததுபோக தப்பிப்பிழைச்சதுங்க அஞ்சு. மூணு பொண்ணு,ரெண்டு ஆணு!மாரியம்மாவுக்கு புருசன்னு வாய்ச்சவன் ஒரு குடிகார பய.மாசத்துல பாதிநாள் வீட்டுக்கு வந்தான்னா..மீதிநாள் ஆத்தங்கரையில சீட்டு விளையாடி கட்டியிருக்கிற வேட்டி வரைக்கும் அவுத்து குடுத்துபுட்டு,தோத்த சோகத்துல எவன்கிட்டாயாச்சும் அஞ்சுபத்துன்னு கடனைவாங்கி குடிச்சிபுட்டு கோவணம் அவுந்ததுகூட தெரியாம,ஆத்தங்கரை ஓரமா விழுந்துகிடப்பான்.

ஆனாலும் இவ எப்பவும் புருஷனை விட்டுக்கொடுத்தது கிடையாது. அப்படியே எவனாச்சும் எதாச்சும் சொல்லிபுட்டாக்கூட சாமியாடிருவா சாமி!அப்படித்தான் ஒருநாள் மாரியம்மா,குடிச்சிட்டு விழுந்து கிடந்தவனை கைத்தாங்கலா தூக்கிட்டு வர்றப்ப,எதுக்க வந்த ஊர்பெருசு ஒன்னு வாய வச்சிகிட்டு சும்மாஇருக்காம,அரை மயக்கத்துல இருந்தவனை பாத்து,

"ஏன்டா,இப்படி எப்பபாத்தாலும் சீட்டும்,குடியுமே கதின்னு கிடக்குறதுக்கு என்னத்துக்குடா உனக்கெல்லாம் ஒரு கல்யாணம் ஒருகுடும்பம்?"ன்னு எக்குதப்பா ரெண்டு வார்த்தையை உட்டுபுட்டான்."ஏன் மாரி, நீயாவது இதையெல்லாம் கண்டிக்ககூடாதா" ன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள...
  "யோவ்,சும்மா நிறுத்துய்யா.ஊர்ல எந்த ஆம்பிளையா சீட்டாடல?இல்ல எவன் குடிக்காம இருக்கான்?என்னமோ எல்லாபயலுவளும் யோக்கியமா இருக்கமாதிரி இந்தாளை பேசவந்துட்டியே?இவ்வளவு ஏன்,உன் யோக்கித என்னன்னு எனக்கு தெரியாதா?பொழுது சாஞ்சா போதும், தலைக்கு முக்காட போட்டுக்கிட்டு வயக்காட்டு பக்கமா ஒதுங்குறவன் தானே நீயி? பெருசா பேசவந்துட்ட?!"என ஒரு உலுக்கு உலுக்கிவிட்டாள்.அதுக்கப்பறம் பெருசு வாயைதிறந்து ஒருவார்த்தை பேசுவானேன்?

என்னதான் கஞ்சிகுடிக்க கூட ஒழுங்கா காசு குடுக்காம,குடிச்சிபுட்டு விழுந்து கிடந்தாலும்..பொம்பளை விசயத்தில் மரியாம்மாவை தவிர வேறோருத்தியை நினைச்சி பாத்ததில்லை அவனும்.அதுனாலயே அவளுக்கும் தன் புருசனை பத்தி ஒரு கர்வமுண்டு! 


வாழ்க்கை அப்படியே கரும்பாறையை போல அசையாமல் ஓரிடத்தில் நின்றுவிடுவதில்லை.அது கூழாங்கல் போல..காலம் எனும் நதியின் ஓட்டத்திற்கு ஏற்ப அந்த கல் பயணித்து கொண்டேயிருக்கிறது.அப்படியான கால ஓட்டத்தில்,குடித்து குடித்து வாய்வயிறெல்லாம் வெந்துபோய் ஒருநாள் செத்தும்போனான் மாரியம்மாவின் புருசன்.வாழ்ந்தவரைக்கும் பெருசா சம்பாத்தியம்னு அவன் எதுவும் கொடுத்ததில்லை. ஆனால் போகும்போது மட்டும் மறக்காம அவளின் பூவையும்,பொட்டையும் வாங்கிட்டு போயிட்டான்.

மூத்தது மூணும் பொட்ட புள்ளைக.அதுலயும் மொத புள்ள,இப்பவோ அப்பவோன்னு குத்த வைக்க நேரம் பாத்துகிட்ருக்கு.கடைசி பய, இப்போதான் பால்குடியவே மறந்துருக்கான்.இப்படி நண்டுசிண்டுகளையா வச்சிகிட்டு இவ என்னத்த சமாளிப்பாளோ,எப்படி கரையேறப்போறாளோ என அக்கம்பக்கத்துல உள்ளதுக துக்கம்விசாரிச்சிட்டு ஆறுதல் சொல்வதற்கு பதிலாய் இன்னும் பயமுறுத்திவிட்டு சென்றார்கள்.

ஆனால் மாரியம்மா ஓயவில்லை.அவ வைராகியத்துக்கு பொறந்தவ. "நீ பொறக்கையில உன் அம்மா வயித்துக்குள்ள தலைசுத்தி போயி,உசுரோட உன்ன வெளில கொண்டுவர்றதே போராட்டமா போச்சு.அப்புறம் ஒருவழியா நீ பொறந்தப்ப,ஊரே அத அதிசயமா பேசிக்கிடுச்சி"என்பாள் அவளின் அப்பத்தா! 


புருஷன் செத்ததுக்கு அப்புறம் காலுக்கு சக்கரம்கட்டினது போல ஆகிவிட்டாள் மாரியம்மா.எப்போ எழுந்திருப்பா,எப்போ தூங்குவான்றதெல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.இன்ன வேலையின்னு இல்லாம,பண்ணையார் வீட்டு மாட்டுதொழுவத்தை கூட்டி பெருக்குறதிலிருந்து,ஆம்பிளையாட்டம் முழங்கால் வரைக்கும் புடவையை ஏத்தி கட்டிக்கிட்டு வயகாட்டுல உழுவுற வரைக்கும் ஒண்ணுத்தையும் விட்டுவைக்கல.'இவ என்ன இப்படி சாமி வந்தவமாதிரி வேலைப்பாக்குறாளே' என ஊர்க்காரர்கள் எல்லாம் பயந்துதான் போனார்கள்.

ஒருவழியாய் மூணு பொம்பளை புள்ளைகளுக்கும் அவள் சக்திக்கு ஏத்தமாதிரி ஒரு வாழ்க்கையை அமைத்துகொடுத்தாள்.மூத்தவன் ரைஸ்மில்லுக்கு வேலைக்குபோக ஆரம்பிச்சு ஆறுமாசத்திலேயே,ஒரு பெண்ணை பிடிச்சுபோய் இவளைத்தான் கட்டிப்பேன்னு வந்து நின்னான். பொண்ணு வசதி இல்லைதான்."ஆமா,நாம ரொம்ப வசதி..எனக்கு கல்யாணம்ஆனப்ப,ரெண்டு நூல் புடவையும்,தாலிக்கயிறுல ஒரு குண்டுமணி அளவுக்கு தங்கத்தையும் தானே,எங்கப்பன் சீதனமா கொடுத்தனுப்பிச்சான்"என அவளாகவே சமாதனப்படுத்திக் கொண்டாள்.


கடக்குட்டியும் படிப்பு சரியா வராததால,படிப்பை பாதியில விட்டுட்டு லாரியில் கிளீனர் வேலைக்கு போயிட்டான்.இன்ன நேரம் தான் வருவான், போவான்னு சொல்லமுடியாத வேலை.மாரியம்மாவுக்கு அவன் மீது எப்பவுமே பாசம் கொஞ்சம் அதிகம்.கடைக்குட்டின்றதால மட்டுமில்ல, அவன் அப்பன் ஜாடை அப்படியே அவனுக்கும்ங்கிறதனாலயும் தான்!

மனசு சொல்றதை அப்படியே உடம்பு கேக்குற வரைக்கும் தான் வாழ்க்கை நிம்மதியாயிருக்கும்.மாரியம்மாவிற்கு வயது அதன் வேலையை காட்ட ஆரம்பித்திருந்தது.சும்மாவா,சாப்பிடகூட நேரமில்லாம சக்கரமா சுழண்ட கட்டையாச்சே.அதுனாலதான் என்னவோ,இப்போ மொத்தமா ஓஞ்சிருச்சி போல உடம்பு என நினைத்துகொண்டாள்.அதுபோதாதென்று ஒருமுறை தண்ணி தூக்க போறேன்னு சொல்லி,குளத்தாங்கரையில் வழுக்கி விழுந்துவிட்டாள்.அன்று படுத்தவள் தான்.அது ஆச்சு வருஷம் ஒண்ணு! இடுப்புக்கு கீழே அசைவுகள் குறைந்து போய்விட்டது.ஒண்ணுக்கு போவக்கூட யாராச்சும் தூக்கிகிட்டு போனாத்தான் உண்டு.

லேசாய் வானம் விடிய ஆரம்பித்திருந்து.வெகுநேரமாய் மூத்திரம் அடக்கி வயிறு வலிக்க ஆரம்பித்திருந்தது மாரியம்மாவுக்கு."பெரியவனே, பெரியவனே"என கூப்பிட்டு பார்த்தாள்.கதவு திறப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.இடுப்பாலயே தேய்த்துதேய்த்து நகர்ந்துபோய் கதவருகில் சென்று கதவை தட்டினாள்.

"ஏன்மா, காலையிலேயே இப்படி படுத்துறே,சும்மா தட்டிகிட்டே இருக்காதே. இரு இரு வர்றேன்" என அலுத்துக்கொண்டே கதவை திறந்தான்.

"வாழ்ற வயசெல்லாம் பொசுக்கு பொசுக்குனு போய் சேருதுங்க. இந்த கிழத்தைப் பாரு. இன்னும் கிடந்தது நம்ம உசுரை வாங்குது" என உள்ளிருந்து மருமகளின் குரல் மட்டும் கதவை தாண்டி வெளியே வந்தது.

மாரியம்மாவுக்கு கண்கள் கட்டிக்கொண்டது.ஏற்கனவே இருந்த அரைகுறை பார்வையையும்,அந்த விழிநீர் படலம் இன்னும் அதிகமாய் மறைத்தது. ஒருகாலத்தில,இந்த புள்ளைங்க வயிறு நிறையனும்ங்கிறதுக்காக உக்காரகூட நேரமில்லாம ஓடிகிட்டு இருந்தவளை,இப்படி ஒண்ணுக்கு போவக்கூட அடுத்தவங்க உதவி தேவைப்படுறமாதிரி எழுதிட்டானே ஆண்டவன் என தனக்குள்ளேயே புலம்பிக்கொண்டாள்.கந்தலாய் கிடந்தவளை கையோடு சேர்த்து தூக்கியபடி,கொல்லைக்கு அழைத்துபோய் மீண்டும் தூக்கி வந்து படுக்கையில் போட்டான் மூத்தவன்.ஏனோ, வழிகின்ற கண்ணீரை மட்டும் அவளால் நிறுத்தமுடியவில்லை.அந்த உடலில் இப்போதைக்கு அதுமட்டும் தான் உருப்படியாய் வேலை செய்கிறது போல என நினைத்துகொண்டாள்.

வானம் நல்ல பிரகாசாமாகியிருந்தது.மருமக பிள்ளையை பள்ளிக்கு தயார் செய்து கொண்டிருந்தாள்.பள்ளி வாகனம் வரும் சத்தம் கேட்டது. "பாப்பூம்மா,டிபன் பாக்ஸ்ல மதியத்துக்கு அஞ்சு இட்லி வச்சிருக்கேன். ஒழுங்கா எல்லாத்தையும் சாப்பிட்றனும்"என பாசம் பொங்க மகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தாள்.எல்லா வேலைகளையும் முடித்தபின்பு, மாமியார் என்ற ஒரு ஜீவன் வீட்டில் இருப்பது அப்போதுதான் நினைவுக்கு வந்தவளாய்,தட்டில் ஒரு இட்லியை வைத்து கதவுக்கு அந்தப்பக்கத்திலிருந்து தட்டை மட்டும் தள்ளிவிட்டாள்.இப்போதெல்லாம் ஒரு இட்லி,ஒரு கைப்பிடி சோறு அதற்குமேல் கொடுப்பதில்லை அவளுக்கு.அதிகமா சாப்பிட்டா பொழுதனைக்கும் கொல்லதெருவ யாரு தூக்கிட்டு அலையறதுன்ற காரணம்தான் அதற்கு."கெழவி,இட்லியை தின்னுட்டு படுத்துக்க,எனக்கு கொள்ளை வேலை கெடக்கு" என சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.
 

வெகுநேரம் ஆகியும் அவள் சாப்பிடவில்லை.தட்டில் ஈ மொய்க்க ஆரம்பித்திருந்தது.எதையோ வெறித்து பார்த்தபடியே திறந்திருந்தன அவள் கண்கள்.இப்போது மாரியம்மாவின் கண்களிலிருந்து நீர் வரவில்லை. இன்னும் சொல்லப்போனால் இனி எப்போதும் அவள் கண்களிலிருந்து கண்ணீர் வரப்போவதேயில்லை!

(வெட்டிபிளாக்கர்ஸ் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.) 

சனி, 17 மே, 2014

என்ன செய்யப்போகிறீர்கள் ஸ்டாலின்?!

 இந்தியமக்கள் மட்டுமல்லாது உலகநாடுகள் அனைத்தும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த பதினாறாவது மக்களவைக்கான தேர்தல் முடிவுகள் ஒருவழியாய் வெளியாகிவிட்டன.தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் என எல்லா ஊடகங்களும் தங்களுக்கு யார் வரவேண்டும் என நினைத்தார்களோஅவர்களே பெரும்பான்மை பெறுவார்கள் என புள்ளி விவரத்தோடு கூவின.இந்த தேர்தல் முடிவகளை பொறுத்தவரை பி.ஜே.பி பெரும்பான்மை இடங்களை பெற்று மோடி பிரதமர் ஆவார் என்பது அனைவரும் எதிர்ப்பார்த்தது தான்.அதேபோல் இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸுக்கு மரண அடி கிடைக்கும் என்பதும் அனைவரும் எதிர்ப்பார்த்த ஒன்று தான்.ஆனால் யாருமே எதிர்ப்பர்க்காத ஒன்று தமிழக தேர்தல் முடிவுகள்!தி.மு.க எதிர்ப்பு ஊடங்கள் கூட ஐந்து சீட்டுகள் கிடைக்கும் என்று சொல்லியிருந்த நிலையில்,ஒரு சீட்டு கூட அக்கட்சியால் பெறமுடியவில்லை.அதேபோல அதிமுக.விற்கு இத்தனை பெரிய வெற்றி கிடைக்கும் என அந்த கட்சியை சேர்ந்தவர்களே நினைத்து பார்த்திருக்கமாட்டார்கள்.

தி.மு.க வை பொறுத்தவரை இந்த தேர்தலில் பல சவால்களை அவர்கள் சந்திக்கவேண்டியிருந்து.சென்ற சட்டசபைதேர்தலில் விழுந்த மரண அடியின் தழும்புகள் இன்னும் மிச்சமிருக்க,அந்த அடியிலிருந்து மீண்டே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திலிருந்து..கட்சியின் ஆணிவேர் மு.க.வின் முதுமை வரை பல சவால்கள்.இதில் மு.க.வின் மூத்த மகனின் பங்காளி தகராறு வேறு.ஆனால் எல்லோரும் சொல்வதை போல் அழகிரியை அத்தனை பலம் பொருந்தியவராய் நான் நினைக்கவில்லை.இன்னும் சொல்லப்போனால் அவர் தி.மு.க.வில் இருந்திருந்தாலும் இந்த தேர்தல் முடிவுகளில் பெரியதாய் எந்த மாற்றமும் இருந்திருக்காது!

இத்தனை பிரச்சனைகளையும் மீறி தி.மு.க வின் மீது ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டது என்றால் அதற்கு முழுக்காரணமும் ஸ்டாலின் தான்.நீண்ட காலமாகவே கட்சியின் தலைமையில்,அணுகுமுறையில் மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்ப்பார்த்திருந்தனர்.அந்த மாற்றம் இப்போதுதான் சாத்தியப்பட்டிருக்கிறது.காலம் தாழ்த்து நிகழ்த்தப்பட்ட மாற்றம் என்றாலும் ஸ்டாலின் பொறுப்பிற்கு வந்தபின் தான் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படிருகின்றன.காங்கிரஸை கழட்டி விட்டதிலிருந்து வாரிசுகளுக்கு சீட் கிடையாது என்ற சொன்னவரை அனைத்தும் பாராட்டப்படவேண்டிய திடமான முடிவுகள்.

சூறாவளி சுற்றுப்பயணம்,ஊடக வழி பிரச்சாரம் என அவர் கடமையை சரியாகவே செய்திருக்கிறார்.இவை அனைத்தையும் மீறி மக்களுக்கு இன்னும் தி.மு.க மீதான கோபம் தணியவில்லை என்பது தான் நிதர்சனம்.தேர்தல் முடிவுகளுக்கு பின் பத்திரிக்கையாளர்களிடம் "மக்களுக்கு இந்த முடிவுகள் சந்தோசம் என்றால் எங்கள்ளுக்கும் சந்தோசம் தான்" என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.அரசியலுக்கு அப்பாற்பட்டு ஸ்டாலினை அவரது சில நற்பண்புகளுக்காகவே பிடிக்கும்.இத்தனை வருட அரசியல் பயணத்தில் தோல்விகள் இல்லாது எந்த வெற்றியும் கைகூடாது என்பதை நன்றாகவே புரிந்தி வைத்திருப்பார்.இன்னுமும் தி.மு.க வின் பழைய வாக்கு வங்கி அப்படியேத்தான் இருக்கிறது.பிரச்சனை என்னவென்றால் அந்த வாக்குவங்கி விரிவடையாமல் அப்படியே இருப்பதுதான்.

இப்போதைய சூழலில் தி.மு.க.தொண்டர்களுக்கு தேவை இந்த தோல்விகளை மறந்துவிட்டு மீண்டும் களப்பணியாற்ற கூடிய உத்வேகமும்,உற்சாகமும்தான்.இன்றைய நிலையில் ஸ்டாலினை தவிர வேறு யாராலும் அதை தரமுடியாது.ஸ்டாலின் அவர்களே ஒரு மிகப்பெரிய இயக்கத்தின் வாழ்வும்,சாவும் தற்போது உங்கள் கைகளில்.இந்த பதிவிற்கு 'என்ன செய்யப்போகிறீர்கள் ஸ்டாலின்?' என கேள்விகுறியாய்தான் தலைப்பு வைத்திருக்கிறேன்.ஆனால் இதுபோன்ற பல கேள்விக்குறிகளை நீங்கள் ஆச்சர்யகுறியாய் மாற்றி காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.இனி உங்கள் தந்தையிடமிருந்து எதை கற்றுக்கொள்ளவேண்டும்,எதை கற்றுகொள்ளகூடாது என்பதை உணர்ந்துகொள்வதில் தான் இருக்கிறது உங்கள் வெற்றியின் சூட்சமம்!

மாண்புமிகு தமிழகமுதல்வருக்கு: பத்து மணிநேர மின்வெட்டு,பஸ் டிக்கெட் உயர்வு,வில்வாசி ஏற்றம் இன்னும் பல பல இருந்தாலும் மக்கள் இன்னுமும் உங்கள் மீது நம்பிக்கை வைத்து ஒரு வரலாற்று வெற்றியை உங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள்.வெற்றி பெற்றதும் சட்டசபை,அண்ணா நூலகம் போல எதையாவது ஒன்றை மாற்றியே ஆகவேண்டும் என அடம்பிடிக்காதீர்கள்.மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்ற தத்துவம் தெரியும்தானே?!

பொதுமக்களுக்கு: இனி அடுத்த எலெக்சன் வரை நம்மை யாரும் கண்டுக்கமாட்டாங்க.புள்ளைகுட்டிகளை போய் படிக்க வைப்போம் வாங்க:)

வியாழன், 15 மே, 2014

த்ரிஷ்யம் விமர்சனம்

 இந்த படத்தை பற்றி எழுத ஆரம்பிப்பதற்கு முன் "கீபோர்ட் தேயத்தேய எல்லாரும் இந்த படத்தை பத்தை எழுதிட்டாங்க..கண்ணு எரியஎரிய நாமளும் எல்லாத்தையும் படிச்சு களைச்சாச்சு!இதுக்கு மேலேயும் இந்த படத்தை பத்தி எழுதணுமான்னு" ஒரு எண்ணம் வந்தது என்னவோ உண்மை.ஆனாலும் தெரியாத்தனமா ஏதாவது ஒரு சூரமொக்கை படத்துக்கு போயி வெளில வந்ததும்..பிரெண்ட்ஸ்க்கு போனை போட்டு "மாப்ள தயவுசெஞ்சு அந்த படத்துக்கு போயிறாதரா...த்தா சாவடிச்சுட்டானுக" என எப்படி பொங்குகிறோமோ அதே மாதிரி ஒரு நல்ல படைப்பை பார்த்து அது மனதிற்கு பிடித்துபோய்விட்டால்,அதை தனக்கு தெரிந்தவர்களிடம் பகிர்ந்துகொள்வதும் ஒரு சினிமா ரசிகனின் கடைமைதான்.அதுமட்டுமில்லாது ஒரு நல்ல படைப்பை பாராட்டுவதையும்,கொண்டாடுவதையும் விட வேறெப்படி அந்த படைப்பிற்கு மரியாதை செலுத்திவிட முடியும்?!


இந்த படம் மொத்தம் ரெண்டே முக்கால் மணிநேரம்.இப்பல்லாம் ரெண்டேகால் மணிநேரத்திற்கு அதிகமாக ஒரு படம் ஓடினாலே மக்கள் கடுப்பாக ஆரம்பிச்சிடுறாங்க.அந்த அளவுக்கு யாருக்கும் பொறுமை இல்லாமல் போய்விட்டது...இரண்டே முக்கால் மணிநேரம் ஒரு ரசிகனை போரடிக்காமல் உட்கார வைக்கவேண்டும்.அதைவிடவும் முக்கியம் அத்தனை மணிநேரம் செலவு செய்வதற்க்கு அந்த படம் ஒர்த்'தாக இருக்கவேண்டும்.த்ரிஷ்யம் பட இயக்குனர் 'ஜீது ஜோசப்' தனது அபாரமான திரைக்கதையால் அதை அசால்ட்டாக செய்து காட்டியிருக்கிறார்.

கணவன்,மனைவி இரண்டு பெண் குழந்தைகள் என அழகான ஒரு குடும்பம்.அது தங்களுக்காக படைக்கப்பட்ட சொர்க்கம் என சந்தோசமாய் வாழ்பவர்களின் வாழ்க்கையில் ஒரு புது நபர் உள்ளே நுழைய அதனால் ஏற்படும் பிரச்சனை,சராசரி குடும்பஸ்தனான மோகன்லால் அந்த பிரச்னையை அதுவும் அதிகார வர்க்கத்திற்கு எதிராக எப்படி எதிர்க்கொண்டு சமாளிக்கிறார் என்பதுதான் கதை.லாலேட்டன் நன்றாக நடித்திருக்கிறார் என்று எழுதினால் அது நூற்றாண்டு கிளிசேத்தனமாய் மாறிவிடும்.ஆனாலும் வேறு வழியில்லை.மனுஷன் பின்னியிருக்கிறார்.குறிப்பாய் அவர் கதாப்பாத்திரத்தை வடிவமைத்த விதம் கிளாஸ்..கேபிள் டிவி நடத்தும் மனிதராய் வருகிறார்.சினிமா வெறியர்.இன்னைக்கு வீட்டுக்கு வரல கடையிலேயே படுத்துக்கிறேன் என வீட்டில் சொல்லிவிட்டு..இரவு டிவியில் பலான பாடலை பார்த்ததும் மூடாகி கட்டுபடுத்த முடியாமல் வீட்டுக்கு போயி மனைவியிடம் வழிவதும்,காலையில் சின்னமகள் 'ஏன்ப்பா நைட்டு வரமாட்டேன் சொல்லிட்டு அப்புறம் வந்தீங்க?' என கேட்கையில் சமாளித்து மலுப்புவதுமாய் லாலேட்டேன் எல்லா பந்திலும் சிக்சர் அடித்திருக்கிறார்.

படம் ஆரம்பித்து ஒரு மணிநேரம் வரை 'ச்சே என்ன ஒரு அழகான சந்தோசமான குடும்பம்..கடைசிவரை இப்படியே இருக்கனும்'என நாம் நினைக்கையிலேயே மூத்த பெண் வடிவில் சிக்கல் வர,அங்கு திரியை பற்ற வைக்கிறார் இயக்குனர்.அது கொஞ்சகொஞ்சமாய் பரவ ஆரம்பித்து இடைவேளைக்கு பின் வெடித்து சிதறுகிறது.

பாராட்டுவதற்கு நிறைய விசயங்கள் இருந்தாலும் சில நெருடல்களும் இருக்கவே செய்தன.என்னதான் லாலேட்டன் எல்லா படங்களையும் பார்த்து பல விஷயங்கள் தெரிந்தவரை காண்பிக்கப்பட்டாலும்..ஒரு கொலையை மறைக்க இத்தனை நேர்த்தியாய் ஒரு சாதாரண மனிதனால் யோசிக்கமுடியுமா என்று தோன்றியது.புதிதாய் கட்டிகொண்டிருக்கும் காவல் நிலையம் என்றாலும் மோகன்லால் வருவதையோ,அல்லது புதைத்துவிட்டு போவதையோ எந்த காவலர்களும் பார்க்கவேயில்லை என்பது சற்றே உறுத்தியது.

இதுவேற இல்லாம இது எந்த படத்தோட உருவல்ன்னு ஒரு தனிப்படையே அமைச்சி ஆராய்ச்சி செய்துகிட்டு இருக்காங்க.எது எப்படியோ இது ஒரு பரபர த்ரில்லர் மூவி.எல்லாரும் பாத்துருப்பிங்க.பாக்காதவங்க கண்டிப்பா பாருங்க.ஆஹா மீனாவை பத்தி சொல்லாம விட்டுட்டனே!என்ன சொல்றது ஆன்ட்டி ஆனாலும் இன்னும் உங்க அழகு உங்களை விட்டு போவலைங்க..ஹிஹி

எழுதி முடிச்சிட்டு படிச்சி பாத்தா பல இடங்கள்ல ஜாக்கி'த்தனம் எனக்கே அப்பட்டமா தெரிஞ்சிது.என்ன பண்றது,அதை படிச்சி வளந்தவிங்க தானே நாமெல்லாம்..நாடி நரம்புல எல்லாம் அது கலந்திருக்கத்தான் செய்யும்! :-)


ஞாயிறு, 9 மார்ச், 2014

கோச்சடையான் பாடல்கள் விமர்சனம் (First on Net)


இன்று நாளை என்று எதிர்ப்பார்ப்புகளை எகிறவைத்து மிக நீண்டதொரு காத்திருப்புக்குப் பின் ஒருவழியாக சூப்பர்ஸ்டார் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் மெகா கூட்டணியின் கோச்சடையான் பாடல்கள் இன்று வெளியிடப்படுகின்றன.இசை வெளியீட்டுவிழா இன்றுதான் என்றாலும் சோனி நிறுவனம் நேற்றுஇரவே ஐடியூன்ஸில் அதிகாரப்பூர்வமாக பாடல்களை வெளியிட்டுவிட்டது.பொதுவாய் ரகுமானின் ஆல்பம் ரிலீஸ் என்றாலே எதிர்பார்ப்பு எகிறி நிற்கும்.இது தலைவரின் படம் வேறு.சொல்லவா வேண்டும்?!எதிர்பார்ப்பு தாறுமாறாய் எகிறி கிடக்கிறது.இத்தனை எதிர்பார்ப்புகளையும் கோச்சடையான் பாடல்கள் பூர்த்தி செய்துருக்கிறதா என இப்போது பார்க்கலாம்.



எங்கே போகுதோ வானம்:
இந்த ஆல்பத்தில் முதலாவதாய் வெளியிடப்பட்ட பாடல் இதுதான்.கிட்டதட்ட ஐந்து மாதங்களுக்கு முன்பே சிங்கிள் டிராக்காய் ரிலீஸ் செய்யப்பட்டது.ரஜினியின் ஓபனிங் சாங் சென்டிமென்ட் படி இந்தபாடலையும் எஸ்பி.பியே பாடியுள்ளார்.ரசிகர்களுக்கு ரஜினி மெசேஜ் சொல்வதைப்போல அமைந்துள்ளது பாடலின் வரிகள்."உங்களின் வாழ்த்துகளால் உயிர்க்கொண்டு எழுந்துவிட்டேன்.வாழ்த்திய மனங்களுக்கு என் வாழ்க்கையை வழங்கிவிட்டேன்" என்ற வரிகளை கேட்கையில் கடந்தகால நினைவுகள் வந்து சோகங்களாய் மனமெங்கும் அப்பிக்கொள்கிறது.வழக்கமான தலைவர் பட ஓபனிங் சாங்க்ஸ் தருகின்ற உற்சாகம் ஏனோ இதில் கொஞ்சம் மிஸ்ஸிங்!

மணப்பெண்ணின் சத்தியம்:

இது லதா ரஜினிகாந்த் பாடியிருக்கும் பாடல்.திருமணத்தின் போது மணப்பெண் உறுதி எடுப்பது போல பாடல் வரிகள் எழுதப்பட்டிருக்கிறது.லதாவின் மென்குரலும்,வைரமுத்துவின் கவித்துவ வரிகளும் ஆகப்பெரும் பலம் இப்பாடலுக்கு.வெகுநாட்களுக்கு பிறகு பாடல் வரிகளை தெள்ளத்தெளிவாக கேட்க முடிந்ததற்காகவே ரகுமானுக்கு ஒரு ஸ்பெஷல் பொக்கே கொடுக்கலாம்.soothing melody!

எங்கள் கோச்சடையான்:

கோச்சடையானின் புகழ்பாடும் பாடல்.இன்டர்லூடில் செண்டைமேளமும்,ட்ரம்ஸுமாய் அதிர விட்டிருக்கிறார் ரஹ்மான்!Really It's goosebumping! தியேட்டரில் விசில் சத்தம் காதை  பிளக்கபோகும் பாடலாய் நிச்சயம் இது இருக்கும்.

மெதுவாகத்தான்...எனை ஈர்க்கிறாய்:

எஸ்.பி.பியும் சாதனா சர்க்கமும் இணைந்து பாடியிருக்கும் மெலோடி இது.கோச்சடையானின் மகன் ராணாவுக்கும் அவன் காதலிக்கும் இடையேயான டூயட்டாய் இருக்ககூடும்.இந்த பாடலுக்கு எஸ்.பி.பி இல்லாது வேறு குரலை பயன்படுத்தி இருந்தால் இன்னும் ஃப்ரெஷ்ஷாய் இருந்திருக்குமோ என ஏனோ தோன்றியது.இன்னும் சிலமுறை கேட்டால் என் ஃபேவரைட் லிஸ்டில் இடம்பிடித்துவிடும் வாய்ப்புகள் அதிகம்!ஆல்பத்தில் எல்லாரையும் கவரப்போகும் பாடலாகவும் இதுவே இருக்கப்போகிறது.

இதயம் நழுவி..:

ஸ்ரீனிவாஸ் மற்றும் சின்மயி பாடியிருக்கும் பாடல்.பிரிவின் வலியை கனகட்சிதமாய் வார்த்தைகளிலும்,இசையிலும் கொண்டு வந்திருக்கிறார்கள்.கேட்கலாம் ரகம்.

மாற்றம் ஒன்றுதான் மாறாதது:

தலைவரின் வாய்ஸில் "எதிரிகளை ஒழிக்க எத்தனையோ வழிகளுண்டு.முதல் வழி மன்னிப்பு!" என்று தொடங்குகிறது பாடல்.ஹரிசரண் பாடியுள்ள பாடலில் இடையிடையே,ரஜினியின் தத்துவ ஒன்லைனர்கள் பாடல் முழுக்க வருகிறது.எந்த சிட்சுவேஷனில் இந்த பாடல் வருகிறது,எப்படி இதை படமாக்கியிருப்பார்கள் என காண ஆர்வத்தை கிளப்பி விட்டுவிட்டார்கள்.தலைவர் அவரின் ட்ரேட்மார்க் சிரிப்போடு சொல்லும் "நண்பா எல்லாம் கொஞ்ச காலம்" என்ற பன்ச் செம்ம!

மணமகனின் சத்தியம்:

மணமகள் சத்தியம் பாடலின் Male version இது.ஹரிசரண் பாடியுள்ளார்.தாலாட்டு கேட்பதை போன்றதொரு ஃபீல்..செவிகளை செல்லமாய் வருடி செல்கிறது."அர்த்த ஜாம திருடன் போல் அதிர்ந்து பேசேன்! காமம் தீர்ந்த பொழுதிலும் எந்த காதல் தீரேன்!" என வார்த்தைகளில் விளையாடியிருக்கிறார் வைரமுத்து.

ராணாவின் கனவு (Raana's Dream):

எங்கே போகுதோ வானத்தின் instrumental version.லயிக்கவேண்டிய இசை!

கர்மவீரன்:

ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவர் சகோதரி ஏ.ஆர்.ரெஹைனா பாடியிருக்கும் பாடல்.கிளைமேக்ஸ் சாங் என சொல்ல கேள்வி!இந்த ஆல்பத்தில் அதிக நேரம் ஒலிக்ககூடிய பாடலும் இதுதான்.மொத்தம் 6.46 நிமிடங்கள்.அவ்வளவாய் ஈர்க்கவில்லை.

மொத்தத்தில் ரஹ்மானின் பாடல் கேட்க கேட்கத்தான் பிடிக்கும் என்ற லாஜிக் சில பாடல்களுக்கு பொருந்தினாலும் பல பாடல்கள் அந்த லாஜிக்கை உடைத்து முதல் முறை கேட்கையிலே கவர்ந்துவிட்டன.ரஹ்மான் தன் வேலையை செவ்வனே செய்துவிட்டார்.இனி ரசிகர்கள் கொண்டாட வேண்டியதுதான் பாக்கி.ஏய்..ப்பா...படத்தை சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்கப்பா.....


வியாழன், 27 பிப்ரவரி, 2014

தலைகீழ் விகிதங்கள்-ஒரு வாசிப்பனுபவம்!

எழுத்தாளர் எஸ்.ரா அவர்கள் தமிழின் மிகச்சிறந்த நூறு நாவல்களுள் ஒன்றாக 'தலைகீழ் விகிதங்கள்' புத்தகத்தை குறிப்பிட்டிருந்நதார்.இணையத்திலும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் என்று பலரும் சொல்லவே,புத்தகத்தை வாங்க ஒருபெரும் போராட்டம் நடத்தி(!) ஒருவழியாய் வாங்கி,படித்தும் முடித்தாயிற்று!


நாவலின் முன்னுரையில் இந்த புத்தகம் எழுதவேண்டி இருந்ததின் அவசியத்தையும்,இதற்கு கிடைத்த வரவேற்பை பற்றியும்,பிற்பாடு வாசகர்கள் இதேப்போல் ஒரு நாவலை மீண்டும் எழுதசொல்லி வற்புறுத்துகையில்,அறுபது வயதான நான் எப்படி மீண்டும் முப்பது வயது இளைஞனாக மாறுவது சாத்தியமில்லையோ அதுமாதிரி மீண்டும் இதுப்போல் ஒரு நாவல் எழுதுவதும் சாத்தியமில்லை என்று புறக்கணித்ததை பற்றியும் நாவலாசிரியர் நாஞ்சில்நாடன் வாசகர்களிடம் பகிர்ந்துள்ளார்.அதுமட்டுமில்லாமல் இந்த நாவல்தான் பின்னால் இயக்குநர் தங்கர்பச்சனால் சொல்ல மறந்த கதை என்று திரைப்படமாக எடுக்கப்பட்டது.உண்மையில் இந்த தகவலை படித்ததும் சற்றே ஏமாற்றமாய் தான் இருந்தது.ஏனெனில் புத்தகத்தை வாசிக்கையில் கிடைக்கவேண்டிய சுவாராஸ்யம் குறைந்துவிடுமே என்பதனால் தான்!நல்லவேளையாக சொல்லமறந்த கதை படத்தை பார்த்து வெகுநாட்களாகி விட்டதால் அவ்வளவாய் காட்சிகள் நியாபகத்தில் இல்லை.இன்னொரு விசயம்,இயக்குநர் தங்கர்பச்சன் இந்த நாவலை படமாய் எடுக்க விருப்பபட்டு,அதற்காக கொடுத்த பணத்தில் தான் சில ஆண்டுகளுக்கு முன் இதய அறுவைசிகிச்சை செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.உண்மையில் இதை படித்ததும் இதற்காக சந்தோசப்படுவதா இல்லை வருத்தப்படுவதா என்று புரியாத மனநிலையில் இருந்தேன்.

சிவதாணு படித்துவிட்டு வேலை கிடைக்காது பெரும் மனப்போராட்டத்துடன் வாழும் ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்தவன்.அவனுக்கு கீழ் ஒரு தங்கை,இரண்டு தம்பிகள் என அவனுக்கு கிடைக்கும் போகும் வேலையை நம்பி வறுமையை சகித்துக்கொண்டு வாழ்கின்ற குடும்பம்.வேலைக்காக எவ்வளவு முயற்சித்தும் எந்த பலனும் இல்லாத நிலையில்,சிவதாணுவின் குடும்ப நண்பர் மூலமாக,ஊரின் பெரிய மனிதரும் ஹோட்டல் உரிமையாளருமான சொக்கலிங்க பிள்ளையின் மகளை மணம் முடிக்க முற்சிகள் நடக்கிறது.ஆரம்பத்தில் இருக்குடும்பங்களின் அந்தஸ்த்திற்கும் இடையே உள்ள வேறுப்பாட்டை சிவதாணு உணர்ந்து முதலில் இந்த திருமணத்திற்கு மறுத்தாலும்,எல்லோரது தொடர்ச்சியான மூளைச்சலவையால் திருமணத்திற்கு சம்மதிக்கிறான்.இங்கிருந்து வெகுவேகமாய் பயணிக்கிறது கதை.

வசதி இல்லாதவன் என்ற ஒரே காரணத்திற்காக மாமனார் வீட்டில் சிவதாணுவுக்கு நடக்கும் அவமரியாதைகளையும்,இயல்பிலேயே தன்மானம் அதிகம் உள்ளவனுக்கு இந்த அவமரியாதைகள் தரும் வழிகளையும் சிவதாணு பாத்திரத்தின் வழியே வெகுநுணுக்கமாய் விவரித்துள்ளார் நாஞ்சிலார்.வாழ்க்கை பெரும் போராட்டமாய் நகர்கையில் எல்லாவற்றிற்கும் தீர்வாய் இருக்கப்போகும் அந்த வேலை கிடைத்ததா?பெற்றவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டு கணவனை தவறாய் பேசிவிட..அதனால் ஏற்படும் பூதாகரமான விளைவுகள்..அந்த பிணக்கை முதலில் யார் தீர்ப்பது என உருவாகும் ஈகோ போட்டிகள்,கடைசியில் சிவதாணு மனைவி பார்வதியோடு சேர்ந்தானா?என்பதையெல்லாம் சொல்லி நிறைவுப்பெருகிறது நாவல்.

சாதரண மனிதர்களின் ஆசைகள்,கனவுகள்,கோபங்கள்,வலிகள் ஆகியவற்றை மிக நுணுக்கமாய் அணுகி ஒரு அழகிய உணர்ச்சி போராட்டாமாய் இந்த நாவல் படைக்கப்பட்டுள்ளது.கதையின் ஊடேயே வரும் நாஞ்சில் மண்ணின் வட்டார வழக்கு சுவாரஸ்யமாய் இருந்தாலும் சில வார்த்தைகள் எனக்கு புரியவில்லை.இப்போதுதான் ஒவ்வொன்றாய் நண்பர்களிடம் கேட்டு அர்த்தம் தெரிந்து கொண்டிருக்கின்றேன்.நாவலை படித்து முடித்ததும் சொல்ல மறந்த கதை படத்தை பார்க்க வேண்டும்போல் தோன்றுகிறது.வேறொன்றுமில்லை,தங்கர் எப்படிஇந்த நாவலுக்கு திரைக்கதை அமைத்திருக்கிறார் என பார்க்க வேண்டிதான்!!

தலைகீழ் விகிதங்கள் அவசியம் படிக்கவேண்டிய நாவல்.

புத்தக விவரம்:
தலைகீழ் விகிதங்கள்
விஜயா பதிப்பகம்.
பக்கங்கள் : 296
விலை       : 130/-

சனி, 22 பிப்ரவரி, 2014

ராஜீவ் கொலையும்,வடஇந்தியர்களின் பொதுப்புத்தியும்

இந்தி பேசத்தெரியாதவனை எப்படி இந்தியனாய் ஏற்றுக்கொள்ளக்கூடாது என வட இந்தியர்களின் மூளையில் உறைந்து போயிருக்கிறதோ அதேபோல இந்த ராஜீவ் கொலை வழக்கிலும் சில முன்முடிவுகளை அவர்களாகவே எடுத்துக்கொண்டு மொத்த தமிழர்களையும் கொலை குற்றவாளிகளாவும் தேசத்துரோகிகளாகவும் பாவித்து அதை இன்றளவும் நம்பிக்கொண்டும் மற்றவர்களை நம்ப வைக்கவும் பெரும் பிரயத்தனப்பட்டுக் கொண்டுருக்கின்றனர்.இதில் வருத்தமான விசயம் என்னவென்றால் இதுமாதிரியான எண்ணம் அங்குள்ள பாமர மக்களுக்கு மட்டும்தான் என்றில்லை..மெத்த படித்தவர்களும் இதை பற்றிய எந்த புரிந்துணர்வும் இல்லாமல் தான் பேசுகின்றனர்.

ராஜீவ் காந்தியின் கொலை வரலாற்று சோகம் தான்.சிந்திக்க தெரிந்த எந்த மனிதனும் அதை ஆதரிப்பானில்லை!இன்றளவும் அதற்காக வருத்தப்பட்டு கொண்டிருக்கோம் தான்.ஆனால் ஒரு உயிர் பழியானதற்காக வாய்க்கிழிய மனிதநேயம் பேசும் இவர்கள்தான்,லட்சக்கணக்கில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு ஆதரவாய் ஆயுதங்களையும்,படைகளையும் கொடுத்து இந்திய அரசு பழிக்குபழி என்று செயல்படுகையில் மொத்த இனமும் அழிந்து சாவதை பார்த்து சந்தோசப்பட்டார்கள்!அப்போது ராஜீவ்க்காக மனிதநேயம் பேசியவர்களின் வாய்களில் இப்போது கோரப்பற்களில் ரத்தம் வழிய சிரிப்பதை காண சகிக்க முடியாதிருந்தது.

இப்போதும் அந்த கொலை வழக்கில் சம்பந்தபட்டவர்கள் என்று சொல்லி சாந்தன்,முருகன்,பேரறிவாளன் ஆகிய மூவரின் தலைக்குமேல் தூக்கு கயிறு தொங்கி கொண்டிருந்த வேளையில்,கொஞ்சமும் இரக்கமின்றி அவர்கள் சாகவேண்டியவர்கள் தான் என்றார்கள்.அவர்களை உசுப்பேற்றி அந்த வெறுப்பு கொஞ்சமும் நீர்த்து போய் விடாதபடி காங்கிரஸ் சார்பு வடஇந்திய ஊடகங்கள் கச்சிதமாய் பணியாற்றின..பணியாற்றிக்கொண்டும் இருக்கின்றன!

மூன்று நாட்களுக்கு முன் மூவரின் தூக்கு தண்டனையையும் ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது..என்னுடன் வேலை பார்க்கும் ஒரு வடஇந்தியர் என்னிடம் இப்படி கேட்டார். "அந்த கொலைக்காரய்ங்க மூணு பேருக்கும் தூக்கு தண்டனை கொடுக்காதது சரியா?தப்பா?" என்று இந்தியில் கேட்டுவிட்டு,நான் என்ன பதில் சொல்லப்போகிறேன் அதைவைத்து என்னை எப்படி மடக்கலாம் என்ற நோக்கில் அர்த்தமாய் பார்த்தார்.இவர்களுக்கு இதே வேலைதான்.மற்ற விசயங்களில் அவர்களுடன் சுமூகமாய் இருந்தாலும் விடுதைப்புலிகள்பற்றியோ,ராஜீவ் கொலையில் இந்த அப்பாவிகள் பக்கமிருக்கும் நியாயத்தை பற்றி பெசுகையிலோ நம் பொறுமையை சோதித்துவிடுவார்கள்.எனக்கு தெரிந்து கிட்டத்தட்ட எல்லோரும் இதே ரகம் தான்.அப்படி நியாயத்தை பேசுகையில் நீயும் தமிழன் தானே,அதனால் தான் அவர்களுக்கு ஆதரவாய் பேசுகிறாய்,அவர்கள் தேசத்துரோகிகள் அவர்களை ஆதரித்து பேசுவதும் தேசத்துரோகம் தான் என்ற அளவிற்கு போய்விடுவார்கள்.ஏற்கனவே இந்த விசயத்தில் நிறைய அனுபவப்பட்டிருகின்றேன்.

அதனால் உணர்ச்சிவசப்படாமல்,அந்த இந்திக்காரரை பார்த்து,"இரண்டு இத்தாலி கடற்படையினர் எந்த காரணமுமேஇல்லாமல் இரண்டு இந்திய மீனவர்களை சுட்டு கொன்றார்களே,அவர்கள் இருவருக்கும் தூக்குதண்டனை அளிக்கப்படமாட்டாது என உறுதி சொல்லி விசாரணைக்கு வரசொன்னதே இந்திய அரசு..நியாபகம் இருக்கா?கொன்னது அவுனுகதான்னு தெரியும்..இருந்து அந்த சலுகை அளிக்கப்பட்டது.ஆனா இவுங்க மூணு பேரும் சந்தேகத்தின் பேரில் தான் குற்றவாளிகள்.செஞ்ச தப்புக்கே தூக்கு இல்லாதபோது செய்யாத தப்புக்கு எதுக்கு தரனும் தூக்கு?" என்றேன்.எந்த பதிலும் சொல்லதோன்றாது அப்படியே அமைதியாகிவிட்டார்.பின்னால் யோசித்து பார்த்திருக்கக்கூடும்.

ராஜீவ் கொலையை பொருத்தவரையிலும் உண்மையை உரக்க சொல்ல வேண்டிய ஊடகங்களோ உண்மையை திரித்து சொல்வதிலேயே குறியாய் இருக்கின்றன.நம் மீதான வீண் பழிகளையும்,நம் தரப்பு நியாயங்களையும் பிற மாநில மக்களுக்கு யார் புரிய வைப்பது?யார் புரிய வைக்க போகிறார்கள்?ஆனால் இனியும் தாமதிக்காமல் இந்த உண்மைகள் எல்லோருக்கும் உணரவைக்க படவேண்டும்.ஒருவேளை அது முன்பே புரியவைக்கப்பட்டிருந்தால் இலங்கையில் இத்தனை தமிழர்கள் செத்து மடிந்திருக்க மாட்டார்கள்.

வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

கோலிசோடா/Moebius கொரியன் சினிமா


இங்கு எல்லோருக்கும் ஏதோ ஒரு அடையாளம் நாம் விரும்பியோ,விரும்பாமலோ இந்த சமூகத்தால் நமக்கு கொடுக்கப்படிருக்கிறது.பிடிச்சிருக்கோ பிடிக்கலையோ நாமும் அந்த அடையாளங்களை சுமந்து திரிந்தே வாழ பழகிவிட்டிருக்கிறோம்.ஆனால் எந்த அடையாளங்களுமே இல்லாமல்,ஏன் அவர்களின் உண்மையான பெயர்கூட மற்றவர்களுக்கு தெரியாமல்,அவரவர் வாய்க்கு வசதியான பெயர்களால் அழைக்கப்பட்டு,ஒருக்கட்டதில் அதில் ஏதோ ஒரு பெயராகவே மாறிவிடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.அப்படி எந்த அடையாளமும் இல்லமால் வாழ்பவர்களுக்கு திடீரென ஒரு அடையாளம் கிடைக்க அதை எப்படியாவது தக்க வைத்துகொள்ள போராடும் நான்கு பசங்களின் கதைதான் கோலிசோடா!!


நாலு பசங்க,அப்புறம் கோயம்பேடு மார்கெட் தான் கதைக்களம்னு சொன்னதும் அங்காடி தெரு டைப் கதையாஇருக்கும்னு நினைச்சா..சர்ப்ரைஸ்!!பசங்க படத்துல வர்ற அதே டீம் தான் இந்த படத்துலயும்..படம் ஆரம்பத்துல கொஞ்சம் ஸ்லோவோ இருந்தாலும் கதைக்குள்ள போக ஆரம்பிச்சதும் விறுவிறு தான்..கோயம்பேடு மார்க்கெட்டையே கன்ட்ரோல் வச்சிருக்க வில்லன்,ஒரு சந்தர்பத்துல அவனை பகைச்சிக்க வேண்டிய கட்டாயம் இந்த நாலு பசங்களுக்கும் ..அந்த பணபலமும் ஆள்பலமும் உள்ள கூட்டத்தை எதிர்த்து ஜெயிச்சாங்களா, தங்களோட லட்சியத்தை அடஞ்சாங்களா இல்லையான்றது தான் கிளைமேக்ஸ்.

படத்துல நாலு சின்னபசங்க சேந்து அத்தனை ரவுடிகளையும் அடிக்கிறது,கிளைமேக்ஸ்ல அத்தாம்பெரிய மார்க்கெட் தாதாவை அசால்ட்டா கடைக்குள்ள கட்டம் கட்டுறதுன்னு நிறைய தில்லாலங்கடித்தனங்கள் இருந்தாலும் திரைக்கதையோட வேகத்துலயும்,அந்த இடத்துல பசங்க அடிவாங்குறப்ப எப்படியாச்சும் வில்லனுகளை திருப்பி அடிச்சிடனும்னு நம்ம மனசு தவிக்கிறதுலயும் மத்த லாஜிக் கேள்விகள் எல்லாம் மறந்துபோயிடது.மோர் ஓவர்,நம்ம மாஸ் ஹீரோக்கள் ஹீரோயிசம்னு நினைச்சு பண்ற அக்கப்போர்களை கம்பேர் பண்றப்ப இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல!மொத்ததுல கோலி சோடா மூர்த்தி சிறுசானாலும் கீர்த்தி பெருசு!!
@@@@@@@@@@@@@@@@@@@

சில தினங்களுக்கு முன் இயக்குனர் வசந்தபாலன் ஒரு கொரியன் படத்தை பத்தி அவரோட முகப்புத்தகத்துல இப்படி எழுதியிருந்தாரு."உங்களுக்குஉண்மையாவே கட்ஸ் இருந்தா இந்த படத்தை பாருங்க"ன்னு சொல்லி ஒரு படத்தை பத்தி சொல்லியிருந்தாரு.அந்த படம் பேரு 'Moebius' .சரி அப்படி என்னதான் இருக்குதுன்னு நெனைச்சி அந்த படத்தை பாக்கனும்னு முடிவு பண்ணினேன்.பெரும்பாலும் ஹாரர் டைப் படங்களில் தான் கொரியன்ஸ் கில்லி..இதுவும் அதுமாதிரி படமாத்தான்  இருக்கும்னு நினைச்சேன்.பட்,இது டோட்டலா வேறமாதிரி.நம்ம ஊரை பொருத்தவரைக்கும் காமம்-ன்றது பொதுவெளியில் பேசக்கூடாத ஒரு அசிங்கமான விஷயம்.இங்க செக்ஸை பற்றிய புரிதல்களும் மிக கம்மி.ஒரு வயது வந்த ஒரு பையனோ,பெண்ணோ தங்களுக்கு வர்ற உடல்ரீதியான சாதாரண சந்தேகங்களை கூட அப்பா அம்மாகிட்ட பேசி தீர்த்துக்கமுடியாது.அந்த சந்தேகங்களை போக்கி தெளிவடையனும்னா ஒரு மூணாவது மனிதரோ அல்லது நண்பர்களின் உதவியையோ தான் நாடணும்.


ஆனா  இந்த படத்துல ஒரு தனிமனிதனின் உணர்ச்சிகளுக்கு கொடுக்கப்படுற முக்கியத்துவம் கவனிக்கத்தக்கது.ஒரு அப்பா,அம்மா,மகன் இந்த மூவருக்குள்ளும் நடக்கிற உணர்வு போராட்டங்கள் தான் படம்.முதல் சீன்லயே கதைகுள்ள போக ஆரம்பிச்சிடுறாரு இயக்குனர் 'Kim Ki-duk'. படத்தோட முதல் சீன்லருந்து கடைசி சீன் வரைக்கும் ஒரு டையலாக் கூட கிடையாது.ஆனா அது படத்தை எந்த விதத்துலயும் பாதிக்கல.இன்னும் சொல்லப்போன அந்த நடிகர்களின் நடிப்புக்கு வசனங்கள் தேவையே இல்ல!அப்பாவிற்கு ஒரு பெண்ணுடன் தகாத உறவு,அதுனால அப்பா அம்மா ரெண்டு பேருக்குள்ளேயும் சண்டை..ஒருகட்டத்தில அந்த சண்டை வெறியாய் மாறி,கணவனை எதுவும் செய்யமுடியாத கோபத்தில் தன் மகனோட ஆண்குறியை வெட்டிடுறாள்.அதுனால பாதிக்கப்படுற அந்த பையன் படுற அவமானங்களும்,தன் குற்றத்தை உணர்ந்து..அந்த அவமானங்களிலிருந்து தன் மகனை எப்படியாச்சும் காப்பாத்தி பழைய நிலைக்கு கொண்டு வந்திடனும்னு நினைக்குற அப்பாவின் போராட்டமும்..தன்னாலதானே இப்படி தன் மகனுக்கு ஆச்சு என நினைத்து உருகும் அம்மவோட மனகுமுறலும் தான் மீதிப்படம்.

நிச்சயம் எழுத்துக்களால் அந்த படம் தந்த  உணர்வுகளை முழுசா கொண்டுவர முடியும்னு தோணல.நம்ம ஊரை பொருத்தவரைக்கும் இந்த கதையும்,மனிதர்களும் நடைமுறை சாத்தியமே இல்லாத ஒன்று என்றாலும்..ஒரு படமாய் மனதை வெகுவாய் பாதித்துவிட்டது.Strictly for 16+ 

செவ்வாய், 14 ஜனவரி, 2014

வீரம்- இது 'தலப்பொங்கல்'

எந்த ஒரு நடிகரின் ரசிகனுக்கும் தன் ஆதர்ச நாயகனை சில கேரக்டர்களில் அல்லது சில மாஸ் சீன்களில் நடித்து,தான் பார்க்கவேண்டும் என்பது பெரும் கனவாய் இருக்கும்.உதாரணத்திற்கு பாட்ஷாவில் வரும் தலைவரின் 'அடி பம்ப்' பைட் சீன் போல ஒரு படத்திலாவது தனக்கு பிடித்த நடிகன் நடித்துவிடவேண்டும் எல்லா ரசிகனுக்கும் உள்ள ஆசை.தல ரசிகர்களை பொறுத்தவரை,அஜித்தை ஒரே மாதிரியான கோட் சூட் கெட்டப்பிலும்,மாடர்ன் ட்ரெஸ்ஸிலும் பார்த்து சலித்து போனவர்களுக்கு,இந்த படத்தில் வரும் வெள்ளை வேஷ்டி,வெள்ளை சட்டை லுக் நிச்சயமா செம ரெஃப்ரெஷ் தான்.சிவாவை பத்தி மொத படத்துலையே தெரியும்ன்றதால,படத்தில் வீசும் தெலுங்கு மசாலா வாசமும்...எதுக்கெடுத்தாலும் 'டாஆஆஆஆய்ய்' ஹைபிச்ல வில்லன்கள் கத்துறதும் பெரிய லெவெல்ல நம்மள பாதிக்கல:-p


டைரக்டர் சிவா பேன்ஸ் அஜித்கிட்ட என்ன எதிர்பாக்குராங்கன்றதை தெளிவா புரிஞ்சிகிட்டு அதுகேத்தமாதிரி காட்சிகளை அமைச்சிருக்குறாரு.படத்தின் மிகப்பெரிய பலமும் அதுவே.இடைவேளைக்கு முன் வர்ற அந்த ட்ரெயின் பைட் சீனும்,பேக்ரவுண்ட்ல வர்ற 'ரத கஜ துரக பதாதிகள்' டியுனும்செம்ம..இடைவேளை வர்ற தாடி வச்ச கெட்டப் நல்லாத்தான் இருக்கு.ஆனா இடைவெளிக்கு அப்புறமா தாடி எடுத்துட்டு வர்றப்ப தலைக்கு வயசானவர் லுக்கு வந்துடுது.சீக்கிரம் இந்த ஒயிட் கேர்'க்கு ஒரு எண்டு கார்ட் போடுங்க தல.



பர்ஸ்ட்ஆஃப் முழுக்க சந்தானத்தோட காமெடி,கொஞ்சம் தம்பிங்க சென்டிமென்ட்,தமன்னா கூட ரொமான்ஸ்ன்னு ஜாலியா போகுது.சந்தானத்துக்கு காட்டுபூச்சி அளவுக்கு இதுல ஒர்க்அவுட் ஆவலன்னாலும்,மோசமில்ல.தமன்னாவை பொறுத்தவரை பெருசா சொல்றதுக்கு ஒண்ணுமில்ல:-p


கதைப்படி அஜித்துக்கு நாலு தம்பிங்க..அதுல பாலாவையும்,விதார்த்தையும்
தவிர மத்த ரெண்டு பேரு முகம்கூட சரியா நியாபகத்துல இல்ல.அவ்ளோதான் படத்துல அவுங்க வேல்யூ.இடைவெளிக்கு அப்புறமா தமன்னா ஊருக்கு போற தல,அங்க அந்த குடும்பத்தை பழிவாங்க நினைக்கிறவங்கள்ட்டருந்து அவுங்களை காப்பத்தினாரா இல்லையான்றது தான் மீதிக்கதை.இடையில இடையில மானே தேனேன்னு டி.எஸ்.பி மொக்கையா நாலு ட்யூன் போட்டு நம்மள வெறுப்பேத்துறாரு.தூக்கு தண்டனை கைதியான வில்லன் அதுல் குல்கர்னி,கிளைமேக்ஸ்ல போலிஸ் ஜீப்ல இருந்து தப்பிச்சு,அஜீத் கூட சண்டை போடுறாரு.ஏன் பாஸ்,ஒரு தூக்குதண்டனை கைதியை இவ்ளோ ஈஸியாவா தப்பிக்க விடுவாங்க?!அது சரி,ஆமை வடைக்குள்ள ஆமைய எதிர்பாக்குறவனுக்கும்,மசாலா படத்துல லாஜிக் எதிர்பாக்குறவனுக்கும்
ஏமாற்றம் தான் மிஞ்சும்ங்கிறதால அதையெல்லாம் லூஸ்ல விட்ருவோம்:-)




மொத்தத்தில் படத்தை சுவாரஸ்யமாக்குவது தல’யின் ஸ்க்ரீன் பிரெசன்ஷும்,டைரக்டர் சிவாவோட சரியான மசாலா மிக்சிங்கும் தான்!வீரம்-தல ரசிகர்களுக்கு பார்த்தே தீரவேண்டிய படம்.சினிமா ரசிகர்களுக்கு ஒருதடவை பாக்கலாம் டைப்! 

அனைவருக்கும் தைத்திருநாள் நல்வாழ்த்துகள்:-))