ஞாயிறு, 22 ஜூன், 2014

ஒரு விஜய் ரசிகனின்(முன்னாள்) கண்ணீர் கதை!

இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல.மீறி யார் மனதேனும் புண்படுமேனால்,அதற்கு கம்பெனி 'ஒண்ணியும் பண்ணமுடியாது' என சொல்லிக்கொள்கிறது.
#################

கி.பி.1992 டிசம்பர் 4 -அன்றையதினம் உதித்த சூரியனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தமிழ்சினிமாவில்,ஏன் உலகசினிமாவிலேயே(!) தன்னைப்போல ஒளிவீசப்போகிற ஒரு நாயகன் உதயமாகப்போகிறான் என்று!பேரொளி கொண்டு நுரைபொங்க கரை தொட்ட அலைகளுக்கு தெரிந்திருக்கவில்லை,இவன்தான் இன்னும் இருபது ஆண்டுகளுக்கு பின் தமிழ்சினிமா எனும் கடலில் மாபெரும் அலையாய் மக்கள் மனதில் வீசப்போகிறான் என்று ! (கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ..போவோம்..போயித்தான் பாப்போமே!)..இவ்வளவு ஏன் அந்த நடிகருக்கே அப்போது தெரிந்திருக்காது..இந்த கருமமெல்லாம் நடக்கப்போகிறது என்று!!ஆனால் இதத்தனையும் நடந்தது.அன்று தான்,இத்தனை பெருமைக்குக்கும் சொந்தக்காரரான..அவரின் ரசிகர்களால் 'விஜய் அண்ணா' என்று அன்போடு அழைக்கப்படும் சாட்ஷாத் இளையதளபதி விஜய் அவர்களின் முதல் படம்  'நாளைய தீர்ப்பு' ரிலீஸ் ஆனது!


இந்த இன்ட்ரோ-வுக்காக பயங்கரமா மெனக்கெட்டாலும் ரிசல்ட் என்னவோ அவர் பட ஓபனிங்சாங் போலவே சற்றே டொங்கலாய் அமைந்திருப்பது காலாம் செய்த கோலம்!ஆரம்ப காலத்தில் எஸ்.ஏ.சியும்,சங்கவியும் அவரின் திரை வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போட்டாலும் அவருக்கென்று ஒரு அடையாளம் கிடைத்தது பூவே உனக்காக திரைப்படத்திற்கு பின் தான்..யோசித்து பார்த்தால் அந்த காலத்தில் இருந்து இன்று வரை விஜய்க்கு எதிரி வேறு எங்கும் இல்லை.அவர் வீட்டுக்குள்ளயே அப்பா என்ற பெயரில் இருந்திருக்கிறார்.

கில்லி படத்தில் விஜய்க்கு கிடைத்த மாஸ் ஹீரோ அந்தஸ்திற்கு பின் அவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் உருவாகியிருந்தது.அதன்பிறகு திருப்பாச்சி,சிவகாசி,போக்கிரி என விஜய் தொட்டதெல்லாம் ஹிட் தான்.தொடர்ச்சியாய் இரண்டு படம் ஹிட்டடித்த்தும் நம்ம நடிகர்களுக்கு வரும் அரசியல் ஆசையும்,முதல்வர் நாற்காலி கனவும் விஜயையும் விட்டு வைக்கவில்லை.ஆரம்ப நாட்களில் தன்னை ஒரு தீவிர ரஜினி ரசிகனாக அடையாளபடுத்திகொண்ட விஜய்..அரசியல் ஆசை துளிர் விட்டதும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ரசிகனாய் காட்டிகொண்டார்..மக்கள் திலகத்தின் பெயரை உச்சரித்தால் தான் தமிழ்நாட்டில் அரசியல் செய்யமுடியும் என்ற தீர்க்கதரிசனம் அன்னாருக்கு அந்த சிறுவயதிலேயே இருந்தது ஆச்சரியம்தான்!

சொல்லப்போனால் இங்கு ஆரம்பித்தது விஜய் ரசிகனுக்கு கண்டம். குருவி வில்லு சுறா வேட்டைக்காரன் என எத்தனை எத்தனை கண்டங்கள்..இந்த காலக்கட்டத்தில் தான் ஒவ்வொரு விஜய் ரசிகனும் எப்படி வலிக்காத மாதிரியே நடிக்கிறது என்பதை கற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தான்..விஜய் ரசிகன்னு தெரிஞ்சா போதும் ரோட்ல சும்மா போறவன்கூட கூப்ட்டு வச்சி அடிக்க ஆரம்பிச்சானுக.இதுல உச்சபட்ச கொடுமை என்னன்னா  ராமராஜன் ஃபேன்ஸ்ல்லாம் எங்களை புடிச்சி வச்சி கலாய்ச்சானுக..ஆனா ஒண்ணுடா உங்ககிட்ட அந்த மாதிரி அடிவாங்குனதுக்கு அப்புறம் வேற எவன் அடிச்சாலும் தாங்கிக்குற சக்தி எங்களுக்கு வந்துருச்சிடா..சுறா படத்துல தியேட்டர்குள்ள மாட்டிகிட்டு கத்தி கதறி,சிக்கி சீரழிஞ்ச பின் எனக்குள் இருந்த விஜய் ரசிகன் பாதி காணாமல் போயிருந்தான்..மிச்சமிருந்த கொஞ்சமும் அரசியல் பிரவேசத்திற்காக அவர் செய்த செயல்களிலும்..சுயநலத்திற்காக அவர் அடித்த பல்ட்டிகளிலும் மொத்தமாய் காணாமல் போனது.

ஒருவழியாய் தொடர் தோல்விகளுக்கு பின் மீண்டெழுந்து காவலன்,நண்பன்,துப்பக்கின்னு ஹிட்டடிக்க ஆரம்பிச்சதுல விஜயை விடவும் அதிகம் சந்தோசப்பட்டது அவரின்  ரசிகர்கள் தான்..ஆனா விதி தான் வலியது ஆச்சே..ரெண்டு படம் ஹிட்டானதும் அண்ணனுக்கு மீண்டும் அதே அரசியல் ஆசை முதல்வர் நாற்காலி கனவு..இந்த முறை ஒரு படி அதிகம் போய் தனது அடுத்த படத்திற்கு 'தலைவா' என பெயர் வைத்து 'டைம் டூ லீட்' என சப்டைட்டிலும் வைத்தாயிற்று.இதற்கு இடையில் விஜயின் அப்பா வேறு, 'நான் அண்ணா,என் மகன் எம்.ஜி.ஆர்' என்று உச்சபட்சமாய் உளறி வைத்தார்..இப்போது புரிகிறதா வில்லன் வீட்டிலேயே இருக்கிறார் என நான் ஏன் சொன்னேன் என்று! இது  போதாதா?!ஆட்சியாளர்களின் கடும் கோபத்திற்கு ஆளாகி தலைவா ரிலீஸில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது..ஒருவழியாய் மன்னிப்பு கேட்டு சர்ச்சைகள் எல்லாம் முடிந்து படம் தியேட்டரில் வெளிவருவதற்கு முன்னே டிவிடி களிலும்,இணையத்திலும் வெளியாகிவிட்டது..டோரன்ட்டில் படம் பார்த்துவிட்டு அதற்கு நம்மவர்கள் ஃபர்ஸ்ட்  ஆன் நெட் விமர்சனமெல்லாம் எழுதியது வரலாறு..

இதெற்கெல்லாம் சிகரம் வைத்தது போல் ஒரு சம்பவம் விஜய் அவர்களின் மீதிருந்த மொத்த மதிப்பையும் குலைப்பதாய் இருந்தது..அது,2011 ல் நாகபட்டினத்தில்  இலங்கை அரசால் தண்டிக்கப்படுவதை  எதிர்த்து விஜய் மற்றும் அவர் ரசிககளால் கண்டன பொதுக்கூட்டம்..அந்த கூட்டத்தில் விஜய் பேசியது தான் ஹைலைட்..இலங்கை அரசை பார்த்து 'நான் அடிச்சா தாங்க மாட்டே நாலு நாளு தூங்க மாட்டே' என ஒரு பஞ்ச அடித்தார் பாருங்கள்..வாழ்க்கையே வெறுத்து விட்டது.அது எத்தனை முக்கியமான விசயம்..எத்தனை மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனை?!அதை எத்தனை நுட்பமாய் கையாளவேண்டும்.அதையெல்லாம் விடுத்து கைதட்டல் வாங்குவதற்காகவு ம்,தன்ரசிகர்களை உசுப்பேத்துவதாகவுமே இருந்தது அந்த பேச்சு முழுவதும்.

அவரு அரசியலுக்கு வந்தா உனக்கு என்னடா பிரச்சனை? என யாரேனும் கேட்பீர்களானால்,இது ஜனநாயக நாடு தான்..யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் தான்..ஆனால் மக்களுக்காக எதுவுமே செய்யாமல் தொடர்ந்து இரண்டு படம் ஹிட்டானதே முதல்வர் பதவிக்கு தகுதியும்,போதுமானதும் என நினைக்கும் மனநிலையே சற்று..இல்லைஇல்லை நிரம்பவே எரிச்சல் தருவதாய் இருக்கிறது.படுத்துக்கொண்டே ஜெயிப்பதற்கு இவர் ஒன்றும் எம்.ஜி.ஆரும் இல்லை..மக்களும் எம்.ஜி.ஆர் காலத்தில் வாழ்ந்தது போல் ஒன்றும் தெரியாதவர்களும் அல்ல...

கடைசியாய் ஒன்று,விஜய் அவர்களே..எத்தனை நெருக்கமான நபராய் இருந்தாலும்..தவறான வழிக்காட்டுதல் என தெரிந்தால்,அதை/அவரை உடனே புறக்கணியுங்கள்.நீங்கள் ஒரு நல்ல கலைஞன்..உங்களால் மற்றவர்களை சந்தோசபடுத்த முடிகிறது.அது ஒரு மாபெரும் வரம்.அதை செவ்வனே செய்யுங்கள்..மற்றவற்றை காலம் தீர்மானிக்கும்!Wish You A Very Happy Birthday IlayaThalabathi!

4 கருத்துகள்: