வெள்ளி, 1 நவம்பர், 2013

தீபாவளியும்..சிலபல கொசுவர்த்தி சுருள்களும்!!

 ண்டிகைகளின் முழு மகிழ்ச்சியையும் அனுபவிக்க வேண்டுமென்றால் நாம் குழந்தைகளாய் இருக்கவேண்டும்.அல்லது குழந்தைகளால் மட்டுமே பண்டிகைகளை முழு மகிழ்ச்சியுடன் கொண்டாடமுடிகிறது.அப்படி சந்தோசங்களும்,கொண்டாட்டங்களும் நிறைந்த பால்யபருவத்து தீபாவளி பண்டிகையை பற்றிய நினைவுகோர்வைகளே இந்த பதிவு..



இப்போதுபோல் தீபாவளி அன்றுகூட மற்றநாட்களை போலவே பத்துமணி வரை தூங்குவதில்லை அந்தநாட்களில்..தீபாவளி வந்துவிட்டாலே தூக்கம் பிடிக்காத நாட்கள் அவை!ஒரு மாதத்திற்கு முன்பிலிருந்தே ஸ்கூல் கணக்கு நோட்டில் தீபாவளிக்கான 'கவுண்ட் டவுன்' தொடங்கிவிடும்..முப்பத்திலிந்து ஆரம்பித்து ஒன்று வரை வரிசையாய் எண்களை எழுதி,ஒவ்வொருநாள் முடிவிலும் அதை ஒவ்வொன்றாய் அடித்துகொண்டே வருவதில் ஒரு சந்தோசம்!!இன்னும் பத்துநாள் தான் இருக்கிறது எனும்போது பற்றிகொள்ளும் அந்த பண்டிகை பரபரப்பு..அதற்கேற்றார் போல் வீட்டிலும் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.பலகாரம் செய்வதற்கு அரிசி கழுவி காயவைப்பதிலிருந்து,அதை மில்லுக்கு போய் ஒரு பெரிய  வரிசையில் காத்திருந்து அரைத்து வருவது வரை கொஞ்சமும் சலிப்பில்லாமல் செய்வோம்.அப்பத்தாவுடன் கதை பேசியபடியே,பலகாரம் சுட அவருக்கு உதவி செய்கிறேன் என்ற பேரில் உபத்ரவம் செய்து கொண்டிருப்போம்.



இன்னும் தீபாவளிக்கு இரண்டு நாட்கள் தான் இருக்கிறது எனும்போது,புதுத்துணி எடுக்க அப்பா எப்படா கடைக்கு கூட்டிசெல்வார் என்றிருக்கும்.சமயத்தில் அவருக்கு இருக்கும் வேலைப்பளுவில்,ஒரு வேலை தீபாவளி வருவதையே மறந்துவிட்டாரோ என்றெல்லாம் கூட சந்தேகம் வந்துபோகும்!ஒருவழியாய் அவர் வேலையெல்லாம் முடிந்ததும் துணிக்கடைக்கு போவனும் என்ற செய்தி அம்மா மூலமாக தேனாய் காதில் பாயும்.அம்மா தான் எங்களுக்கும் அப்பாவுக்குமான இடைவெளியை நிரப்பும் செல்போன்..ஈமெயில்..மெசேன்ஜர் எல்லாமும்!!

புதுத்துணி எடுப்பது என்றால் எங்களுக்கு பிடித்ததை எடுப்பது என்பதல்ல..பிடித்திருப்பதாய் அப்பாவால் சொல்லப்பட்டதை அல்லது முடிவுசெய்யபட்டதை வழிமொழிவது அவ்வளவே..எது எப்படியோ அது புதுத்துணி..அது ஒன்று போதாதா?! ட்ரெஸ் எடுத்தவுடனேயே பாதி தீபாவளி கலை முகத்தில் வந்துவிடும்.புதுத்துணி எடுப்பதை விட,அதை போடுகையில் எப்படி இருக்கும் என்பதை பற்றி கனா காண்பதுதுதான் பெரும்பொழுதுபோக்காய் இருக்கும் அப்போது.துணி எடுத்தாச்சு..அடுத்து என்ன? வெடி தான்!


பொதுவாய் வெடி மட்டும் முன்கூட்டியே வாங்குவதில்லை..தீபாவளியன்று முதல்நாள் நள்ளிரவில் தான் வெடி வேட்டைக்கு செல்வது வழக்கம்!அப்போதுதான் விலை குறைவாக இருக்கும்..அதிகமாகவும் கிடைக்கும் என்றொரு எண்ணம்..ஆனால் உண்மையில் கடைசிநேர வியாபாரம் என்பதால் வெடியின் விலை தாறுமாறாய் இருக்கும்.ஆனாலும் அந்த கூட்டநெரிசலில் ஒவ்வொரு கடையாய் சென்று பேரம் பேசி வாங்குவதில் ஒரு சந்தோசம் இருக்கவே செய்யும்.ஒரு வழியாய் வெடி வாங்கி முடித்து வீடு திரும்பினால் கிட்டதட்ட இரவு மணி இரண்டு அல்லது மூன்றாகி இருக்கும்.வீட்டில் இருப்பவர்கள் பாதி தூக்கத்தில் இருப்பார்கள்.ஆனால் நமக்குதான் அந்த இம்சைபிடித்த தூக்கம் வராமல் கண்ணாமூச்சி காட்டி கொண்டிருக்கும்.

இதற்குள் ஆங்காங்கே பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்க தொடங்கியிருக்கும்.ஆனால் எங்கள் வீட்டிலோ சாமி கும்பிட்டால் தான் பட்டாசை தொடவேண்டும் என்பது விதி.
புது டிரெஸ் ஆசையும்..பலகாரங்களின் வாசமும் சேர்ந்து  மனம் ஒருவித பரவசத்தோடயே இருக்கும்.நண்பர்கள் எல்லோரும் என்னமாதிரி ட்ரெஸ் எடுத்திருப்பார்கள்? ஏன் இந்த சூரியன் இன்றுமட்டும் இவ்வளவு நேரம் தூங்குகிறது(!)? என ஏதேதோ நினைத்தபடியே தூங்கியும் போயிருப்பேன். "டேய்,சாமி கும்பிடனும்..எல்லாரும் ரெடியாயிட்டாங்க..சீக்கிரம் போயி குளிடா"என அம்மா வந்து எழுப்பையில் வாரிசுருட்டி எழுந்து பார்த்தால் மணி ஆறாயிருக்கும்! ச்சே எப்படி தூங்கினோம் என உள்ளுகுள்ளேயே முனகிக்கொண்டு..தூக்ககலக்கத்துடன் அப்பா கையால் எண்ணெய் வாங்கி தலைக்கு வைத்துவிட்டு கண் எரியஎரிய குளியல் நடந்தேறும்.குளியல் முடிந்ததும் சாமி கும்பிடவேண்டும்.சாமி கும்பிடுவது என்றால்..கைகளை கூப்பியபடி கண்களை மூடியும் மூடாமலும்..சாமி படைத்திருக்கு அருகில் வைத்திருக்கும் புதுதுணிகளையும்,வெடியையுமே பார்த்தவாறு நிற்பது,அவ்ளோதான்!


சாமி கும்பிட்டதும்..புதுத்துணி அணிந்துகொண்டு பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கியபின் சாப்பிட உட்காரவேண்டியது தான்.என்னதான் இலை நிறைய பலகாரங்கள் இருந்தாலும் சாப்பிடபிடிக்காது கடமைக்காக கொஞ்சமாய் சாப்பிட்டுவிட்டு வெடிவெடிக்க சென்று விடுவோம்..புதுடிரெஸ் போட்டு கொண்டு,முதல் சரத்தை பற்ற வைக்கும்போது, மனம் அப்படி ஒரு நிறைவாய் இருக்கும்.அந்த புதுத்துணியின் வண்ணமும்,வெடிமருந்தின் வாசமும் மனசுமுழுக்க அப்பி கிடக்கிறது இன்னமும்!அந்த நாளின் முடிவில் மனம் மீண்டும்..அடுத்த தீபாவளி எப்போது வரும் என அப்போதிழுருந்தே காத்திருக்க தொடங்கிவிடும்!!

வெளியூருக்கு வேலைக்கு வந்துவிட்டபின்  தீபாவளியும்..சனி,ஞாயிறை போல் மற்றுமொரு விடுமுறை நாளாகிவிட்டது.சிலவருட இடைவெளிக்கு பின் மீண்டும் கடந்தஆண்டு தீபாவளிக்கு வீட்டில் இருக்க வாய்த்தது.இப்போது நினைத்தபடி எந்த டிசைனிலும் புது டிரெஸ் எடுக்கமுடியும்.அப்பா எதுவும் சொல்லமாட்டார்.எவ்வளவுக்கு வேண்டுமானாலும் வெடி வாங்கி ஆசை தீர வெடிக்க முடியும்.ஆனாலும் ஏதோ ஒன்று குறைவது போலவே ஒரு உள்ளுணர்வு.என்னாவாயிருக்கும் என யோசித்ததில், ஏதோ ஒன்று குறைந்ததே..அந்தகுறைந்த ஒன்றின் பெயர் 'பால்யம்' எனவும் இருக்ககூடும் எனப் புரிந்தது!

டிஸ்கி: நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள்!

2 கருத்துகள்: