சனி, 17 மே, 2014

என்ன செய்யப்போகிறீர்கள் ஸ்டாலின்?!

 இந்தியமக்கள் மட்டுமல்லாது உலகநாடுகள் அனைத்தும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த பதினாறாவது மக்களவைக்கான தேர்தல் முடிவுகள் ஒருவழியாய் வெளியாகிவிட்டன.தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் என எல்லா ஊடகங்களும் தங்களுக்கு யார் வரவேண்டும் என நினைத்தார்களோஅவர்களே பெரும்பான்மை பெறுவார்கள் என புள்ளி விவரத்தோடு கூவின.இந்த தேர்தல் முடிவகளை பொறுத்தவரை பி.ஜே.பி பெரும்பான்மை இடங்களை பெற்று மோடி பிரதமர் ஆவார் என்பது அனைவரும் எதிர்ப்பார்த்தது தான்.அதேபோல் இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸுக்கு மரண அடி கிடைக்கும் என்பதும் அனைவரும் எதிர்ப்பார்த்த ஒன்று தான்.ஆனால் யாருமே எதிர்ப்பர்க்காத ஒன்று தமிழக தேர்தல் முடிவுகள்!தி.மு.க எதிர்ப்பு ஊடங்கள் கூட ஐந்து சீட்டுகள் கிடைக்கும் என்று சொல்லியிருந்த நிலையில்,ஒரு சீட்டு கூட அக்கட்சியால் பெறமுடியவில்லை.அதேபோல அதிமுக.விற்கு இத்தனை பெரிய வெற்றி கிடைக்கும் என அந்த கட்சியை சேர்ந்தவர்களே நினைத்து பார்த்திருக்கமாட்டார்கள்.

தி.மு.க வை பொறுத்தவரை இந்த தேர்தலில் பல சவால்களை அவர்கள் சந்திக்கவேண்டியிருந்து.சென்ற சட்டசபைதேர்தலில் விழுந்த மரண அடியின் தழும்புகள் இன்னும் மிச்சமிருக்க,அந்த அடியிலிருந்து மீண்டே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திலிருந்து..கட்சியின் ஆணிவேர் மு.க.வின் முதுமை வரை பல சவால்கள்.இதில் மு.க.வின் மூத்த மகனின் பங்காளி தகராறு வேறு.ஆனால் எல்லோரும் சொல்வதை போல் அழகிரியை அத்தனை பலம் பொருந்தியவராய் நான் நினைக்கவில்லை.இன்னும் சொல்லப்போனால் அவர் தி.மு.க.வில் இருந்திருந்தாலும் இந்த தேர்தல் முடிவுகளில் பெரியதாய் எந்த மாற்றமும் இருந்திருக்காது!

இத்தனை பிரச்சனைகளையும் மீறி தி.மு.க வின் மீது ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டது என்றால் அதற்கு முழுக்காரணமும் ஸ்டாலின் தான்.நீண்ட காலமாகவே கட்சியின் தலைமையில்,அணுகுமுறையில் மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்ப்பார்த்திருந்தனர்.அந்த மாற்றம் இப்போதுதான் சாத்தியப்பட்டிருக்கிறது.காலம் தாழ்த்து நிகழ்த்தப்பட்ட மாற்றம் என்றாலும் ஸ்டாலின் பொறுப்பிற்கு வந்தபின் தான் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படிருகின்றன.காங்கிரஸை கழட்டி விட்டதிலிருந்து வாரிசுகளுக்கு சீட் கிடையாது என்ற சொன்னவரை அனைத்தும் பாராட்டப்படவேண்டிய திடமான முடிவுகள்.

சூறாவளி சுற்றுப்பயணம்,ஊடக வழி பிரச்சாரம் என அவர் கடமையை சரியாகவே செய்திருக்கிறார்.இவை அனைத்தையும் மீறி மக்களுக்கு இன்னும் தி.மு.க மீதான கோபம் தணியவில்லை என்பது தான் நிதர்சனம்.தேர்தல் முடிவுகளுக்கு பின் பத்திரிக்கையாளர்களிடம் "மக்களுக்கு இந்த முடிவுகள் சந்தோசம் என்றால் எங்கள்ளுக்கும் சந்தோசம் தான்" என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.அரசியலுக்கு அப்பாற்பட்டு ஸ்டாலினை அவரது சில நற்பண்புகளுக்காகவே பிடிக்கும்.இத்தனை வருட அரசியல் பயணத்தில் தோல்விகள் இல்லாது எந்த வெற்றியும் கைகூடாது என்பதை நன்றாகவே புரிந்தி வைத்திருப்பார்.இன்னுமும் தி.மு.க வின் பழைய வாக்கு வங்கி அப்படியேத்தான் இருக்கிறது.பிரச்சனை என்னவென்றால் அந்த வாக்குவங்கி விரிவடையாமல் அப்படியே இருப்பதுதான்.

இப்போதைய சூழலில் தி.மு.க.தொண்டர்களுக்கு தேவை இந்த தோல்விகளை மறந்துவிட்டு மீண்டும் களப்பணியாற்ற கூடிய உத்வேகமும்,உற்சாகமும்தான்.இன்றைய நிலையில் ஸ்டாலினை தவிர வேறு யாராலும் அதை தரமுடியாது.ஸ்டாலின் அவர்களே ஒரு மிகப்பெரிய இயக்கத்தின் வாழ்வும்,சாவும் தற்போது உங்கள் கைகளில்.இந்த பதிவிற்கு 'என்ன செய்யப்போகிறீர்கள் ஸ்டாலின்?' என கேள்விகுறியாய்தான் தலைப்பு வைத்திருக்கிறேன்.ஆனால் இதுபோன்ற பல கேள்விக்குறிகளை நீங்கள் ஆச்சர்யகுறியாய் மாற்றி காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.இனி உங்கள் தந்தையிடமிருந்து எதை கற்றுக்கொள்ளவேண்டும்,எதை கற்றுகொள்ளகூடாது என்பதை உணர்ந்துகொள்வதில் தான் இருக்கிறது உங்கள் வெற்றியின் சூட்சமம்!

மாண்புமிகு தமிழகமுதல்வருக்கு: பத்து மணிநேர மின்வெட்டு,பஸ் டிக்கெட் உயர்வு,வில்வாசி ஏற்றம் இன்னும் பல பல இருந்தாலும் மக்கள் இன்னுமும் உங்கள் மீது நம்பிக்கை வைத்து ஒரு வரலாற்று வெற்றியை உங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள்.வெற்றி பெற்றதும் சட்டசபை,அண்ணா நூலகம் போல எதையாவது ஒன்றை மாற்றியே ஆகவேண்டும் என அடம்பிடிக்காதீர்கள்.மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்ற தத்துவம் தெரியும்தானே?!

பொதுமக்களுக்கு: இனி அடுத்த எலெக்சன் வரை நம்மை யாரும் கண்டுக்கமாட்டாங்க.புள்ளைகுட்டிகளை போய் படிக்க வைப்போம் வாங்க:)

4 கருத்துகள்: