புதன், 20 நவம்பர், 2013

சேரனும்..டூரிங் டாக்கீஸூம்!!

 னந்தவிகடனில் தொடராய் வெளிவந்து பெரும் வரவேற்பு பெற்ற இயக்குனர் சேரனின் 'டூரிங் டாக்கீஸ்' புத்தகத்தை சமீபத்தில் வாசிக்க கிடைத்தது.மிகப்பெரிய இலக்கியமோ,அல்லது இப்போது சிலர் வலுகட்டாயமாக தங்கள் எழுத்துகளில் திணிக்கும் பின்நவீனத்துவம்,முன்நவீனத்துவம்(!) போன்ற எந்த குறியீடுகளும் இல்லாமல்,தான் எப்படி எளிய மனிதனாய் இருக்கிறாரோ..அதே போலானதொரு எளிய மொழியில் தான் கடந்து வந்த பாதையை பற்றி பேசுகிறார்.அந்த எளிமையால் தானோ என்னவோ,பக்கத்துக்கு பக்கம் உணர்ச்சிக்குவியல்களாய் நிறைந்து கிடக்கிறது புத்தகம் முழுதும்!


மதுரைக்கு பக்கத்தில் பனையூர்பட்டி என்ற குக்கிராமத்தில் தொடங்கிய சினிமா மீதான கனவு..எப்படி தலைநகர் வரை சிறகுவிரித்து பறந்தது என்பதை சுவாரஸ்யமாய் சொல்லி செல்கிறார்.ஒரு இலக்கை அடைந்ததும்,அந்த வெற்றி மட்டுமே எல்லோராலும் பெரிதாய் கவனிக்கப்படும்.ஆனால் அந்த வெற்றிக்கு பின்னாலிருக்கும் முகத்தில்அறையும்நிஜமும்,அதுதரும் வலியும் யாரும் அறியாதவை!அந்த வலிகளை எல்லாம் உரமாக்கி,வெட்டவெட்ட மீண்டும் வீரியமாய் முளைத்தெழுபவர்களாலயே சாதிக்க முடிகிறது.அப்படியானதொரு வெற்றியும்..அதற்கு பின்னாலிருக்கும் வலிகளையும் பற்றியுமே அதிகம் பேசுகிறது இந்த புத்தகம்.

பனையூர்பட்டி கிராமத்தில் சிறுவனாய் சுற்றி திரிந்த பால்யமாகட்டும்..படிக்கிற வயதில் கண்கள்முழுக்க சினிமா ஆசைகளோடு,புத்தகமூட்டைக்கு பதிலாய் கனவு மூட்டையை சுமந்து திரிந்ததாகட்டும் ஒவ்வொன்றும் அப்படியே காட்சியாய் கண்முன்னே நிழலாடுகிறது.சேரனின் படங்களில் வரும் கதை மாந்தர்களாய் நாம் பார்த்த  பலரும்..அவரின் வாழ்க்கையில் உண்மையில் வாழ்ந்த நபர்களாகவே இருக்கிறார்கள்.

சேரனை பற்றி இந்தபுத்தகத்தின் மூலம் தெரிந்து கொண்டதை விட அவரின் குடும்பமான அம்மா கமலா டீச்சர்,எம்.ஜி.யார் ரசிகரும் தியேட்டர் ஆப்பரேட்டருமான அப்பா பாண்டியன்..உழைப்பையும் வைராக்கியத்தையும் தவற வேறேதும்தெரியாத அவரின் பாட்டி தெய்வானை ஆகியோரை பற்றி தெரிந்து கொண்டது அதிகம்.யோசித்துபார்த்தால்,இதுபோன்ற உறவுகள் தந்த பலத்தால்தான்..எத்தனைமுறை விழுந்தாலும் அத்தனைமுறையும்,முன்பைவிட அதிகவீரியத்தோடு எழுகின்ற சக்தி அவருக்கு கிடைத்திருக்கவேண்டும்.அதேபோல் நல்லவாழ்க்கை கிடைத்ததும்..அம்மா அப்பாவை தாஜ்மகாலுக்கு அழைத்துபோய் சந்தோசப்படுத்தியாதாகட்டும்..ஆட்டோகிராப் படத்திற்கான தேசிய விருதை,அப்துல் கலாம் அவர்கள் கையால் தன் தந்தையை பெறவைத்து,அவரை திக்குமுக்காட வைத்ததாகட்டும்...சேரன் உண்மையிலேயே பிரமிப்பு தான்!!

வாழ்க்கையை பற்றிய நிஜங்களுக்கும் பஞ்சமில்லை இதில்..ஒரு இடத்தில் சொல்கிறார்,"எந்த மனிதர்கள் நாம் கஷ்டப்படும்போது,ச்சே பாவம்யா ரொம்ப சிரமப்படுறான்..நல்லா வந்துரனும் என சொல்கிறார்களோ..அவர்களே நாம் கொஞ்சம் ஜெயிச்சதும்,பார்றா இவனுக்கு வந்த யோகத்தை என்பார்கள்" இதுதான் உலகம் என்கிறார்.எத்தனை நிதர்சனம்!!அனுபவத்தை தவிர வேறு யாரால் வாழ்கையை இப்படி அணுஅணுவாய் கற்றுதந்துவிட முடியும்?!

சினிமா எனும் கனவுதேசத்தில் தங்கள் கனவும் நினைவாகிவிடாதா? என ஏங்கிதிரியும் லட்சகணக்கான மனிதர்களுக்கு இந்த புத்தகம் ஒரு தன்னம்பிக்கை டானிக்!வெற்றி பெறுவது மட்டும் போராட்டமல்ல,அதை தக்கவைத்து கொள்வதும்,அந்த வெற்றியை தலைக்கு ஏற்றிவிடாது வாழ பழகுவதும் ஒரு போராட்டமே என்பதுதான் டூரிங் டாக்கீஸின் மொத்த அனுபவமும்!!இயக்குனராய் பாதித்ததைவிட,எழுத்தாளராய் சேரன் நிரம்பவே பாதித்துவிட்டார்.
இந்த புத்தகம் வாசிக்க கிடைத்தால் கண்டிப்பாக மிஸ் செய்து விடாதீர்கள்!

1 கருத்து: