வியாழன், 14 நவம்பர், 2013

தேங்க்யூ சச்சின்!!

 எல்லாவற்றிற்கும் நன்றி சச்சின்!இந்தபதிவை இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டும்...அல்லது இப்படித்தான் ஆரம்பிக்க முடியும்!ஏனெனில் எனக்கு சச்சின் என்ற மனிதனை பற்றி தெரிய ஆரம்பித்த பின்னர்தான் கிரிக்கெட் என்ற விளையாட்டே தெரிய ஆரம்பித்தது!அந்த சாதனையாளனை பற்றி எல்லோரும் எல்லாமும் சொல்லியாகிவிட்டது..ஆனாலும்பதினாறு வருடங்களுக்கும் மேலாக தனது மட்டையால் எத்தனை நெஞ்சு படபடக்கும் தருணங்கள்,எத்தனை சோகம்,எத்தனை சந்தோசம்,எவ்வளவு பெருமிதம்..இத்தனையும் எனக்கு தந்த அந்த மனிதனுக்கு,இந்த எழுத்துகளை தவிர,வேறெதை பரிசாக தந்துவிட முடியும்?!


இந்த பதிவை எழுத எத்தனிக்கையில் சச்சின் தனது 200வது போட்டிக்காக களம் இறங்கிகொண்டிருக்கிறார்..அரங்கமேஅதிர்கிறது கரகோஷத்தால்!கிரிகெட்டை பற்றி அறியாத ஊரிலிருந்து யாரேனும் இதை பார்த்தால் ஒரு தனிமனிதனுக்கு எதற்கு இத்தனை பாராட்டுகள்,அவர் ஒய்வுக்கு ஏன் இத்தனை ரசிகர்கள் கண் கலங்குகின்றனர் என தோன்றக்கூடும்..இவை எல்லாவற்றிற்குமான விடை இன்றைய போட்டியிலேயே இருந்தது. எத்தனை கரகோஷம் ஒலித்தாலும்,இது அவருக்கு 200வது டெஸ்ட் மேட்ச் என்றாலும் முதல் போட்டிக்கு களமிறங்கிய போதிருந்த அதே ஆர்வத்துடனும்,ஈடுபாட்டுடனும் களமிறங்குகிறார்..அதுதான் சச்சின்..அதற்காக தான் இத்தனை கோடி ரசிகர்களும் அவரை கொண்டாடுகின்றனர்!



இங்கு சச்சினின் சாதனைகளையோ,அல்லது அதன் புள்ளி விவரங்களையோ பற்றியோ பேசப்போவதில்லை.ஒருவேளை அதைபற்றி பேச ஆரம்பித்தால் அதற்கு இந்த ஒரு பதிவல்ல இன்னும் எத்தனை பதிவுகள் எழுதினாலும் போதாதுஎன்பதுதான் உண்மை.! 90களின் மத்தியில் வளர்ந்த குழந்தைகளுக்கு சச்சின்ஒரு ஆதர்ச நாயகன்.அவரைப்போல நாமும் வரவேண்டும் என்று எண்ணாத சிறுவர்களே இருக்கமுடியாது..அந்த அளவுக்கு சச்சின் குழந்தைகளின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தார்.

இப்போது இந்திய அணியின் பேட்டிங் வரிசை தவான்,ரோஹித் சர்மா,வீராட்,தோனி என மிக வலுவானது.ஆனால் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் சச்சின் களத்தில் நிற்கும் வரையே இந்தியாவின் பேட்டிங் பலம் நிலைத்திருக்கும்.அவர் அவுட்டானதும் 'இன்னைக்கு மேட்ச் அவ்ளோதாம்பா' என டிவியை அணைத்துவிடுவது வழக்கம்.! 28ஆண்டுகால தவத்திற்கு பின் இந்தியா இரடண்டாவது முறையாய் உலககோப்பையை வென்றபின்,வெற்றி கொண்டாட்டத்தின் போது,இளம் வீரர்கள் சச்சினை தோலில் ஏற்றி மைதானத்தை வலம்வந்தனர்.அப்போது அவர்கள் சொல்லியது இதைத்தான்,'இத்தனை ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டை சச்சின் தனியாளாக தோலில் சுமந்தார்..இன்று நாங்கள் அவரை சுமக்கிறோம்' என்றனர்!சத்திய வார்த்தைகள்..


இனி சச்சினை மைதனாத்தில் மட்டையோடு,கிரிக்கெட் உடை சகிதம் பார்க்க முடியாது.தனித்தன்மையான அவரின் "ஷாட்'டுகளும் இனி காணக்கிடைக்காது.சகித்துக்கொள்ள முடியாத உண்மை தான்!ஆனாலும்,உன்னை நினைத்து பெருமைகொள்வதற்கு ஆயிரமாயிரம் தருணங்கள் இருக்கிறது எங்களிடம்.தன்னம்பிக்கை என்றால் என்ன? எழுவது வெற்றியல்ல..விழுந்தபின் முன்னைவிட அதிக உத்வேகத்துடனும்,உறுதியுடனும் எழுவதே வெற்றி என்று அடுத்த தலைமுறைக்கு வாழ்ந்து காண்பித்துவிட்டு செல்கிறாய்! சக தோழனை வழியனுப்புவது போலொரு தருணம்..கலங்கிய கண்களோடு வழியனுப்புகிறோம்..சென்றுவா சச்சின்...
தேங்க் யூ சச்சின் ஃபார் ஆல்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக