செவ்வாய், 12 நவம்பர், 2013

இன்னும் ஓர் இரவு..!

 உங்களிடம் ஒரு முக்கியமான விசயத்தை பற்றிப்பேசவேண்டும்!அதைப்பற்றிபேச இதுதான் சரியான தருணம்.
ஏனென்றால்,நாளை...எனக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்!ஆனால்..இதையெல்லாம் ஏன் உங்களிடம் சொல்லவேண்டும் என்றுதான் புரியவில்லை.
இதை உங்களிடம் சொல்வதால் என்ன ஆகிவிடப்போகிறது என்றும் தெரியவில்லை.ஆனால் யாரிடமாவது சொன்னால் தான் மனதிற்கு கொஞ்சமேனும் நிம்மதி கிடைக்கும் என்பதுபோல் தோன்றுகிறது.
அதனால் கொஞ்சம் நேரம் ஒதுக்கி,என் பிரச்சனையை கேளுங்களேன்..அடிக்கடி எனக்கு ஒரு கனவு வருகிறது.
“ப்ச்..மனிதனுக்கு தூக்கம் வருவது இயல்பு..தூக்கம் வந்தால் கூடவே கனவு வருவதும் இயல்புதான்..இதில் என்ன பெரிதாய் சொல்வதற்கும்,கேட்பதற்கும் இருக்கிறது?” என சலித்து கொள்கிறீர்களா?!நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையாய் கேளுங்கள்.
கனவுதான்..ஆனால் இதுவேறு மாதிரி!!கிட்டத்தட்ட பனிரெண்டு வருடங்களாய் அந்தக்கனவு வந்து கொண்டிருக்கிறது..நேற்று இரவு வரையிலும்..!
எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது..முதல்முறை அந்தகனவு வந்தது,நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது..பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிந்து விடுமுறை நாட்கள் அவை.
ராமருக்கு பதினான்கு வருடங்கள் வனவாசம் என்றால் அந்த பதினான்கு வருட வனவாசத்தையும் ஒரே வருடத்தில் அனுபவிப்பதுதான் இந்த பனிரெண்டாம் வகுப்பு.நோ டி.வி,நோ கிரிக்கெட், நோ ஃப்ரெண்ட்ஸ்..இப்படி எக்கசக்க ‘நோ நோ’க்கள்..!
ஒருவழியாய் பொதுத்தேர்வுகள் எழுதி முடித்தபின்தான் கொஞ்சம் நிம்மதியாய் சுவாசிக்கவே முடிந்தது!காலையில் பொறுமையாய் எழுவது..கொஞ்சநேரம் டி.வி,அப்புறம் நண்பர்களுடன் அரட்டை..மதியம் சாப்பாடு,அதன்பின் கிரிக்கெட் ஆட கிரவுண்டுக்கு சென்றால்,சூரியன் டுயுட்டி முடித்து மறையும் வரை விளையாட்டுதான்.!
அந்த நாற்பது நாட்களும் சொர்க்கமாய் கழிந்தன.ஆனால் நமக்குதான் நல்ல விசயங்கள் எதுவும் நீண்டநாள் நிலைக்காதே!
நாளிதழ்களில் இன்னும் இரண்டுநாட்களில் தேர்வுமுடிவுகள் வரப்போவதாய் செய்திவந்தது.அதைப்பார்த்த நொடியிலிருந்து தொண்டைக்கும் வயிற்றிற்கும் இடையே உருண்டை உருள தொடங்கியிருந்தது.!

இந்த தேர்வுகளை பொறுத்தவரை,நன்றாக படிப்பவர்களுக்கு எந்த கவலையும் இல்லை.அவர்களுக்கு தெரியும்..நிச்சயம் மாவட்டத்திலோ,பள்ளியிலோ குறைந்தப்பட்சம் வகுப்பிலேயோ முதல் சில இடங்களை பிடித்து விடுவார்கள் என!
அதேபோல் இந்த, ‘எதற்கும் டோன்ட் கேர்’ மாணவர்களுக்கும் தங்களது தேர்வுமுடிவு எப்படி இருக்குமென்பது முன்கூட்டியே தெரியும்.
அவர்களது கவலையெல்லாம் தேர்வுமுடிவுக்கு பின் எந்த டுடோரியலில் சேரவேண்டும்,அல்லது எங்கு சேர்ந்தால் கட்டணம் குறைவாய் இருக்கும்?என்பதைப்பற்றியதாய் தான் இருக்கும்.இதில் பிரச்சனையெல்லாம் சுமாராய் படிக்கும் என்னைபோன்றவர்களுக்குத்தான்..நிச்சயம் ஃபெயில் ஆகமாட்டோம் என்பது தெரியும் என்றாலும் எவ்வளவு மார்க் வரும்?என்பது கேள்விக்குறிக்கெல்லாம் பெரிய கேள்விக்குறி.

இதில் அப்பா வேறு அடிக்கடி,”ஆயிரத்துக்கு மேல மார்க் வாங்கிடுவில்ல?..உன்னைய நம்பி,நான்வேற எல்லார்க்கிட்டயும்..பையன் ஆயிரத்துக்கு மேல வாங்கிடுவான்.எந்த எஞ்சினியரிங் காலேஜ்ல சேக்காலாம்னு பெருமையா கேட்டுகிட்ருக்கேன்.மானத்தை வாங்கிடாதே!”என்கிறார்.
அவர் கவலை அவருக்கு..எனக்கோ, முதலில் நாம் ஆயிரம்மார்க்குக்கு எழுதியிருக்கிறோமா?அப்படியே எழுதியிருந்தாலும் திருத்துபவர் சரியாய் திருத்துவாரா? அல்லது அவர்வீட்டில் போட்ட சண்டைகளின் எதிர்வினையை என் பேப்பரில் காட்டிவிடுவார?என்றெல்லாம் கவலை.
இப்படியாக ஏதேதோ யோசித்தவாறே அந்த இரண்டுநாட்களும் கழிந்தது.காலை விடிந்ததும் ரிசல்ட் பதட்டம் தொற்றிக்கொள்ளும்..இப்போது தூக்கம் வரவில்லை..ஆனால் தூங்காமலிருப்பதால் மார்க் ஏதும் கூடுவதற்கு வாய்ப்பில்லை என்று உள்மனம் பகடி செய்யவே,தூங்கலாம் என முடிவுசெய்து படுத்துவிட்டேன்.

அன்றுதான் முதன்முதலில் 'அந்த கனவு' வந்தது.
யாரோ என் அறையின் கதவை தட்டுகிறார்கள்..கொஞ்சநேரம் அமைதி..
மீண்டும் அதே ‘தட்,தட்’ என கதவு தட்டப்படும் சத்தம்.
பின் கதவை திறந்த்துக்கொண்டு ஏதோ ஒரு உருவம் உள்ளே நுழைந்தது..முகம் தெளிவாய் தெரியவில்லை..ஆனால் அது ஒரு பெண் உருவம்..என்னருகே வந்து,பேச ஆரம்பித்தது.
“என்ன?,நாளைக்கு ரிசல்ட்டை நினைச்சு பயந்துகிட்ருக்கியா?!”என்றது.
“ஆ..மாம்..அதிருக்கட்டும்..முதல்ல நீ யார்னு சொல்லு..என் ரூமுக்குள்ள என்ன பண்ணிகிட்ருக்க?” என்றேன்.
“நானா?நான்…உன்னோட நலம்விரும்பி,உனக்கு நல்லதுசெய்ய வந்துருக்கேன்..இந்த கதைகளிலெல்லாம்
வருமே..என்னதது?? ம்ம்!தேவதைகள்..அதுமாதிரி நான் ஒரு தேவதைன்னு நினைச்சிக்கோ!”
நான்,"அதெல்லாம் சரி..இப்போ எதுக்கு வந்திருக்கே?"
“அதான் சொன்னனே,உனக்கு ஒரு நல்லசெய்தி சொல்லன்னு.!நாளைக்கு வரப்போற ரிசல்ட்டுல நீ ஆயிரம் மார்க் எடுக்கமாட்டே!!"
“அய்யயோ!இதுதான் நல்லசெய்தியா?”என்றேன்,கொஞ்சம் பதட்டமும்,கோபமுமாய்.
"பயப்படாதே..ஆயிரத்துக்கு கொஞ்சம் கம்மியா தொள்ளாயிரத்து என்பது மார்க் எடுப்பே..உங்க அப்பா ஆசைப்பட்ட மாதிரியே எஞ்சினியரிங் காலேஜ்ல சீட் கிடைச்சிரும்"என்றது.
“நெசமாத்தான் சொல்றியா?”என கேட்க எத்தனிப்பதற்குள்ளாக அலாரம் அடிக்க.தூக்கம் களைந்தவனாய் வாரி சுருட்டி எழுந்துவிட்டேன்.

கனவில் நடந்ததையெல்லாம் நினைத்து பார்க்க..பார்க்க ஒரே குழப்பம்.பொழுதும் விடிந்துவிட்டது. சிலபல மணிநேர காத்திருப்புகளுக்குப்பின் ரிசல்ட்டை பார்த்த எனக்கு அதிர்ச்சியும்,ஆச்சர்யமும் சேர்ந்தே கிடைத்தது.
கனவில் அந்த பெண்(?!) சொன்னதுபோலவே தொள்ளாயிரத்து என்பது மதிப்பெண்கள் எடுத்திருந்தேன்.மார்க் குறைந்தது கொஞ்சம் வருத்தமாய் இருந்தாலும்,இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதால் என்னைநானே தேற்றிக்கொண்டேன்.நல்லவேளை அப்பாவும் அதிகம் திட்டவில்லை..பின் ஒரு நல்ல எஞ்சினியரிங் காலேஜில் இடமும் கிடைத்தது.
அதன்பின் அந்த கனவைப்பற்றி மறந்தே போயிருந்தேன்..அதைப்பற்றி யாரிடமும் சொல்லிக்கொள்ளவும் இல்லை.ஏனெனில் என்னாலேயே அதை முழுமையாய் நம்பமுடியவில்லை.

ஆனால் அதெல்லாம் அந்த சம்பவம் நடக்கும்வரை தான்..
கல்லூரியில் சேர்ந்தஉடனேயே என்வகுப்பில் படிக்கும் ரம்யா என்ற பெண்ணை காதலிக்க ஆரம்பித்திருந்தேன்.!ரம்யா எந்தவித அலட்டலுமில்லாத அழகுப்பெண்.அதென்னவோ தெரியவில்லை..நாம் பார்க்கும் பெண்களைத்தான் மற்றவர்களும் பார்ப்பார்கள்.அதே நிலைதான் ரம்யா விசயத்திலும்..எனக்கு தெரிந்தே ரம்யாவை நான்கு பேர் காதலித்தனர்.என் சீனியர்கள் உட்பட..!ஆனால் ரம்யாவின் கடைக்கண் பார்வைப்படும் பாக்கியம் யாருக்கும் கிடைத்தபாடில்லை.
என் காதலை சொன்னால் ஏற்றுகொள்வாளா..மாட்டாளா? எனக்குழம்பி தவித்த நாட்கள் அவை.

அப்போதுதான்,ஒரு இரவில் மீண்டும் அதே கனவு வந்தது.அதே கதவைதட்டும் சத்தம்..அதே பெண்முகம்.சென்றமுறைப் போலவே இப்போதும், அவளே பேசினாள்.
"நாளை காலை ரம்யாவிடம் உன் காதலைச்சொல்.அவள் ஏற்றுக்கொள்வாள்" என சொல்ல..கனவுக்கலைந்து விழித்துக்கொண்டேன்.
ரம்யாவிடம் இதைப்பற்றி பேசுவதற்கு தயக்கமாய் இருந்தாலும்,அந்த கனவை பரிசோதித்து பார்த்து விடவேண்டும் என்ற ஆவல் மேலோங்கவே,ரம்யாவிடம் மறுநாள் கொஞ்சம் பயத்தோடு என் காதலை சொன்னேன்.எந்த அதிசயத்தையும் எளிதில் நம்பமுடிவதில்லை..நமக்கு நடக்கும் வரையிலும்!ஆம்,ரம்யாவும் என்னை காதலிப்பதாகவும்,அவளே என்னிடம் சொல்வதற்க்குள் நான் முந்திக்கொண்டேன் என்று சொல்லி சந்தோசப்பட்டாள்.!பிறகென்ன,ஒரு ஆறுமாத காலம் என் வாழ்க்கையில் வசந்தக்காலம் தான்! 

எல்லாம் நன்றாய் போய்க்கொண்டிருந்த வேளையில் தான்,மூன்றாம்முறையாக அந்தக்கனவு வந்தது.கனவில் அந்தப்பெண்,
 "ரம்யா உனக்கு சரிப்பட்டு வரமாட்டாள்.அவளுடனான காதலை மறந்துவிடுவது தான் உனக்கு நல்லது.அவளைவிட நல்லப்பெண் உனக்கு வாழ்க்கைதுணையாய் கிடைப்பாள்"என்று இடியை தலையில் இறக்கி சென்றது.
முதல்முறையாக இந்தக்கனவு எனக்கு,ஏன் வருகிறது?என கோபம்கோபமாய் வந்தது.இரண்டு நாட்கள் சென்றிருக்கும்.ரம்யா என்னிடம் வந்து,தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்திருப்பதாகவும்,படிப்பு முடிந்த்ததும் அவரையே கல்யாணம் செய்ய சொல்லி அவளின் தந்தை வற்புறுத்துவதாகவும் சொன்னாள்.எனக்கு அதிர்ச்சி தான்..ஆனாலும் எதிர்ப்பார்த்திருந்த அதிர்ச்சி என்பதால் அதை தாங்கிக்கொள்ள முடிந்தது. 
அந்த நிமிடம் முதல்,நிச்சயம் இந்தக்கனவு விஷயம் சாதாரணமானது இல்லையென்பதை மட்டும் நம்ப தொடங்கியிருந்தேன்.
அதற்குபின் அந்த கனவு வரும் இரவுகளுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன்.முதல்முறை நான் வேலைக்காக இன்டர்வியு செல்லும்போது..
அப்பாவிற்க்கு உடம்பு சரியில்லாமால் போனபோது என, எப்போதெல்லாம் நான் குழப்பத்தில் இருக்கிறேனோ அல்லது முடிவுகள் எடுக்கமுடியாமல் தடுமாறி கொண்டிருக்கிறேனோ அப்போதெல்லாம் என் குழப்பத்தை தீர்ப்பதுபோல் அந்தக்கனவு வருவதும் வாடிக்கையாயிருந்தது.

வாழ்க்கையில் எல்லாம் சரியாய் போய்க்கொண்டிருப்பதாய் தோன்றிய நேரத்தில், திடீரென ஒரு பிரச்சனை.வழக்கமாய் பிரச்சனைகளுக்கு தீர்வாய் வரும் அந்த கனவுதான் ,இந்தமுறை பிரச்சனைக்கே காரணமாயிருந்தது!
நேற்று இரவும் அந்தக்கனவு வந்தது.ஆனால் வழக்கமாய் அந்தப்பெண்ணின் முகத்தில் இருக்கும் புன்னகை மறைந்து முகம் இறுகியிருந்தது.அது சொன்ன செய்தியும் கூட அப்படியொரு இறுக்கமான செய்திதான்.
அப்படி என்னதான் சொல்லியது என கேட்குறீர்களா?
"நீ இன்னும் இரண்டு நாட்கள் தான் உயிர் வாழப்போற!அதுக்குள்ளே நீ என்னவெல்லாம் செய்யனும்னு ஆசைப்படுறியோ எல்லாத்தையும் செஞ்சி முடிச்சிக்கோ"என்றது.
“என்னது நான் சாகப்போறேனா?!இன்னும் இரண்டு நாட்களிலேயா?!என்ன சொல்ற நீ..எப்படி?!” என்று முடிப்பதற்குள் உடம்பில் வியர்வை மழையாய் பெருக்கெடுக்க,தூக்கி வாரிப்போட்டு முழிப்பு வந்துவிட்டது.
இதோ இன்றோடு ஒருநாள் முடியப்போகிறது.இன்னும் ஓரு இரவே மிச்சமிருக்கிறது.இன்று இரவும் அந்த கனவு வரும்.இன்றாவது எப்படி சாகப்போகிறேன் என பதட்டப்படாமல் அவளிடம் கேட்கவேண்டும், என ஏதேதோ நினைத்தவாறே தூங்கிபோனேன்.
 
"டக்..டக்.டக்..” கதவை தட்டும் சத்தம் கேட்டது.ஆனால் இன்று வழக்கத்தை விட வேகமாய்...மிக வேகமாய்...தட்டிக்கொண்டே இருக்கிறது..
ஆர்வமிகுதியால் நானே தூக்ககலக்கத்தோடு சென்று கதவை திறேந்தேன்.
வெளியே….

"டேய்..விடிஞ்சு எவ்ளோ நேரம் ஆச்சு?!சீக்கிரமாய் போய் பால் வாங்கிட்டு வாடா.அப்பா ரொம்பநேரமா காபிக்காக காத்துகிட்ருக்கார்,அப்புறம் டிப்போ மூடிற போறாங்க"என்று புலம்பியபடி அம்மா நின்றுக்கொண்டிருந்தாள்!!
கண்களை கசக்கியபடியே அம்மாவை பார்த்தேன்.எல்லாம் மெல்லமாய் புரிய ஆரம்பித்தது.
ச்சே..அப்போ இவ்வளவு நேரம் கண்டேதேல்லாம் கனவா?!.
--------
(அதீதம்.காம் ஜூன் இதழில் வெளியானது.)

4 கருத்துகள்: